Multiple Page/Post

வடக்கில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்யாதவர்கள் கூட வைத்தியர்களாக பணியாற்றுகிறார்கள் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை.

வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.  அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை.  அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.

உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் தமிழ் தலைமைகளிடம் இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறிவருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

 

இது தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது என ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு !

பங்களாதேஷில் இடஒதுக்கீடு சீர்திருத்தத்தை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போராட்ட வன்முறை தொடர்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது உதவியாளர்கள் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டாக்காவில் மேலும் நான்கு கொலை வழக்குகள் ஹசீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதல் வழக்கில், ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின்போது ஜாத்ரபாரி பகுதியில் சலீம் என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாக ஹசீனா மற்றும் 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, பெட்ரோல் நிலையப் பணியாளர் மன்சூர் மியா, டெமரா நகரின் மிராஸ் ஹஜுசைன், மிர்புர் நகரின் நஹிதுல் இஸ்லாம் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் ஹசீனா மற்றும் பலர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனா்.

இதற்கு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய மாணவர்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

அந்தப் போராட்டத்தைக் கட்டுபடுத்த இராணுவம் மறுத்துவிட்டது. இதனால் பாதுகாப்பு கருதி தனது பதவியை இராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

மெட்டாவுக்கு பைடன் அரசாங்கம் கோவிட் 19 பற்றிய தகவல்களை கட்டுப்படுத்துவது தொடங்கி பல விடயங்களில் தொடர்ந்து அழுத்தம் தந்தது – மெட்டா நிறுவுனர் மார்க் பகீர்!

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு பைடன் அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் குற்றம்சாட்டியுள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸுக்கு மார்க் ஸக்கர்பர்க் எழுதியுள்ள கடிதத்தில், மெட்டா தளங்களில் உள்ள உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய பைடன் அரசு அழுத்தம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக 2021-ல் கோவிட் 19 குறித்த கேலி சித்திரங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய பைடன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மெட்டாவுக்கு அழுத்தம் அளித்ததாகவும், அழுத்தம் அளிக்கப்பட்டபோதும் உள்ளடக்க விவரங்களில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் மார்க் ஸக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

 

நவம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடுநிலையுடன் இருக்கவே தங்கள் தரப்பு விரும்புவதாகவும் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ – தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் !

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது.

 

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கைப் பிரகடனத்தில் சமத்துவம், ஒப்புரவு, சட்டவாட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயக பண்புகள், பொருளாதார ஜனநாயகம், மக்கள் சார்ந்த ஆட்சி முறை, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சமூக நீதி, விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

நாட்டில் ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதற்கான கொள்கையொன்றை வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

நாட்டிற்கு தேவையான அனைத்து மக்களுக்கும் சமத்துவமான புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றையும் கொண்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 25 அமைச்சர்கள் மாத்திரமே பதவி வகிப்பார்கள் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வாகனங்களுக்கான உரிமம் இரத்து செய்யப்படும் என கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகளுக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

படிப்படியாக நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் தாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொள்கைப் பிரகடன வௌியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய அனுர குமார திசாநாயக்க, சுற்றுலாத்துறை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

பொருளாதார கொள்கை மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினரே அதிகமாக பேசியதாகவும் அவ்வாறானவர்களின் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கு பதிலடியாக கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அனுர குமார திசாநாயக்க, மீண்டும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

 

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

 

சமத்துவத்தை ஏற்படுத்துவதில் அரசியலே முக்கிய பங்கு வகிப்பதாக அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்கு வௌிநாட்டு கொள்கை அவசியமாகும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டம் !

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணை இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

சட்டமூலத்தை தயாரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட கருத்தாடலை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் மேலும் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

குருணாகல் – கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம்.

 

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

 

பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன்.

 

இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார்.

வெளியானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாற்றுக் கொள்கை மையத்தின் புதிய ஆய்வு முடிவுகள்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் களம் கட்சி தாவல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகள் என சூடுபிடித்துவரும் நிலையில், தேர்தலில் யார் வெல்வார் என்ற கருத்து கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த அடிப்படையில், மாற்றுக் கொள்கை மையம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அனுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரையும் கருத்திற்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

“உங்கள் குடும்பத்தின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்ய யார் மிகவும் பொருத்தமானவர் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ” என்பதை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில்;

 

28.8 வீதமான மக்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ள அதேவேளை, 24.3 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளதுடன்,19.3 வீதமான மக்கள் சஜித் பிரேமதாசவை மிகவும் பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்துள்ளதாக மாற்றுக் கொள்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு 15.5 வீதமான மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், 12.1 வீதமான மக்கள் யாரை தெரிவு செய்வது என்பது தெரியாது என பதிலளித்துள்ளனர்.

 

இதேவேளை, சகோதர மொழி மக்களிடையே 24.1 வீதமானவர்கள் ரணில் எனவும் 33.1 வீதமானவர்கள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ளனர்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் – தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது .எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.

அந்த தீர்வை நோக்கிய பயணமாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஐனாதிபதி வேட்பாளராக தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

ஐனாதிபதியாக வருவதல்ல நோக்கம். இந்த தேர்தல் மூலம் எமக்கான தீர்வை பொற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாவிருக்கின்றோம் என்பதை காண்பிப்பதற்காக போட்டியிடுகின்றேன்.

எமது மக்கள் நேரகாலத்துடன் பெருவாரியாக சென்று வாக்களிப்பதன் ஊடாக எமது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும்.

தற்போது ஒரு சிலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிக் கொண்டிருக்கிறது . அவற்றை அவதானித்தால் தமிழர் பற்றியோ அவர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வுபற்றியோ எதுவும் இல்லை.

ஊழல், அபிவிருத்தி, ஒரே நாட்டுக்குள் தீர்வு, சமத்துவம் என்று கூறுகிறார்கள். சமத்துவம் என்றால் என்ன ? இந்த நாட்டில் தமிழன் ஐனாதிபதியாக வரமுடியுமா இதுதான் இந்த நாட்டின் சமத்துவமாகும்.

இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் ஐனாதிபதியாக வருவது நோக்கமல்ல. ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை காண்பிப்பதே நோக்கமாகும். ஒற்றுமையின் பலம் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – 30 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறிய 1006 குற்றச்சாட்டுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை குறித்து 105 முறைப்பாடுகளும், 19 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.