July

July

முஸ்லீம்கள் மீதான ராஜபக்ஷக்களின் அடக்குமுறை – நிபந்தனைகள் விதிக்கும் கட்டார் அரசு !

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கட்டார் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எரிபொருளைத் தேடிச் சென்ற இலங்கைக் குழுவிடம், கட்டார் ஜனாதிபதி சூசகமாக இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இராஜதந்திர எதிர்ப்பாக வெளிப்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டார் தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி தடை செய்து, அந்த அமைப்பிடம் உதவி பெற்று கல்வி நிறுவனம் நடத்தி சென்ற ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் நடந்து கொண்ட முறை ஆகியவைவே இந்த எதிர்ப்பிற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, கொரோனா நோயால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை விடுத்தது.

அந்த கோரிக்கையை பொருட்படுத்தாமல் நெகிழ்ச்சியான கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பிற்கு இவையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடரும் பொருளாதார நெருக்கடி – பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களில் பலரும் பாலியல் தொழிலாளிகளாக மாறக் கூடிய ஆபத்து இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனால், பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அறிமுகமாகாத நபர்களுடன் பாதுகாப்பின்றி பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெண்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பல நோய் தொற்றுக்கு உள்ளாக கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்கள் பலருக்கு நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவிகளாக மாறக்கூடும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தொடரும் தனியார் ஊக்குவிப்பு – ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பு !

ஏகபோகத்தை மாற்றுவதன் மூலம் இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பிற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திப் பணிப்பாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா எரிபொருள், எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளதால், தற்போது ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை பெறுகின்றன. அதேபோல் சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளன. இந்தியாவும் இதே நெருக்கடியில்தான் சிக்கியுள்ளது. எப்படி எரிபொருளை பெற்றுக் கொள்வது என்று. ரஷ்யாவின் எரிபொருளும் பற்றாக்குறையாக உள்ளது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில்தான் நாம் வந்துள்ளோம். நாம் உடனடியாக முடிவு  எடுக்கவில்லை என்றால் அடுத்த முறை எடுப்பதற்கு தாமதம் ஏற்படும். தற்போது எமது பிரதான நோக்கம் நாட்டு மக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது. எரிபொருளை கொண்டு வர முடியுமானால் எந்தவொரு நிறுவனத்திற்கும் நாம் இடமளித்துள்ளோம். நிறுவனங்களின் ஏகபோகத்தை மாற்றி நாம் இடமளித்துள்ளோம்.” என்றார்.

‘போர் முடிவுக்கு வந்தது – போருக்கான காரணம் முடியவில்லை.’ – கனேடிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை ‘கல்வி’ நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 

உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினும் சிங்கள விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை இரத்து செய்த ஒன்ராறியோ நீதிமன்றம், இலங்கை 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, ஆனால் ‘போருக்கான காரணம் முடிவிற்கு வரவில்லை’ என்று அறிவித்துள்ளது.

No சாதி , No இன – மத அரசியல் , No – தன்பாலீர்ப்பு திருமணங்கள் – ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ள ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் இனவாதத்தை தூண்டுகின்றனவா..?

கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால், இந்த அறிக்கை, ஜனாதிபதியிடம் இன்று (29) முற்பகல் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் ”ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ”ஒரே நாடு – ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள்.

1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும்.

2. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்;. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக, மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில், அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும்.

3. அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை நடத்துவதற்கு, கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

4. மதங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத மாற்று நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

5. தன்பாலின உறவு கொள்வது தவறு என குற்றவியல் கோவை சட்டத்தின் 365 ”அ” சரத்தில் உள்ளது. அந்த சரத்தை, குற்றவியல் கோவை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

6. திருநங்கை சமூகத்தின் பாலினம், சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடையாள சான்றிதழ் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் திருநங்கை சமூகம், சட்டத்திற்கு அமைவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

7. திருநங்கை சமூகத்தின் நலத்திட்டத்திற்கு, அரச தலையீட்டில் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்.

8. யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி தரப்பினரை சமூகமயப்படுத்தும், புனர்வாழ்வு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். (இந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், சமூகமயப்படுத்தலின் போது, சமூகத்தில் வாழக்கூடியவர்கள் என்பதை புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது உறுதிப்படுத்தியதன் பின்னரே விடுவிக்க வேண்டும்)

9. நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளி மற்றும் ஒலி வடிவில் பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு காலவகாசம் வழங்கி, கட்சிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில், கட்சியை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

11. நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும்.

12. கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதை தவிர்த்து, 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்)

13. விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டும். (2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கண்காணிப்பு குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.)

14. பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும்.

15. ஜாதியை வெளிப்படுத்தி, ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

16. விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்திற்கு அமைவானதாக, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். விசேட தேவையுடைவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து, அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

17. ஆதிவாசி சமூகத்தின் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வன பாதுகாப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும். (ஆதிவாசிகள் வனப் பகுதிக்கு சென்றால், தற்போது கைது செய்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு பிரிவிற்கு உள்ளது). இந்த கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

18. கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தை பின்பற்றி, சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

20. தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள், 10 நாட்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, மத வேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி, ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்பட வேண்டும்.

21. மீண்டும் இணைந்து வாழ முடியாது என இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு விவாகரத்தை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (தவறான நடத்தை மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தற்போது விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.)

22. தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், மலைநாட்டு சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு, பொது சட்டத்தின் கீழ், அந்த சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் சமர்பித்து, அதற்கான அனுமதிகளை பெற இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது.

……

இந்த பரிந்துரைகள் மீண்டும் இனவாத கலாச்சாரம் நோக்கி நகர்வதாக முஸ்லிம் தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் திருமண, விவாகரத்து சட்டங்களை ரத்து செய்ய ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் , முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கான ‘இத்தா’ காலத்துக்குரிய விடுமுறை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை மேற்கோள் காட்டியும், சிறுவர்களுக்கு 16 வயது நிரம்பாத வரை அரபி மத்ரஸா கல்விக்கு தடை எனவும் இந்த பரிந்துரைகள் விபரிக்கின்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களின் கணவர்மார் மரணிக்கும் போது, முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் 04 மாதங்கள் 10 நாள் (இத்தா காலம்) இல்லாமல் செய்யப்பட வேண்டுமென, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, இன்று ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மத வேறுபாடுகள் இன்றி – கணவர் அல்லது மனைவி மரணிக்கும் அரச ஊழியர்களுக்கு 01 மாத விடுமுறை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தங்களுடைய இனத்திற்கு எதிரானது என குறிப்பிட்டு ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கையில்  செயலணியின் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் கையெழுத்திடவில்லை. இந்த நிலையிலேயே , ஜனாதிபதியிடம் குறித்த பரிந்துரைகள் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் தன்பாலீர்ப்பு திருமணங்கள் தொடர்பில் இன்னமும் நமது நாடு பிற்போக்குத்தனமான போக்கை கொண்டுள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் தன்பாலீர்ப்பு திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் தன்பாலீர்ப்பு திருமணத்துக்கான தடை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.