2020
2020
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடப்படுகின்றது.
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்
ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த கல் இலங்கையில் மலை பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும்.
இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது. அந்த ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை காலமும் அந்த கல் பூஜிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஆவாஎலிய ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் வைத்து விசேட பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த கல் சீதாஎலிய சிதையம்மன் ஆலயத்திலும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழிபாடுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.
வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 90 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “வியட்நாமில் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம் ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் பலியாகி உள்ளனர். 34 பேர் மாயமாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் 600 மில்லி மீட்டர்வரை மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வியட்நாமில் அடுத்த வாரமும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகளை வியட்நாம் அரசு முடுக்கி விட்டுள்ளது.

அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 பந்துப்பரிமாற்ற முடிவில் பஞ்சாப் அணி 6 இலக்குகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ஆட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் இந்தத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்று உலகநாடுகள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
வழமையான ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தவருட தேர்தலில் கொரோனா பரவல் தொடர்பான விடயங்களே அமெரிக்க தேர்தலின் அதீத பேசு பொருளாகியுள்ள நிலையில் வேகமாக அமெரிக்காவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டமையே அவர் மீது முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொதுத்தேர்தலை நடாத்துவது என்பதே கடினமான ஒரு செயலாக காணப்பட்ட போதிலும் கூட அதை வெற்றிகரமாக நடாத்திய ஒரு சில நாடுகளில் கொரோனா பரவலை முறையாக கட்டுப்படுத்திய தலைவர்களை மீள மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளமையை காணமுடிகின்றது. இலங்கை , நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதனை மிக நன்றாக காணமுடிந்தது. அது மட்டுமன்றி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய தலைவர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுவடைந்து வருவதையும் சமகால அரசியல் தெளிவாக காட்டிநிற்கின்றது.
இந்நிலையில் இந்த வருட அமெரிக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் கொரோனா பரவலை ட்ரம்ப் கட்டுப்படுத்தவில்லை என்ற தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறார் ட்ரம்ப். குறிப்பாக மக்கள் மத்தியில் பிரசன்னமாகுகின்ற போதோ அல்லது கூட்டத்தொடர்களின் போதோ கூட முகக்கவசம் அணியாது அவர் கலந்து கொண்டமையானது எந்தளவு தூரம் இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டார் என்பதை காட்டுகின்றது. இன்றைய திகதிக்கு 83 இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்துபோயுள்ளமையானது தேர்தல் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அது மட்டுமன்றி ஜோர்ஜ்பிளைட் எனும் கறுப்பினத்தவர் கொலைசெய்யப்பட்டமையும் – அது நிறவெறிவாத போராட்டமாக வெடித்த பின்னணியும் ட்ரம்பினுடைய தேர்தல் வெற்றியை பாதித்துள்ளமையை மறுத்து விட முடியாது. இதனை மிகச்சரியாக கையாண்ட ஜனநாயகக்கட்சியினர் தங்களுடைய கட்சியின் துணைஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழி அமெரிக்கரான கமலாஹாரிஸை நியமித்துள்ளமை ஜனநாயகக்கட்சிக்கு இன்னும் வலுச்சேர்ப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அமெரிக்காவாழ் ஆபிரிக்க வம்சாவழியினரின் வாக்குகள் என்ற விடயத்துடன் அமெரிக்கா வாழ் இந்தியவம்சாவழியினரின் வாக்குகளும் ஜனநாயயகக்கட்சியின் பக்கம் குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது. இதனை மிக தந்திரோபாயமாக ஜனநாயககட்சியினர் அணுகுவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தலின் வேட்பாளர்கள் இந்தியாவில் நவராத்தரி தினத்துக்கும் – விநாயகர் சதுர்த்திக்கும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவிக்குமளவிற்கு இந்த தேர்தல் அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்களின் வாக்குகளை எதிர்பார்த்து நிற்பதை காட்டுகின்றது.

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் பலருடைய ஆதரவும் கூட ஜோபைடன் பக்கமே இருப்பதையும் காணமுடிகின்றது. பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி காட்டார், அதேபோன்று முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பொவல், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கிலாரிகிளின்டன் ஆகியோரும் தமது ஆதரவை ஜோபைடனுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்தப்பட்டியலில் புதிதாக “அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பென்சில்வேனியாவில் ஜோ பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்” என்ற செய்தியும் உத்தயோக பூர்வமாக வெளியாகியுள்ளமையானது ஜனநாயகக்கட்சியின் பக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. அண்மையில் பிரித்தானிய அரசும் ஜோபைடனுக்கு சார்பான போக்கினை கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தமையானது ஜனநாயகக்கட்சி வலிமையாக இருப்பதை காட்டுகின்றது.
இதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய பக்கத்தை, தேர்தலில் தன்னுடைய வகிபாகத்தை மிகச்சரியாக நகர்த்துவது போலவே படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருடைய அமைதி ஒப்பந்தத்திற்கும் கிடைத்த வெற்றியானது ட்ரம்பின் வெளிநாட்டுக்கொள்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக இஸ்ரேல் – பக்ரைன், இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ட்ரம்பின் நகர்வுகள் ட்ரம்பை சமாதானப்பிரியராக அடையாளம் காட்டியுள்ளமையானது ட்ரம்பின் தேர்தல் நகர்வுகளில் கனிசமான செல்வாக்கு செலுத்தவுள்ளது.
மத்தியகிழக்கு நாடுகளில் அமைதியான முகத்தை காட்டிவரும் ட்ரம்ப், அமெரிக்கா என்னும் வல்லாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவது போன்றதான விம்பம் ஒன்றையும் தன்னுடைய தேர்தல் அரசியலில் நகர்த்துகின்றார். ஜோபைடனை அமெரிக்காவின் கைக்கூலியாக காட்டிவரும் ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான பல பொருளாதாரத்தடைகளை விதித்தமையினையும் சீனாவை கட்டுப்படுத்துவதையும் தன்னுடைய பெரிய சாதனையாக அடையாளப்படுத்த தவறவில்லை. தன் மீது சுமத்தப்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மிக இலாவகமாக சீனாவின் திட்டமிட்ட சதிதான் கொரோனா என்ற மாயவலையால் மூடிவிட்டார் ட்ரம்ப் என்பது போலவே ஒரு பக்கம் தோன்றுகின்றது.

வடகொரியாவுடனான அணுஆயுதப்பிரச்சினையை முறையாக கையாண்டு அமைதி ஒப்பந்தம் ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டமை, மத்தியகிழக்கு நாடுகளில் சமாதானத்தூதுவனாக பணியாற்றியமை, இந்தியாவுடனான அரசியல் நகர்வுகளிலும் ஓரளவுக்கு தன்னை நிலைநிறுத்திக்கொண்டமை என பல வெளிநாட்டு நகர்வுகளில் ட்ரம்ப் மகத்தான வெற்றிகளை பதிவுசெய்துள்ளமை அவருடைய தேர்தல் வெற்றியிலும் தாக்கம் செலுத்தும்.
“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே சொந்தமானது” என தீவிர பிரச்சாரத்தை இந்த தேர்தலிலும் ட்ரம்ப் முழுமூச்சாக கையிலெடுத்துள்ளார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்திலும் முன்னுரிமை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை ட்ரம்ப் முன்வைத்து வருவது அவருடைய பக்கம் கனிசமான அமெரிக்கர்கர்களை ஈர்த்து வைத்திருக்கும் என்பதை காட்டுகின்றது. மேலும் வழமை போல கொமினியூச எதிர்ப்பையும் தன்னுடைய கையில் எடுத்துள்ள ட்ரம்ப் “ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டையும் தீவிரமாக முன்வைத்து வருகின்றமையும் முதலாளித்துவ கோட்பாட்டை விரும்பும் ஒருதொகை அமெரிக்கர்களை திருப்திப்படுத்த முனைவதை தெளிவாக காட்டுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் பற்றி குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் “ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன் ‘ என குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள கொரோனா தொடர்பான பழியிலிருந்து மீண்டு ட்ரம்ப் மீள ஆட்சியமைப்பாரா..? அல்லது ஜோபைடனின் நகர்வுகளும் அரசியல் அனுபவங்களும் வெற்றி பெறப்போகின்றனவா என்று….!
இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் பெருமையை தனதாக்கியுள்ளார்.
நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை எதிர்த்து போட்டியிட்டு வனுஷி வால்டர்ஸ் தெரிவாகியுள்ளார்.
இதில் பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து பாராளுமன்றத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன் நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது !
கருத்துச் சுதந்திரம்: வல்லரசுகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எப்போதும் ஆபத்தான ஆயுதம்!
பிரஞ்ச் எழுத்தாளர் வோல்ரயர் கருத்துச் சுதந்திரம் பற்றி குறிப்பிட்டது: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it” – “நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உனக்கு சொல்வதற்குள்ள உரிமைக்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்”
ஆம்! நேற்று மாலை மூன்று மணியளவில் பிரான்ஸ் தலைநகரான பரிஸின் புறநகர பாடசாலை ஒன்றின் வரலாற்று விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியுள்ளார். 47 வயதான சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதஅடிப்படைவாதியால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பாடசாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இதுபற்றித் தெரியவருவதாவது படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரம் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ள பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்ற சார்லி ஹப்துல் படுகொலைக்கு காரணமான மொகம்மது நபியின் கார்ட்டூன்களை காண்பித்து விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கருதினால் வகுப்பை விட்டு வெளியேறவும் அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் வெளியேற சில இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பில் தொடர்ந்தும் இருந்தனர். அதன்பின் ஒரு பெற்றார் இதனை ஒரு பிரச்சினையாக விடியோவில் பதிவிட இது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி இச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியது. பிரான்ஸில் வசிக்கும் மொஸ்கோவைச் சேர்ந்த செச்சினிய அடிப்படைவாதி அந்த ஆசிரியரை கழுத்தறுத்து தனது மத அடிப்படைவாதத்தை நிரூபித்துள்ளார்.
Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. – Article 19:
ஒவ்வொருவருக்கும் கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அவ்வுரிமையானது தடைகளேதுமின்றி சுதந்திரமாக கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கருத்தியல்களையும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளுக்கு அப்பாலும் தேடவும் பெறவும் பரப்பவுமான உரிமையயை வழங்குகின்றது.
விஞ்ஞானம் தொழில்நுட்பம் நாகரீகம் நவீனத்தை நோக்கி நகர்ந்த போதும் மனதனின் அடிப்படைச் சிந்தனைகளில் இன்னமும் அடிப்படைமாற்றங்கள் நிகழவில்லை. வல்லரசுகள் முதல் அடிப்படைவாதிகள் வரை இன்னமும் அடிப்படை உரிமைகளை சாதாரணர்களுக்கு வழங்குவதை தங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தானதாகவே நோக்குகின்றனர். அடிப்படைவாதிகளுக்கு மொகம்மது நபிக்கு கார்ட்டூன் வரைந்ததைப் பொறுக்க முடியவில்லை தங்கள் கொலைவெறியயை காண்பிக்கின்றனர் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளுக்கு தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை விக்கிலீக்ஸ்யை உருவாக்கிய ஜூலியன் ஆசான்ஜ் மீது பொய் வழக்குகளைச் சோடித்து அவரை படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். சர்வதே மனித உரிமை அமைப்புகள் அவரை விடுவிக்க கோரியும் பிரித்தானிய அரசு தனது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சேவகம் செய்வதில் எவ்வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.
கடவுள் நம்பிக்கையயை வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் மிக மோசமான மனித விழுமியங்களுக்கு புறம்பான செயற்பாடுகளையே செய்கின்றனர். மத எல்லைகளுக்கு அப்பால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் மனிதத்தை நேசிப்பவர்களாகவும் பண்பட்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடவுளை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வணங்குபவர்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அன்பு பண்பு நேர்மை குன்றியவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
சகிப்புத் தன்மை பொறுமை கருத்துக்களை கேட்கும் இயல்பு கருத்துக்களை அலசி ஆராயும் ஆளுமை நம்பிக்கை தன்னம்பிக்கை இவைகளின் பற்றாக்குறையானது தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த உலக சமூகத்தை அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டொரேற்ரே போன்ற அரசியல் தலைவர்கள் இந்த அமைதியற்ற வன்முறையான சமூகத்தின் பிரதிபலிப்புகள். சமூகத்தில் மேற்குறிப்பிட்ட விழுமியங்களின் பற்றாக்குறையினால் பண்பற்ற சமூக நோக்கற்ற பிரபல்யவிரும்பிகள் ஆட்சிக்கு வருகின்றனர்.
“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்” – ஔவை பாட்டி சொன்னது. இப்போது இது ரிவேர்ஸில் நடைபெறுகின்றது என்று கொள்ளலாம்.
கோன் இறங்க குடி இறங்கும்! குடி இறங்க காடெரியும்!! மதவெறியர் கழுத்தறுப்பர்!!!
குறிப்பு: பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு இக்கட்டுரையயை சமர்ப்பணம் செய்கின்றேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த உமர் குல், தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் தேசிய ரி-20 கிண்ண தொடர், முடிந்ததும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ராவல்பிண்டியில் தெற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் பலூசிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது ஓய்வு குறித்து 36 வயதான உமர் குல், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுக்கும் பிறகு, இந்த தேசிய ரி-20 கிண்ண தொடருக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற முடிவு செய்துள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக இறுதியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகள், 130 ஒருநாள், 60 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2002ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் விளையாடிய உமர் குல், 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு விளையாடினார். ஒருநாள், ரி-20 சர்வதேச போட்டிகளில் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடினார்.
2007ஆம் ஆண்டு ரி-20 உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார். அதேபோல 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ரி-20 உலகக் கிண்ண தொடரில் வென்றபோதும் அதே பெருமை அவருக்குக் கிடைத்தது.
“தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை
தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.
உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.
15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.
இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.
தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.
லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.
அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.
இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.
இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை
உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.
ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.
ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.
உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.
நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.
இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.
1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.
இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.
இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.
இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.
தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.
இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.
தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.
தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.
தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.
தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.
உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.
(‘அரங்கம்’ இணையத்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)










