2020
2020
இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, தென்னாபிரிக்கா துருக்கி இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த புதிய உருமாற்றம் அவுஸ்திரேலியா, டென்மார்க் முதலான நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிகவும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதற்கு முன்னரே ரஸ்ய மருந்து அரசதுறையினருக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் நான் ரஸ்ய தூதுவரை அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளிற்காக சந்திப்பேன் எனத்தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்களிற்கு இடையில் அந்த மருந்தினை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.ரஸ்ய அரசாங்கம் தனது மருந்தினை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளதால் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் அந்த மருந்தினை கொண்டுவரமுடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர் அதனடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்,எனவும் தெரிவித்துள்ளார்.
எந்த மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்? என்ன விலை? என்பது போன்ற விபரங்களை தீர்மானிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினர் ஊடாக மருந்துகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,நாங்கள் தற்போது மொடேர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் சீனா மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலை சேமிப்பதற்கான காலநிலை போன்றவற்றின் அடிப்படையில் எந்த மருந்தினை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரமுடியும் என தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கிறார் .
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று(21.12.2020) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அந்தச் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்துவருகின்றார்.
வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார்.
இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன.
மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.
புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜேதவனாராம வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தனித்துவமான புராதன பொருட்கள் நேற்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர், ஜேதவனாராமய விகாரை பூமியில் நாக மரக் கன்றொன்றை நாட்டிவைத்தார். தொடர்ந்து ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரின் பார்வையிடப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் 50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு இணையாக புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக சாலை அமைப்பிற்கு 82 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொல்பொருள் மதிப்புமிக்க இடிபாடுகள் மற்றும் புதைபடிவங்களை பாதுகாக்கும் செயற்பாடு ஜேதவன தொல்பொருள் அருங்காட்சியகத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது.
பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று மதிப்புமிக்க திட்டம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையின் மகிமையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் அடமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் மற்றும் ஜேதவனாராம விகாராதிபதி இஹலஅல்மில்லாவே ரதனபால தேரரின் அனுசாசனத்தில், சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைய கலாசார மறுமலர்ச்சிக்காக இந்ந அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜேதவனாராம விகாராதிபதி இஹலஅல்மில்லாவே ரதனபால தேரர் மற்றும் ருவண்வெலி வைத்யாதிகாரி ருவன்வெலி மகாசாய விகாராதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அத்துடன், அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர் கே.டீ.எஸ்.குமாரசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், அனுராதபுரம் நகரபிதா எச்.பீ.சோமதாச, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ராஜபக்ச அரசு இன்று தோல்வியடைந்த அரசாக மாறிவிட்டது. இந்த அரசை சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாட்டுக்குப் பொருத்தமற்ற ,நாட்டு மக்கள் விரும்பாத தலைகீழான நடவடிக்கைகளையே இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
நல்லாட்சியில் நாம் முன்னெடுத்த உருப்படியான எந்த வேலைத்திட்டங்களையும் இந்த அரசு இதுவரை ஆரம்பிக்கவில்லை. ஒரு பக்கம் சிறைக் கொலைகள் ,மறுபக்கம் ஊழல், மோசடிகள்தான் இந்த ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன.
நாங்கள் அரசை எதிர்ப்பது ஒருபுறமிருக்க இந்த அரசை உருவாக்கியவர்களே அரசு அழிய வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, 2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசின் அழிவின் ஆரம்பம் என நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று(21.12.2020) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பு அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சிற்கு இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார்.
அதன் பின் ஊடகங்களுக்கு பேசிய அவர்,
“வஹாப்வாத, இக்குவான் இனவாதப் பிரிவு என பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையிலும் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதாக நாங்கள் அடிக்கடி கூறிவந்தோம்.
ஆனாலும் அதனை பலரும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும்வரை நம்பவில்லை. ஆனால் இன்று அந்த செயற்பாடுகள் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன. அதனை அரசாங்கம் விரைந்து தடுக்க வேண்டும். அரசிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம் பிரிவுகளிலிருந்து பணம் உட்பட பல்வேறு இலஞ்சங்களைப் பெறுவதால் இதனை தடைசெய்ய முடியவில்லை. இனியும் அவ்வாறு இருக்கக்கூடாது. விரைந்து இந்த முஸ்லிம் ஒளிபரப்பினை தடைசெய்ய வேண்டும் ” என்றும் அவர் கூறினார்.
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதியே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
“இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாக இன்று (21.12.2020), சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறித்த கேள்விக்கு பதில் வழங்கும்போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சொல்லும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடந்தவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறும் கூறுகின்றது இவ்வாறும் கூறுகின்றது . சரத் வீரசேகர கூறுவது தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுக்கக் கூடாது. இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளார்.
அவருடைய கருத்து பிழையானது என்பதனை நான் பல தடவைகள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றேன். உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் எந்த காலத்திலும் பெரும்பான்மையாக இருக்கவில்லை. சரத் வீரசேகர பிழையான கருத்துக்களை பிழையான அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு செய்வதால் நாட்டு மக்களிடையே நல்லுறவும் ஒற்றுமையும் ஏற்படாது என்பதனை அவர் மனதிலே வைத்திருக்க வேண்டும்.
எனவே அவருடைய கருத்தை வட.கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடைய சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி, குறித்த சடலத்தை தகனம் செய்யாமல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வரும் வரையில் கராபிட்டிய வைத்தியாசலையில் உள்ள அதி குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காலி, தேதுகொட பகுதியை சேர்ந்த 84 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
குறித்த நபரின் சடலத்தை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தகனம் செய்யுமாறு கராபிட்டிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் சந்திரசேன லொகுகே உத்தரவிட்டிருந்ததுடன், உயிரிழந்த நபரை தகனம் செய்வதாயின் சடலத்தை பொறுப்பேற்க முடியாது என அவருடைய மகன் தெரிவித்திருந்தார்.