07

07

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” – நாடாளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் !

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர், மேலும் கூறுகையில்,

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தியாகி திலீபனை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன்  ஒசாமா பின்லேடனா..? அல்லது  2 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள்  பின்லேடன்களா..? எனக் கேட்க விரும்புகின்றோம்.

அடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தியாகி திலீபனைப் பற்றி மிகவும் கேவலமாக விமர்சிக்கின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். தியாகி திலீபன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு மாவீரன்; தியாகி. எனவே, கெஹலியவுக்கும் டக்ளஸுக்கும் திலீபனைப் பற்றி விமர்சிக்க அருகதை கிடையாது”என குறிப்பிட்டுள்ளார்

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 11 இளம்பெண்களுக்கு கொரோனாத்தொற்று உறுதி !

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.

குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் நேற்று மட்டும் 729 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

“முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” – இராணுவம் எச்சரிக்கை !

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று (06.10.2020) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.