Multiple Page/Post

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் !

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான உர மானியம்15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிப்பு !

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, இந்த மானியம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதியானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்காக களத்தில் இறங்கி பணி செய்ய எண்ணுகிறேன் – மனோ அணியிலிருந்து விலகினார் கே.டி. குருசுவாமி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர்,

 

“நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம்.

 

இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சியோடு இதுவரையில் வகித்து வந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து, இன்றோடு உடனடியாக விலகிக்கொள்கின்றேன்.

 

தங்களோடும், கட்சியோடும் பயணித்த 13 ஆண்டு கால அரசியல் பாதையில் என்னை வழி நடத்தியதற்கும் நெறிப்படுத்தியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கட்சியின் சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்துக்காக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவது முழுமையாக தடை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு !

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய;

“.. பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையின் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்.” என கூறிய பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை முழுமையாக நிறுத்துமாறும் உத்தரவு வழங்கியுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடிய விளக்கமறியலில் !

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

குறித்த வழக்கு இன்று (25) அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு குடியகல்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த மனு ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது – அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.

அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும்.

கடவுச்சீட்டினை வழங்குவதே இந்த அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,

பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன். எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது.

அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்” என மேலும் தொிவித்தாா்.

தென்லெபனான் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல் !

தென்லெபனான் மற்றும் பெக்காவின் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்லெபானின் நெபட்டியா நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்லெபானை சுற்றியுள்ள நகரங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் !

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு புறப்பட தடை விதிக்கப்பட்ட வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ..? – வெளியாகியுள்ள பின்னணி !

தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (24) அவரது பதிவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன.
அந்த செய்தியில், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும்போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும், தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.