Multiple Page/Post

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில் !

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன.

மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு இணங்கியுள்ளது. இதனால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டு, பின்னர் நிரந்தரக் கட்டிடத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம் – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை !

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.

 

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குங்கள் – அமெரிக்காவில் செலன்ஷ்கி !

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் தலைநகர் வொஷிங்டன் DC-இல் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளார்.

 

61 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி முயற்சிகளை அவர் இந்த சந்திப்புகளின் போது மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

 

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய தவறான செயற்பாடுகளை காரணங்காட்டி அமெரிக்க காங்கிரஸை சமரசப்படுத்தினாலேயே இந்த உதவித் தொகையைப் பெற முடியுமென ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

“விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.” – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. இதில் தலையிடுவது, குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையுமே ஏற்படுத்தும். மேலும், நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.

முன்னதாக தீர்ப்பு வெளியாவதை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இதனை அரசுத் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

“ஜனநாயகத்துக்கான உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே.” – டொனால்ட் டிரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என தெரிவிக்கப்படுவதை   முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என  தெரிவிக்கப்படுவதை வதந்தி ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் என வர்ணித்துள்ளார்.

நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை  நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவும்  டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்காலத்தின் முதல்நாளிற்கு பின்னர் நான் சர்வாதிகாரியாக விளங்கமாட்டேன் என  டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்துள்ளமை  கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நா – வீட்டோவை பயன்படுத்தி நிராகரித்த அமெரிக்கா !

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தாக்குதலானது 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், 1971ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய குட்டெரெஸ், காசா அதன் உடையும் புள்ளியில் உள்ளது என கவுன்சிலை எச்சரித்தார்.  அத்துடன் பல லட்சம் அவநம்பிக்கையான மக்கள் மிகவும் மோசமான பட்டினியின் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இவை பொது அமைதியை பாதிக்கும், மக்களுக்கு எகிப்தை நோக்கி இடம்பெயரும் அழுத்தத்தை உருவாக்கும் என ஐ.நா நம்புவதாக தெரிவித்தார்.

 

இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. ஹாமஸ் படையினரிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை  அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் ஈழப் போராட்டமும் – கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்!

நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.

நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.

பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.

வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.

காசாவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இஸ்ரேலிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் !

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை,எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரைமனித உரிமை கண்காணிப்பாளர் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைதுசெய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நரகாசுரன்களைக் கொண்டாடும் பிரித்தானிய பிரதமர் சுனாக்! கொன்சவேடிவ் நாஸ்திக் கட்சியாகவும் நாஸிக் கட்சியாகவும் மாறுகிறது!! அதன் குடிவரவு அமைச்சர் பதவி விலகினார்!!!

டிசம்பர் 6 சில மணி நேரங்களுக்கு முன் பிரித்தானிய ஆளும் கட்சியின் குடிவரவு அமைச்சர் ரொபேட் ஜென்ரிக் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். ‘அகதிகளை ருவான்டாவுக்கு விமானம் ஏற்றுவதே தனது கனவு’ என்று குறிப்பிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் கடந்த சில வாரங்களுக்கு முன் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். 1968இல் கொன்சவேடிவ் கட்சியின்பா உ (Enoch Powell) எனொச் பவலின் மிகப் பிரபல்யமான “Rivers of Blood இரத்த ஆறுகள்” உரைக்குப் பின் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை நவீன பிரித்தானியாவில் கக்கியவர் ஒரு முன்னாள் குடிவரவாளரான சுவலா பிரவர்மன். எனொச் பவலின் இனவாதக் கருத்துக்கள் அலைமோதிய காலத்தில் 1960க்களில் சுவலா பிரவர்மன்னின் பெற்றோர் கென்யா – மொரிஸியஸில் இருந்து புலம்பெயர்ந்தனர். இவருடைய பெற்றோரைப் போன்ற குடிவரவாளர்களால் தான் பிரித்தானியாவுக்கு பொருளாதார நெருக்கடி, பாடசாலைகளில் நெருக்கடி, மருத்துவமனைகளில் நெருக்கடி என எனொச் பவல் தன்னுடைய இனவாத வக்கிரத்தை கக்கினார். இப்போது அக்குடிவரவாளர்களுக்கு பிள்ளையாகப் பிறந்த சுவலா பிரவர்மன் அகதிகளை மட்டும் ஏளனம் செய்யவில்லை வறுமைக் கோட்டில் வாழ்பவர்களையும் வீடற்றவர்களையும் கூட அது அவர்களின் வாழ்க்கைத் தெரிவு என்று நளினம் செய்கின்றார்.

இனவாதமும் ஸ்லாமோபோபியாவும் கொன்சவேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியின் பலமாகி உள்ளது. அதனால் அந்த வாக்கு வங்கியை இலக்கு வைத்து சுவலா பிரவர்மன் காய்களை நகர்த்துகிறார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய மற்றுமொரு குடிவரவுத் தம்பதிகளின் புத்திரனான ரிசி சுனாக் மண் கவ்வுவார் என்று கணக்குப் பண்ணியுள்ள சுவலா பிரவர்மன் ருவான்டாக் கனவை வைத்துக்கொண்டு ரிசி சுனாக்கை பந்தாடுகின்றார்.

‘ருவான்டா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடு அல்ல’ என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் நவம்பர் 16 திகதி வழங்கிய தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது. இருந்தாலும் கொன்சவேடிவ் கட்சியின் இனவாத வாக்கு வங்கியைப் பாதுகாப்பதில் சுவலா பிரவர்மன்னும் ரிசி சுனாக்கும் தங்களில் யார் பெரும் இனவாதி என்பதை நிரூபிப்பதில் போட்டி போடுகின்றனர். ‘ரிசி சுனாக் நீர் வெறும் அலம்பல் பேர்வழி உம்மால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்ற பாணியில் சுவலா பிரவர்மன் அறிக்கைகள் விடுகின்றார். ‘நான் சொன்னால் சொன்னது தான் ஆணியைப் புடுங்குகிறேன். ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புகிறேன்’ என்று சவால் விட்டுள்ளார் ரிசி சுனாக். அதுமட்டுமல்ல அவசர அவசரமாக புதிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்ளியை ருவாண்டாவுக்கு அனுப்பி புதிய உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டு வந்து ‘ருவான்டா இப்போது அகதிகளுக்கு பாதுகாப்பானதாக மாறிவிட்டது’ என்று சொல்கின்றது கொன்சவேடிவ் காட்சி. நாங்கள் ‘வெள்ளை’ என்று சொன்னால் அது ‘வெள்ளை’ என்று நிரூபிப்போம் என்கிறது கொன்சவேடிவ்கட்சி. ஆனால் உச்சநீதிமன்றமோ அது நிச்சயமாக ‘கறுப்பு’ என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கொன்சவேடிவ்கட்சி சொல்வதை கேட்டு தங்களை ‘கோல்’ அடிக்க விடாவிட்டால் ‘கோல்ட் போஸ்றை’ தாங்கள் மாற்றத் தயார் என இன்று மிரட்டினர். அதாவது டிசம்பர் 6 அவசர ருவாண்டா சட்டமுலம் ஒன்றை அமூலாக்க முயற்சித்தனர். கொன்சவேடிவ் இனவாதப் பிரிவின் இச்சட்டமூலத்தை கொண்டு செல்ல விரும்பாத ரொபேட் ஜென்ரிக் ‘உந்த ஆட்டத்துக்கு நான் தயாரில்லை’ என்று தன்னுடைய அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். இன்று கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பை வெட்டி ஓடும் ஒரு தந்திரோபாயம் என்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் ரொபேட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ‘Conservetive for Tamils – கொன்சவேடிவ் போர் ரமிளஸ்’ தற்போதைய நிலையை இட்டு மௌனமாக இருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் என முன்னாள் கிழக்கு லண்டன் கவுன்சிலர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கொன்சவேடிவ் கட்சி இந்தக் குடிவரவுத் தலைமைகளின் வழிநடத்தலில் மிகத் தீவிர இனவாதக் கட்சியாக மாறிவருகின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகளிலும் பார்க்க மிகத் தீவிரமான இனவாதத்தை ஆழமான உள்நோக்கத்தோடும் நீண்டகாலத் திட்டமிடலில் இக்கட்சி மேற்கொண்டுவருகின்றது என்ற அச்சம் சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியக் கட்சிகள் அமெரிக்க அரசோடு இணைந்து உலகின் பல பாகங்களிலும் தங்கள் நாடுகளின் நலனுக்காகவும் ஆட்சியாளர்களின் சொந்த நலனுக்காகவும் வாக்கு வங்கிகளைத் தக்க வைப்பதற்காக ஆக்கிரமிப்புகளைச் செய்து அந்நாடுகளைச் சீரழித்தனர். அந்த நாடுகளிலிருந்தே இங்கு பெரும்பாலான அகதிகள் வருகின்றனர். இப்போது அவர்களை ஐரோப்பாவிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு துருக்கி, ருனிசியா, ருவாண்டா போன்ற நாடுகளுக்கு பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்குகின்றனர். சில அரசுகள் மிக மோசமான மனித உரிமைகளை மீறி அகதிகளாக வருபவர்களை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் ஏன் கொலையும் செய்து அவர்கள் ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்கின்றனர். இவை அனைத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது இதற்கும் அப்பால் சென்று மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கைக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோளோடு தோள் நிற்கின்றனர். ஆம் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு இந்நாடுகள் முழமையான ஆதரவை வழங்குவதோடு ஆயுதமும் வழங்குகின்றனர். தற்போது இந்த யுத்தத்தை எப்படியும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குர்ரரஸ் பாதுகாப்பு செயலக நாடுகளின் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம் அரபு நாடுகளின் குழுவொன்றும் அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் பாலஸ்தீன மக்களின்இன அழிப்பில் தங்களை பங்காளிகளாக வைத்திருக்கப் போகின்றார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அண்மைய தீபாவளிப் பண்டிகையில் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் தீபம் ஏற்றிய சுனாக் தம்பதிகள் நிஜஉலகில் நரகாசுரர்களைக் கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் அல்ல. சுனாக் தலைமையிலான கொன்சவேடிவ் கட்சி தற்போது அருவருக்கத் தக்க நாஸ்திக் கட்சியாகவும் நாஸிஸக் கட்சியாகவும் மாறிவருகின்றது. அன்று ஒரு Enoch Powell இன்றோ பலர். “Rivers of Blood இரத்த ஆறுகள்”. நாற்றம் தாங்க முடியவில்லை.