2020

2020

மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவு!

நடைபெறவுள்ள  எதிர்வரும் 05ஆம், 06ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய நடந்துகொள்ளாத மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும், அவர்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ‘தொழில் குற்றம்’ எனும் குற்றச்சாட்டை பதிவு செய்யவும், நாடு பூராகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை 1913 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மதுவரித் திணைக்கள தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.- உறுப்பினர்கள் கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் தடை.

 

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (31.07.2020) பிற்பகல்  நடைபெற்றது. இதில் பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற திணைக்களப் பிரதானிகளும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க காதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பின் முக்கியமான விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில்அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது ,  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசத்தை கழற்றவோ அல்லது கீழிறக்கவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க முடியுமாக இருக்கின்றபோதும், அவர்கள் அனைவரும் சபா மண்டபத்திலிருக்கும்போது தமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் அமரவேண்டும் என்பதுடன், சபா மண்டபத்திலிருக்கும் சகல நேரத்திலும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

சபா மண்டபத்திலிருக்கும் சகல அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களும், கலரியிலிருக்கும் சகல தரப்பினரும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவினால், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் நேற்று (31) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க,  சுகாதாரப் பாதுகாப்பான முறையில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த வழிகாட்டல் தொகுப்புத் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபா மண்டபத்துக்குள் நுழையும் சகல வாயில்களிலும் கிருமிநாசினி திரவம் வைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சபா மண்டபத்துக்குள் நுழைய முன்னர் தமது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தமது ஆசனங்களில் அமரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, பாராளுமன்றத்தை கொவிட் 19 சவாலிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இது சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வழிகாட்டல் தொகுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கும் வகையிலும், போக்குவரத்துப் பிரிவு மற்றும் பராமரிப்புப் பிரிவினர் செயற்படவேண்டிய முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யானை தாக்கிய பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19.07.2020 அன்று காட்டு  யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி எனும் 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஏழைகளின் தோழன் – பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார்.

இந்த தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

லுணுகலை ஹொப்டன் பகுதியில் இன்று [01.08.2020] நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,

” கடும் குளிர், மழை என்பவற்றைக்கூட பொருட்படுத்தாமல் எமக்காக மக்கள் அணிதிரள்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடங்களிளெல்லாம் இதனைக்காணக்கூடியதாக இருக்கின்றது. இது அன்பால் சேர்ந்த கூட்டம், ஆதரவாளர்களின் ஒருமித்தக் குரலோடு சங்கமித்த கூட்டம். இவ்வாறான ஆதரவும், ஒற்றுமையுமே மலையகத்துக்கு தேவைப்படுகின்றது.

நாம் வெவ்வேறான தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தாலும் சமூகம் என வரும்போது இணைந்து பயணித்தால்தான் இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

பிரச்சாரங்களுக்காக தோட்டங்களுக்கு செல்லும்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்கும் வரை ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை என்பதுதான் எனது பதிலாக இருக்கின்றது. எனவே, கிடைக்காத ஒன்றை கிடைக்கும் என கூறி மக்கள் மத்தியில் ஏமாற்றுகாரனாக வலம் வருவதற்கு நான் தயாரில்லலை.

உண்மையை பேசினால் சிலர் அபசகுணம் என விமர்சிக்கின்றனர், ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டும் என்றால், மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் இந்த ஆட்சிமாற வேண்டும். அதன் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏழைகளின் தோழன், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க கூடியவர், அவர் பிரதமரானால் மாத்திரமே சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்பும் பாதுகாக்கப்படும். ஏனெனில் இன்று இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. சாதாரண மனிதன் குறித்து சிந்திக்காத கொடூங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டவேண்டும். ” – என்றார்.

நாளை நள்ளிரவு முதல் தேர்தலுக்கான அமைதிக்காலம் அமுலுக்கு வருகின்றது – மஹிந்ததேசப்பிரிய

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாகிறது எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.

எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை லங்காபுர கொரொனா தொற்று விபரம் – வெளியானது P.C.R பரிசோதனை அறிக்கை முடிவுகள்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகிய 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் இரவு P.C.R பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 158 பேரின் குறித்த முடிவுகள் அறிக்கை நேற்று இரவு கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த அறிக்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர், வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

P.C.R பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரப்பினர்களுக்கு இடையில், பிரதேச செயலக உறுப்பினர்கள், பிரதேசவாசிகள், தொற்றாளரின் உறவினர்கள் போன்று பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.எவ்வாறாயினும், 2391 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 413 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது – சுமந்திரன்

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ்மக்கள்  மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  .

வடமராட்சியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டிலும் தங்களது ஆணை கிடைத்ததாக சொன்னார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களுக்குள் வகுத்துக் கொண்டுத்தான் 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் எங்களுடைய பிரச்சினையை தீர்க்காமல் கடந்து போக முடியவில்லை, அது போகவும் முடியாது.

ஏனென்றால் திடகாத்திரமாக தீர்மானமாக எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டிற்கே வாக்களித்து கொண்டிருக்கின்றோம். அந்த ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் மீது சம்பிக்க ரணவக்க பகிரங்க குற்றச்சாட்டு!

ராஜபக்க்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஹெரோயின் படை, எதனோல் மாஃபியா படை, மணல் கொள்கை உள்ளடங்கலான பல்வேறு செயற்பாடுகளினால் சூழலை மாசுபடுத்தும் படை, பாதாள உலகக்குழுக்கள் ஆகிய நாற்படைகளை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடும் போது அவர் ; “இந்த நாட்டை நன்கு கற்ற, அறிவுடையவர்களே நிர்வகிக்கப் போகின்றார்கள் என்பதுதான் மக்களுக்கு வழங்கப்பட்ட மிகநீண்ட விருப்பம். தற்போது கம்பஹாவிலிருந்து சில படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் இல்லையா? நீர்கொழும்பிலிருந்து வந்திருக்கும் கற்றறிந்தவர் யார்? மினுவங்கொடவில் இருந்து தெரிவான அறிஞர் யார்? திவுலப்பிட்டியிலிருந்து வந்த தொழிற்சங்கவாதி யார்?

ஏற்கனவே இருந்த பழைய ஹெரோயின் கடத்தல்காரர்கள், பாதாள உலகக்குழுவினர், மணல்கொள்ளை மாஃபியாகாரர்கள் தான் இன்று ராஜபக்க்ஷக்களின் சேனையாகத் இருக்கின்றார்கள். முற்காலத்திலிருந்த நாற்படை போன்று ராஜபக்க்ஷக்களுக்கும் சிறப்பானதொரு நாற்படை இருக்கின்றது.

முதலாவது நாட்டில் ஹெரோயினை விற்று, அந்த வியாபாரத்தின் ஊடாக பணம் சம்பாதிக்கின்ற படை, இரண்டாவது பெருமளவான கொள்கலன்களில் எதனோலை நாட்டிற்குள் கொண்டுவருகின்ற, அந்தக் கொள்கலன்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் கையெழுத்தூடாக நிதியமைச்சிற்கு அறிவித்தார்.

எதனோல் வியாபாரத்தினூடாக வரும் பெருந்தொகை பணத்தை அரசியலுக்கு செலவிடுகின்ற எதனோல் மாஃபியா படை, மூன்றாவது கல் மற்றும் மணல் போன்றவற்றை அகழ்ந்தெடுத்து நாட்டின் வனப்பகுதிகளை நாசமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சூழலை மாசாக்கும் படை, நான்காவது பாதாளக்குழுக்கள் என்பவையே அந்த நாற்படையாகும்.

ராஜபக்க்ஷக்கள் ஆட்சிக்குவர முன்னர் சூழலுக்கு நேயமான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும், காபன் அற்ற சூழல் என்று சான்றளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் சுமார் 6 மாதகாலத்திற்கு சுற்றுச்சூழலைக் கொள்ளையடிப்பதற்கு இடமளித்தார்கள்.

மீண்டும் பலவருட காலத்திற்கு பழைய நிலைக்குத் திருப்பமுடியாதளவிற்கு பாரிய சூழல் மாசடைவை ஏற்படுத்த இந்த அரசாங்கம் இடமளித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒழிப்பேன் – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று [30:07.2020] கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்ட “பத்தம்ச களனி பிரகடனம்” சிசிர ஜயக்கொடிவினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

வருகை தந்திருந்த மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க களனிக்கு உரிய பெருமையை பாதுகாக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பலமான பாராளுமன்றம் ஒன்றை பெற்றுத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர் உட்பட மகாசங்கத்தினர், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் வேட்பாளர் பிரசன்ன ரணவீர, வைத்தியர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

வேட்பாளர் நளின் பெர்ணான்டோ ஜா-எல நகர மத்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வருகை தந்திருந்த மக்களிடம் பிரதேசத்தின் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் புனர்நிர்மாணம் செய்து வெள்ள அனர்த்தத்தை

குறைப்பதற்கும் ஜா-எல நகர அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷானி அபேசேகர  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் ஷானி அபேசேகர தனது பணி நீக்கம் மற்றும் இடமாற்றத்துக்கு எதிராக அண்மையில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.