June

June

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

புற்றுநோயை 100சதவீதம் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் !

அமெரிக்காவின் மேன் ஹட்டானில் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.

இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் புற்றுநோயை கண்டறிவதற்கான அனைத்து சோதனைகளும் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளபட்டு புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளிலுள்ள மக்களின் பணத்தை கையகப்படுத்துகிறதா அரசாங்கம்..?

“பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.” என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதற்கு வங்கி கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். வங்கி கட்டமைப்பு என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.

தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகளில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.

ஆகவே வங்கி கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம். இப்போது சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.

அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி விடுகின்றனர். நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும்.

மக்கள் வங்கி கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை. அவ்வாறு பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்

குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று – ஆனால் முடியவில்லை – உலக சுகாதார அமைப்பு !

உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் எதோனம் கெப்ரிசியஸ் கூறியதாவது:

கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா வளர்க்கலாம் – கஞ்சா செடிகளையும் வழங்கி வைக்கிறது அரசாங்கம் !

தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு தாய்லாந்த , அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது.

‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்துறை மூலம் மக்கள் மற்றும் அரசாங்கம் வருமானம் ஈட்ட இது ஒரு வாய்ப்பு’ என்று துணைப் பிரதமரும் சுகாதார அமைச்சருமான அனுடின் சார்ன்விரகுல் கடந்த மாதம் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டார்.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள் கஞ்சா கலந்த உணவுகள் மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளலாம்.முக்கியமாக உணவு தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) 0.2 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பங்கள் அதிகாரிகளிடம் பதிவுசெய்தால், ஆறு கஞ்சா பானை செடிகளை வீட்டில் வளர்க்க முடியும். மேலும் நிறுவனங்களும் அனுமதியுடன் ஆலையை தொடரலாம்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவை நிலையங்கள், கஞ்சாவை ஒரு சிகிச்சையாக மிகவும் சுதந்திரமாக வழங்க முடியும். 2018ஆம் ஆண்டில் மருத்துவ கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவிலேயே தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மருந்தைப் பயன்படுத்துவது இன்னும் சட்டவிரோதமானது. பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். இது பொதுத் தொல்லையாகக் கருதப்படுவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறினர்.

இத்திட்டத்தின் கீழ், கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சுமார் 4,000 கைதிகளை விடுதலை செய்வதையும் இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – இங்கிலாந்தில் புதிய திட்டம் அமல் !

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள். இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.

தந்தையை தவறுதலாக சுட்டுக்கொன்ற 2 வயது மகன் – துப்பாக்கி கலாச்சாரத்தால் திணறும் அமெரிக்கா !

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புளோரிடாவில் வாழ்ந்து வந்த ரெஜி மாப்ரி – மேரி அயலா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களின் 2 வயது மகன் தனது பெற்றோரின் ‘லோட்’ செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனது பெற்றோரும் துப்பாக்கியை கவனிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் துப்பாக்கியை வைத்து தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அப்போது துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து தந்தை ரெஜி மாப்ரி தரையில் விழுந்தார்.

விஷயம் அறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே ரெஜி மாப்ரி உயிரிழந்தார். முதலில் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் அந்த தம்பதியினரின் 2 வயது சிறுவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்தார். அதன்படி நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கவச உடை போன்றவற்றை பொதுமக்கள் வாங்கவும் இந்த சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் முடிவின் ஆரம்பம்! நம்பிக்கையிலாப் பிரேரணையில் தற்போது தப்பித்துக்கொண்டார் பிரதமர் பொறிஸ்!!!

இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.

இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.

முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.

உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

அங்கர்மாவே தான் வேணுமா..?- ஏன் உள்நாட்டில் பால்மாடுகள் இல்லையா மக்களே..?

எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
………………………………………………………….
பால்மா நுகர்வின் போது வெளிநாட்டு பால்மா நிறுவனங்களுக்கு நம்மவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. மேலும் உள்நாட்டில் தேவையான அளவுக்கு பசுமாடுகள் உள்ளதால் பால் நுகர்வுக்கு அந்தளவு சிரமம் ஏற்படுவதில்லை. முக்கியமாக லீட்டர் பால் 130-150 வரையான விலையிலேயே கிடைக்கிறது. இதை நுகர நமது மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அங்கர் பெட்டிகளுக்காக மட்டுமே கூட்டம் அலைமோதுகிறது. உள்நாட்டு மாப்பொருட்களை நுகர்வதில் கூட நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுவது கிடையாது. நமது இந்த மனோநிலையை தான் இறக்குமதி நிறுவனங்கள் தங்களுக்க சார்பானதாக மாற்றிக்கொள்கின்றன.
இதற்கு சிறப்பான உதாரணம் அண்மையில் இடம்பெற்ற சீமெந்து விலையேற்றமும் பின்னரான விலைக்குறைவும். சீமெந்தின் விலையேற்றப்பட்ட போது அதிகமாக விலைகொடுத்து சரி சீமெந்து  மூடைகளை பதுக்குவதில் கவனம் காட்டினர். இதனால் விலையும் எகிறியது. குறுகிய கால இடைவெளியில் சீமெந்து கொள்வனவை பரலும் நிறுத்தியதால் ஏற்றப்பட்ட விலைகளை குறைத்து மீண்டும் விற்பனையாளர்கள் விற்றனர்.
நமது அங்கலாய்ப்பை வியாபாரமாக்கவே இந்த விற்பனையாளர்கள் எப்போதும் முனைவதால் நாம் சுதாகரித்துக்கொண்டாலே இந்த விலையேற்றம் தொடரை்பான கனிசமான விளைவுகளை கட்டுப்படுத்த முடியும்.

தேவாலயத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் 50 பேரை சுட்டுக்கொன்ற சோகம் !

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார். இது கொடூரமானது என அவர் குறிப்பிட்டார்.