Multiple Page/Post

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

Wanni_IDPs_Barbed_Wire_Fenceநரகலோகத்திற்கு செல்பவர்களுக்கு யமனின் ஆட்சியில் என்னென்ன கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்ற கற்பனைக் கதைகள் பல பள்ளியில் படித்ததுண்டு. ஆனால் அந்தக் கதையிலும் கெட்டவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை என்றே கூறப்பட்டது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும். ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:

முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 – 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.

இப்போது இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. இன்னமும் புலிகளின் அரண்களாகப் பாவிக்கப்படும் அந்த மக்கள் தங்கள் உயிரைத் தாங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் புலிகள் மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.

வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.

இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. – வைத்தியர்:

”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.

மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.

ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”

மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். – வங்கி அலுவலர்:

”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”

பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. – உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:

”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.

குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 – 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.

இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”

சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. – மற்றுமொரு வைத்தியர்;

”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”

பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் – உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:

”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.

பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)

புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”

இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.

ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை

annan.jpgநியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஹெனா, சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து வவுனியாவுக்குச் சென்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை சேகரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யரான ஹெனா, தம்மை சட்டத்தரணியென கூறி, இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய 45 பக்க அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. 

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: எச்சரிக்கை

indo-lanka.jpgதாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஐ.சி.ஆர்.சிக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிப்பு

lttelogo.jpgசெஞ்சிலுவைச் சர்வதேச குழு தனக்குரிய பணிகளை எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மேற்கொள்வதற்கு  நாம் சகல பாதுகாப்பையும் அளிப்போம்  என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள  செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைமையலுவலகத்திற்கு  விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இணையத் தள தகவல் தெரிவித்தன. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண பாதுகாப்பளிப்போம். அதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம். செஞ்சிலுவைக் குழுவின் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை நாம் வழங்குவோம்  என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

india-elc-2009.jpg சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி; ஒன்பது பேர் காயம்:

gun00.jpgகொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜும்மா தொழுகையின் பின்னர், அந்த பிரதேசத்திற்கு வந்த முகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திற்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: ஐ.சி.ஆர்.சி

medical_lorry.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேதச மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவது மிகவும் கடினமான பிரச்சினையாக உள்ளது. “5000 தொன் உணவை அனுப்பவதற்கு அரசாங்கம் தயாராகவிருந்தாலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அதனை எடுத்துச் செல்ல ஒத்துழைக்கவில்லை” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பாகவே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் நிம்மதியும் சுதந்திரமும் கிடைக்கும் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும், நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினசெய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் கூறியதாவது, புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறு தல், இறப்பு, முதலானவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையை இம்முறையும் அரச அனுசரணையில் கெளரவத்துடனும், தூய்மையுடனும், கொண்டாடக் கிடைத்துள்ளதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன். மேலான பெளத்த போதனைகள் எமக்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் காட்டித்தருகின்றன. எமது அரச கொள்கைகளின் பிரகாரமும் அம் மதத்தை பெருமதித்தே செயலாற்றப்படுகின்றன.

இதற்குக் காரணம் சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும். நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

“ஜயங் வேறங் பசவதி-துக்கங் சேதி பறாஜினோ
உபசன்னோ சுகங் சேதி- ஹித்வா ஜய பறாஜயங்”

“வெற்றியடைபவர், தோல்வியடைவோரின் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்துகிறார். தோல்வியடைபவர் துக்கத்துடன் வாழ்கின்றார். நடுநிலையாக செயற்படும் சாந்த குணமுடையவர் வெற்றி தோல்வியில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வார்” என புனித பெளத்த போதனைகள் குறிப்பிடுகின்றன.

தீவிரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு குரோதமில்லாது எம்மை மனிதாபிமான அடிப்படையில் பலப்படுத்தியதும் புனித பெளத்தத்தைக் கடைப்பிடித்துவருவதனாலேயாகும். எம்மை குரோதத்துடன் நோக்கிய எதிரிகளை வெற்றிகொண்டதன் பின்னர் அன்புடன் செயலாற்றுவதற்கு வழிகாட்டியதும் எமது சமய ஒழுக்கநெறிகளாகும்.

தீவிரவாதத்தின் மூலம் இலட்சக்கணக்கான எமது சகோதர மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தானம் வழங்குவதும், நல்ல வார்த்தைகள் மூலம் ஆறுதல் கூறுவதும், சமத்துவமாகக் கவனிப்பதும் இந்த புனித வெசாக் காலத்தில் நன்மை பயக்கக்கூடிய வழிமுறை என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

புனித பெளத்த போதனைகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே எமது இலட்சியமாக இருக்கவேண்டும். இந்த வெசாக் காலம் அதற்கு வழிவகுக்கும். அதன் பிரகாரம் எமது வீரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்யவேண்டிய எதிரிகளாக இருப்பது, பேராசை, பாகுபாடு, மடமை என்பவையாகும். பெளத்த கொள்கையை மதிக்கும் நம் எல்லோரினதும் எதிரிகள் இவையேயாகும்.

நாம் வெற்றி கொள்ளவேண்டியது அன்பு, கருணை, காருண்ணியம் என்பவற்றையேயாகும். அப்போது தோல்வியும் இல்லை, பொறாமையும், குரோதமும் இல்லை. நாம் அந்த செம்மையான இலட்சியப் பாதையை நோக்கி அணி திரள்வோமாக. உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இவ்வாறு ஜனாதிபதி தனது வெசாக் தினத்தையொட்டிய ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் – பூநகரி வீதி புனரமைப்பு

sri-lankan-road.jpgமன்னார் – பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் 83 கிலோமீற்றர் நீளமான ஏ-32 பிரதான வீதியை மூவாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்தார்.

எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள முதற்கட்ட பணியின்போது 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்டதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எஞ்சியுள்ள வீதியை வெகுவிரைவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு இலகுவாக செல்லும் 280 மீற்றர் நீளத்தைக் கொண்ட சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கும் பயணிகள் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏ-32 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அதே சமயம், யாழ் – கண்டி- கொழும்பு ஏ-9 பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளும் 12 கிலோ மீற்றர் நீளமான சிலாவத்துறை- முருங்கன் வீதி, 40 கிலோ மீற்றர் நீளமான புத்தளம் – மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், மேலும் இந்தப் பகுதியிலுள்ள வீதிகளும், பாலங்களும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

செல்வி ஜெயலலிதாவின் தமிழீழம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு பிரித்தானியத் தமிழர் வரவேற்பு

british_tamil_forum.jpg இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிகமுக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது.