2020

2020

உலகில் 11 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.92 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாது” – 800 படத்திலிருந்து விலகிய நடிகர் டீஜே !

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது தாயாரும் ஈழத்தைச் சேர்ந்த தமிழர் தான். இப்படத்தின் அரசியல் காரணமாகத் தான் இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன். இத்தகைய சூழ்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘அசுரனில்’ நடித்ததற்காக விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டேன், அவர் மீது மிகுந்த மரியாதையும் புகழும் கொண்டிருப்பதால் 800 ஐத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

800 முதல்பார்வை (Firs look) கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், சமூக ஊடகங்களில் மக்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியையும் இப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் விவேக் மற்றும் சேரன் போன்றோரும்  விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் பலரும் ‘800’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” – விஜய்சேதுபதிக்கு நடிகர் விவேக் அறிவுரை !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று(15.10.2020) தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இதுபற்றி தெரிவிக்கையில்,

“உங்கள் அனைவரதும் பார்வைதான் எனது பார்வையுமாக உள்ளது. கருத்து சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரியமனிதனல்ல நான். இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு பதிவுகள் இந்திய சமூகவலைத்தள மக்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்தை அண்மிக்கும் கொரோனாப்பரவல் – 10 லட்சத்து 90ஆயிரம் பேர் பலி !

 உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,20,805
பிரேசில் – 1,51,063
இந்தியா – 1,09,856
மெக்சிகோ – 83,945
இங்கிலாந்து – 43,018
இத்தாலி – 36,246
பெரு – 33,419
ஸ்பெயின் – 33,204
பிரான்ஸ் – 32,942
ஈரான் – 29,070
கொலம்பியா – 28,141

“விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும்’ – பிள்ளையான் நம்பிக்கை !

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்  குறிப்பிட்டுள்ளதாவது,

“11.10.2020 ஆம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு 5 வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம். அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ´எடுப்பார் கைப்பிள்ளையாக´ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54,198 விருப்பு வாக்குகளை அளித்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி ஸ்கிறீன்களிலும், நாணயத்தாள்களிலும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் வாழும்..? – அவுஸ்திரேலியா ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சித்தகவல்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய வைரசான கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்கள் நாளுக்குநாள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அவ்வப்போது முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் தாள்களில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. தொலைபேசி ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது.  வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19வயதுப் போலந்துப்பெண் வீராங்கனை இகா ஸ்வியாடெக் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் எதிரொலியாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. முன்னணி வீராங்கணைகள் பலரும் கலந்து கொள்ளாத சூழலில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு வென்று மெயின் டிராவில் போட்டியிட்டார்.
தரவரிசை பட்டியலில் 54வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.

பரப்பரப்பான இறுதி போட்டியில் சோபியா கெனினை 6 – 4, 6 – 1 நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். போலந்து நாட்டில் இருந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் முதல்வீரர் இகா ஸ்வியாடெக் என்பது குறிப்பிடதக்கது.

பிரெஞ்சு ஒபனில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் இகா ஸ்வியாடெக் நான்காம் இடம் பிடித்துள்ளார் இதற்கு முன் மோனிகா செலஸ் (16), அரங்ஸா சான்சேஸ் (17), ஸ்டெபி கிராப் (17) ஆகியோர் வென்றுள்ளனர்.

தன்னுடைய கடமைகளை உணர்ந்து ஆரோக்கியமான தளத்தில் பயணிக்கின்றதா யாழ்பாணப் பல்கலைக்கழகம்..? – அருண்மொழி

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினையாகவும் பொறுப்பாகவும் முன்னெடுத்தச்சென்ற வகையிலும் , தமிழ் மக்கள் தங்களின் அடையாளம் என்ற வகையிலாக பிரகாசித்த எத்தனையோ உயர்பதவி வகித்த கல்விமான்களையும் உருவாக்கித்தந்த மையமாகவும், இலங்கைத்தமிழர்களுடைய அடையாளமாகவும் பல தசாப்பதங்களாக திகழ்ந்து வந்த உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டங்களில் தன்னுடைய அடையாளங்கள் யாவற்றையும் படிப்படியாக இழந்து சுழியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

உண்மையில் இதற்கான காரணங்களை என்னவென்று தேட முற்படும்போதெல்லாம் சிலருடைய பதில் அரசு திட்டமிட்டு இங்குள்ள வளங்களையும் மாணவர் ஒற்றுமையையும் அழிக்கின்றது..?  என்றோ அல்லது திட்டமிட்ட வகையிலான கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ யாரோ ஒருவர் மீது பழி போட்டு விட்டு  கடந்து போகின்ற ஒரு போக்கு தொடர்கின்றதே தவிர, கல்வி கற்கும் மாணவர்களோ அல்லது அங்குள்ள விரிவுரையாளர்களோ யாரும் தங்கள் மீது உள்ள தவறுகளை பேசத்தயாராகவும் இல்லை.., அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையோராகவும் இல்லை.

கடந்த 08.10.2020 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட 2ம் மற்றும் 3ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சினை யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அந்தப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டிய விரிவுரையாளர்கள் கூட மாணவர்களுடன் மேலும் விவாதத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் உதவியுடன்  பிரச்சினை தீர்க்கப்பட்டு பின்னர் விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, தொடர்ந்து 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அங்கு கடமையில் இருந்த விரிவுரையாளர்களாக இருக்கலாம் அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருந்த மாணவர்களாக இருக்கலாம் யாருமே தங்களுக்கு உள்ள சமூகப்பொறுப்பு என்பது தொடர்பாக எவ்வளவு தூரம் ஆரோக்கியமான புரிதலுடன் உள்ளனர், மாணவர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? அல்லது விரிவுரையாளர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களுடைய அடையாளமாக இருக்கின்றதா என பல விடயங்களை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே காலாதிகாலமாக இருக்கக்கூடிய இந்த சீனியர் – ஜூனியர் இடையேயான ஒரு முறுகலின் வெளிப்பாடே இந்த பிரச்சினையும் கூட. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களை பொறுத்தவரை இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குகிறார்கள், தமிழர்களின் அடக்கு முறைக்கான தீர்வுகள் எவை என்பன பற்றி எல்லாம் காலாதிகாலமாக பேசிக்கொண்டே வருகின்ற , அதற்காக குரல் கொடுத்து வருகின்ற ஒருபோக்கு காணப்படுகின்ற போதிலும் கூட அது எந்தளவு தூரம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வெளியே வருகின்றது என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாகின்றது. ஏனெனில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இதே மாணவர்கள் தான் தங்களுடைய புதுமுக சகோதரர்களை அல்லது கீழ் வகுப்பு மாணவர்களை பகிடிவதை என்ற போர்வைக்குள்ளேயோ அல்லது நான் சீனியர் எனக்கு நீ அடங்கிப்போகத்தான் வேண்டும் என்ற ஒரு விதமான கருத்துருவுக்குள்ளேயோ அடக்கியாள முற்படுகின்றனர். இலகுவாக சிந்திக்க வேண்டியது ,து தான் தான்..“ சிறிய பல்கலைக்கழக வளாகம் ,எங்களுடைய மொழியை பேசுகின்ற எங்களுடைய சகோதரர்களையே பிரிவினைகள் கூறி அடக்கியாள  முற்படும் நாம்,   அடக்கு முறையை ஏதோவொரு விதத்தில் செய்து கொண்டிருக்கும் நாம் , – எந்த கோணத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க தகுதியானவர்கள் என்பதை ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது”.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்தப்பிரச்சினைகளுக்கு விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய இடைவெளியே மிக முக்கியமான காரணம் என்பதை மறுத்து விடலாகாது. விரிவுரையாளரகள் பலரும் பாடத்திட்டத்தை கற்பிப்பது , அதற்கான பெறுமதிகளை வழங்குவது என்ற செயற்பாட்டுடன் தங்களுடைய மாணவர்ளுடனான உறவை முடித்துக்கொள்கின்ற ஒரு போக்கே தொடர்கின்றது. அதே நேரத்தில் யாழ்.பல்கலைகழக மட்டத்தில் குறிப்பிட்ட சில  விரிவுரையாளர்களைத் தவிர ஏனைய  பெரும்பாலான விரிவுரையாளர்கள் மாணவர்களுடைய சுய ஒழுக்கம் பற்றியோ, அல்லது அவர்களுடைய கல்விக்கான தேவைகள் என்ன என்பது பற்றியோ,  மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் என்பது பற்றி சிந்திக்கவோ அல்லது மாணவர்களுடன் பேசவோ தயாராகவேயில்லை. மாணவர்கள் தவறு செய்தவுடன் அவர்களுடைய வகுப்புத்தடை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக்கொள்ளும் பல்கலைக்கழக உயர்மட்டம் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி..? அல்லது இந்தப்பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான முடிவுகள் எவையாவது உள்ளனவா? என சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

விரிவுரையாளரகள் மாணவர்களுடன் இணைந்து பயணிக்க முன்வராத வரை இந்தப்பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.  விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வித்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களுடைய சமூகப்பொறுப்பை உணர வைக்க வேண்டிய மிகப்பெரும் பணியை ஆற்ற முன்வர வேண்டும்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர்கள், இடப்பெயர்வுகள் அவற்றின் மூலமான இழப்புக்கள் என பல விடயங்கள் காரணமாக வட -கிழக்கு தமிழர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது  கல்வி , பொருளாதாரம், சமூக மேம்பாடு என பல்வேறுபட்ட வகையிலும் பின்தங்கி நிற்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.  இந்த நிலையில் எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற கல்வி மட்டுமே இப்போதைக்கு எம்மிடம் உள்ள ஆயுதம் என்பதையும் அதனை மேலும் பட்டை தீட்டி கூர்மையாக்க வேண்டிய தேவை இந்த யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் ஒவ்வொரு பல்கலைகழக மாணவர்களும் – விரிவுரையாளர்களும்  உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ்ச்சமூகங்களில் காலை தொடங்கி மாலை வரை கூலிவேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளியிடம் சென்று ஏன் இப்படி உழைக்கின்றீர்கள் எனக் கேட்டால் “ என் புள்ளைய படிக்க வைச்சு கெம்பஸூக்கு அனுப்பிட வேணும் ” என்ற பதிலை இப்பொழுதும் கேட்க முடியும். அது போலத்தான் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களிடமும் இலக்கு என்ன என கேட்டால் “ படிச்சு எப்படியாச்சும் கெம்பஸ் போய்டனும்” என்கின்ற  பதிலே கிடைக்கும்.  இன்னமும் இந்த சமூகம் கல்வியை நம்பி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே இந்த பதில்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இப்படியான சமூகம் ஒன்றில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாக திகழவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகளை செய்தல்,  தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் மற்றும் அதற்கான தீர்வுத்திட்டங்களை ஆவணங்களாக வெளிக்கொண்டுவருதல், மாணவர்களுக்கான உளப்படுத்தல் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல், இறுதி வருட மாணவர் ஆய்வுகளை சமூகத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல் என பயணிக்க எத்தனையோ வழிமுடுறைகள் உள்ளன.

இவையெல்லாவற்றையும் விடுத்து விட்டு இன்னமும் பகிடிவதைகள் , சீனியர் – யூனியர் பிரச்சினைகள், தேவையற்ற சண்டைகள் என பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்ந்து செயலாற்ற மாணவர்கள் முன் வரவேண்டிய அதே நேரத்தில் மாணவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தான் என்ற கோணத்தில் சிந்திக்க விரிவுரையாளர்களும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் தானே. அவர்களுடன் தோழமையாக பழகுவதாலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை  ஏற்படுத்தலாம் என்பதை விரிவுரையாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறாக பயணிக்க முனைகின்ற போது மட்டுமே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான அடையாளத்தை பேணிக்கொள்ள முடியும்.

தங்களுக்குள்ள சமூகப்பொறுப்பை  உணர்ந்து கொள்ளாது,  பிரிவினைகள் பாராட்டி நீ – நான் பெரியவன் என பல்கலைக்கழக சமூத்தினர் இனியும் பயணிப்பார்களாயின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானது தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து உயர் கல்வி கற்பிக்கப்பட்டாலும்  மீண்டும் பாலர்பாடசாலையாகவே மாறிவிட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாணவர்களும் – விரிவுரையாளர்களும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.

விராட் கோலியின் அதிரடியுடன் சென்னையை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் !

ஐ.பி.எல் தொடரின் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்  வென்று முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில்  4 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களைகள் எடுத்தது. அணித்தலைவர் கோலியின் அதிரடியால், கடைசி 5 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணிக்கு 74ஓட்டங்க கிடைத்தன. கடந்த சில போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் குவிக்காத கோலி, சென்னைக்கு எதிராக அதிரடி காட்டி 52 பந்துகளில் 90 ஓட்டங்கள்  குவித்து அசத்தினார்.

பின்னர் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. டூ-ப்ளெஸிஸ் 10 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கும், வாட்சன் 18 பந்துகளில் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ராயுடு 42 ஓட்டங்களும், ஜெகதீசன் 33 ஓட்டங்களும் சேர்த்து ஆறுதல் அளித்தனர். அடுத்து வந்த தலைவர்  தோனி உட்பட யாரும் நிலைத்து நிற்காததால், சென்னை அணி 132 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து  37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸை பந்தாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ் !

நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க விரர்கள் ஷிகர் தவான் 5 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 19 ஓட்டங்களிலும் ,ஆட்டமிழந்தனர். அணித்தலைவர்  ஷ்ரேயாஸ் 22 ஓட்டங்களிலும் , ரிஷப் பண்ட் 5 ஓட்டங்களிலும் ரன்அவுட் முறையில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ஸ்டொய்னிஸ்  39 ஓட்டங்களும், ஹெட்மையர் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34ஓட்டங்களிலும், பட்லர் 13ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். தலைவர் ஸ்மித் 24 ஓட்டங்களிலும் ராகுல் திவாட்டியா 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும்ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி 19 புள்ளி 4 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு தன்னுடைய முழுமையான இலக்குகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  .

டெல்லி அணியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் டெல்லிஅணி வெற்றி பெற்றதன் மூலம்  புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.