பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.- உறுப்பினர்கள் கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் தடை.

 

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (31.07.2020) பிற்பகல்  நடைபெற்றது. இதில் பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற திணைக்களப் பிரதானிகளும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க காதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பின் முக்கியமான விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில்அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது ,  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசத்தை கழற்றவோ அல்லது கீழிறக்கவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க முடியுமாக இருக்கின்றபோதும், அவர்கள் அனைவரும் சபா மண்டபத்திலிருக்கும்போது தமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் அமரவேண்டும் என்பதுடன், சபா மண்டபத்திலிருக்கும் சகல நேரத்திலும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

சபா மண்டபத்திலிருக்கும் சகல அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களும், கலரியிலிருக்கும் சகல தரப்பினரும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவினால், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் நேற்று (31) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க,  சுகாதாரப் பாதுகாப்பான முறையில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த வழிகாட்டல் தொகுப்புத் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபா மண்டபத்துக்குள் நுழையும் சகல வாயில்களிலும் கிருமிநாசினி திரவம் வைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சபா மண்டபத்துக்குள் நுழைய முன்னர் தமது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தமது ஆசனங்களில் அமரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, பாராளுமன்றத்தை கொவிட் 19 சவாலிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இது சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வழிகாட்டல் தொகுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கும் வகையிலும், போக்குவரத்துப் பிரிவு மற்றும் பராமரிப்புப் பிரிவினர் செயற்படவேண்டிய முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *