Multiple Page/Post

“எமது அரசாங்கம் சர்வதேச சந்தைக்கு எரிபொருள் விற்பனை செய்யும்.”- அனுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகள் உள்ளன. ஒரு தொட்டியில் 10,000 மெட்ரிக் டன் சேமிக்க முடியும். தோராயமாக பத்து லட்சம் மெட்ரிக் டன் சேமிக்க முடியும்.

எண்ணெய் நமக்கு அதிகம். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி, எண்ணெயைச் சுத்திகரித்து, சேமித்து, அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து சந்தைக்கு அனுப்பலாம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடிய சர்வதேச நிறுவனமும், எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை புத்துயிர் அளிக்கும்..” என்றார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பேரணி !

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.

 

பேரணியின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி சென்றதுடன் , பேரணியின் முடிவில் , அக்கினி சாட்சியாக தமக்கான நீதி கிடைக்கும் வரையில் போராட்டங்களை தொடர்வோம் என உறுதி எடுத்தனர்.

 

பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது – இந்தியா

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

 

இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அவர்,

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படும் நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 

“உலகளாவிய ரீதியில் யுத்தம், வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் தமது குடும்பத்தினரை, அன்புக்குரியவர்களை பிரிந்த சகலரையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம்.

 

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருக்கின்றனர் என்று செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கக் கூட்டிணைவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் இந்த எண்ணிக்கை காணாமல் ஆக்கப்படல்களின் உண்மை நிலைவரத்தையும், தீவிரத்தன்மையையும் துல்லியமாகப் புலப்படுத்தவில்லை.

 

ஒவ்வொரு வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தின் பின்னாலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்துகொள்ள முடியாததனால் உறவுகளுக்கு ஏற்படும் அளவற்ற துயரம் மறைந்திருக்கின்றது.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இத்தகையதோர் பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதும், அதற்குரிய தீர்வை வழங்குவதும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும்.

 

மாறாக இப்போதும் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் சகல சமூகத்தைச் சேர்ந்தவர்களினதும் துன்பியல் அனுபவங்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்க மறுப்பதானது அவர்கள் மத்தியில் அதீத கோபம் தூண்டப்படுவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவு ஏற்படுவதற்குமே வழிகோலும்.

 

எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிடின், தனிநபர்களால் மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்தாலும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது.

 

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப்பிரகடனங்கள் சுருக்கமாகவும் – விளக்கமாகவும் !

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப்பிரகடனங்கள் சுருக்கமாகவும் – விளக்கமாகவும் !

“யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்விக்கான கேந்திர நிலையமாக மாற்றப்படும்.” – ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் – வெளியானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் !

https://www.thesamnet.co.uk/?p=106718

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

https://www.thesamnet.co.uk/?p=106715

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் – ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ – தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனுர குமார திசாநாயக்க!

https://www.thesamnet.co.uk/?p=106690

 

“யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்விக்கான கேந்திர நிலையமாக மாற்றப்படும்.” – ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் – வெளியானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் !

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.

 

பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000 பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

 

‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

‘மக்கள் பிரிவு’ என்ற புதிய எண்ணக்கருவை அறிமுகம் செய்து, அதை பொருளாதாரத்தின் வலுவான பகுதியாக மாற்ற, ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும்.

 

அத்துடன், ‘தேசிய செல்வ நிதியம்’ (National Wealth Fund)” ஸ்தாபித்தல் மற்றும் கூட்டுறவுத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்றும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை ஆகியவற்றில் அங்கத்துவம் பெறுவதற்கு பலமான தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், அந்த நிதியத்தை அரசாங்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதை உச்ச அளவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நெற் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் அல்லது இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடப்படுவதோடு, போகத்திற்கு போகம் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த, தற்போதுள்ள தடைகள் அனைத்தும் நீங்கப்படுவதோடு, முதலீட்டை ஊக்குவிக்க புதிய பொருளாதார ஆணைக்குழு, நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம் அமைக்கப்படும்.

 

பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் 2040ஆம் ஆண்டு தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்படும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

 

யாழ் நதி திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதாகவும், பூநகரியை வலுசக்தி கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதோடு, யாழ்ப்பாணத்தை தொழில்நுட்பக் கல்விக்கான மத்தியஸ்தானமாக மேம்படுத்துவதாகவும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.

 

இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும்,6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாயகத்தில் சதுரங்க ஆட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் கிளிநொச்சி மண் !

தாயகத்தில் சதுரங்க ஆட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் கிளிநொச்சி மண் – சதுரங்க பயிற்றுவிப்பாளர் டிசாந்தன் என்பவருடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.

 

முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

 

போதைப்பொருள் விற்பனை செய்யும் இடத்தில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது !

போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடொன்றில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்னை பொலிஸார் தெரிவித்தனர்.

 

வெலிப்பன்னை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெலிப்பன்னை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மத்துகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரும் ஐஸ் போதைப்பொருளைப் பாவனை செய்வதற்காகக் குறித்த வீட்டில் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

சந்தேக நபர்கள் மூவரும் வைத்திய பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்த சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவரால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

 

நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனித குலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

 

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை தேடி கிடைக்காத நிலையில் 2500 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு ஆயத்தங்களை செய்துள்ளனர்.

 

இப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு வடகிழக்கு வாழ் அனைவரும் அப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது.

 

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிற்கும் பிரதான வேட்பாளர்களும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவு தெரிவித்தவர்களே.அத்தோடு தமது ஆதரவாளர்களை யுத்த வெற்றி கொண்டாட தூண்டியவர்களுமாவர்.

இவர்கள் இனி மேலும் தமிழர்களுக்கு யுத்தக்குற்றங்களுக்கான நீதியையோ, அரசியல் நீதியையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இவர்களின் உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் எல்லாம் மாயமானே. அதில் தமிழர்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை.

 

அதுமட்டுமல்ல இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பேரினவாத வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.பேரினவாத பௌத்த துறவிகளையே கவசமாகவும் கொண்டுள்ளனர்.இவர்களை எதிர்த்து தமிழர்களுக்கு எத்தகைய நீதியையும் உறுதி செய்யப்போவதுமில்லை.

 

இவர்கள் வடகிழக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தும் போதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் போதும் யுத்தக்குற்றங்கள் காணாமல், ஆக்கப்பட்டோர் விடயமாக எத்தகைய கருத்துகளையும் கூறுவதும் கிடையாது.

 

இவர்களுக்கு சாமரை வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதான வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கோ; பொது மேடைகளில் கருத்து கூறுவதற்கோ தயங்குவது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

 

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் என்பது வெறுமனே தமது உறவுகளைத் தேடும் போராட்டம் மட்டுமல்ல.அது தமிழர் தேசத்தின் அரசியல் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் தீர்வு கிட்டாத நிலையில் வேதனையில் மரணத்தை தழுவியுள்ளனர். இதனை சாதாரண மரணம் என நாம் கடந்து செல்ல முடியாது.நீதி நிலை நாட்டப்படாது நடத்தப்பட்ட திட்டமிட்ட மறைமுக கொலை எனவே அடையாளப்படுத்தல் வேண்டும்.

 

இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்தும் போராட்டம் மரணிக்காது உள்ளமைக்கு போராட்ட அமைப்புக்களின் மனத்திடமே காரணம் எனலாம்.அப்போராட்தினை உயிரோட்டமுள்ளதாக்க தமிழர் தேசமாக எம் பங்களிப்பை செய்து எம் குரலை சர்வதேசத்திற்கு கேட்கச் செய்வோம்.

மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தினம் தினம் சிந்தும் அறிந்தும் எமது உறவுகளும் மாவீரர்களுமாக இலட்சங்களை தாண்டியோர் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்றும் பேரினவாத அரசுக்கும் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்கும் கொடி பிடித்துக் கொண்டு திரியும் தமிழர் தேச அரசியல் நரிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் ஒன்று திரள்வோம்.

 

இந்தியா இன்றும் எமக்கான அரசியல் தீர்வாக 13 மே திணிக்க முயல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் யுத்தக் குற்றங்களுக்கு காணாமல் சர்வதேச விசாரணையோடு காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது அரசியல் நீதி என்பதை மையப்படுத்தி சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து சமஸ்ட்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் ஒன்று திரள்வோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.