நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 1,95,886பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,02,382 பேரில் 15,329பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 2,87,053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3,15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,18,425பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 2,04,888பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை )5,55,432வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,80,523பேர் வாக்களித்த அதேநேரம் 1,74909 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 3,80,523 பேரில் 17,599 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 3,62,924பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .





தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.
தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
