June

June

‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம்.” – தோல்விக்கு பின் விராட் ட்வீட் !

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தோல்விக்குப்பின் பேசிய இந்திய அணி தலைவர் விராட் கோலி
‘‘இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியான அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.
அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கமாட்டோம். எங்கள் ஒயிட் பால் அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும்.
அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும்’’ என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ள விராட் கோலி ‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம். ஒன்றாக இணைந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முடிவின்றி வேட்டையாடும் கொரோனா – 40 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்திருந்தாலும் கூட உலகம் இன்று வரை முடங்கிப்போய்தான் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு உதவிய 50,000 ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.

இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.

மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.”  – நிரோஷன் பெரேரா

“நல்லாட்சி அரசில் பெற்றோலுக்காக 02ரூபாய் அதிகரித்த போது கூச்சலிட்ட மகிந்த ராஜபக்ஷ இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்…? ” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினால் எரிபொருள் விலை குறைவடையும் என்று அமைச்சர்கள் சிலர் கூறினர். தற்போது பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் எப்போது எரிபொருள் விலையை குறைக்கப் போகிறீர்கள்?

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக போராடிய தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் அதேபோன்று மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 

எனவே அரசாங்கம் அவர்களுக்கான துரித நிவாரணத்தை வழங்க வேண்டும். ஆகவே பசில் ராஜபக்ஷ வந்துவிட்டார் எனக் கூறி அவரது கைகளில் பந்தை மாற்றிவிட்டு ஏனையோர் தப்பிக்க முயலக்கூடாது.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஊடகங்கள் முன்னால் முதலைக்கண்ணீர் வடிப்பதை தவிர்த்து தலைமைத்துவத்திடம் நேரடியாக சென்று பேசி மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் செய்த அரசியல் புரட்சியால் தான் ஐக்கிய தேசியக் கட்சி பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் செய்த அரசியல் புரட்சியால் தான் ஐக்கிய தேசியக் கட்சி பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஓர் ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவார் என விடுக்கப்படும் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் ஒரு தடவைகூட ஜனாதிபதியாக முடியவில்லை. பலமான எதிரணியையும் அவர் கட்டியெழுப்பவில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியே இனி நிறைவேற்றும்.

ரணில் 27 வருடங்கள் புரட்சி செய்தார்தான். ஆனால், கட்சி பூஜ்ஜிய நிலைக்கு இன்று வந்துள்ளது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால்தான் நாம் ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றோம்.

ரணில் மீது மதிப்பு உள்ளது. ஆனால், அரசியல் ரீதியில் கொள்கை ரீதியில் முரண்பாடு உள்ளது” – என்றார்.

“நாம் ஆட்சிக்கு வந்த பிறகே இலங்கையால் கடன்களை முறையாக செலுத்த முடியும் என்பதை நிரூபித்துளோம்.” – நேற்றைய மக்களுக்கான உரையில் ஜனாதிபதி !

“நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறேன்.  எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு  நேற்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தன்னுடைய உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பெடுத்து முடித்தோம். அதேபோன்று, நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்தும் மீண்டுவந்து மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் நான் அர்ப்ணிப்புடன் செயற்படுவேன்.

இலங்கை மக்கள் அன்று மதரீதியிலான அடிப்படைவாத அச்சத்தில் உறைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பு வீழ்ச்சிகண்டதனை மக்கள் அவதானித்தார்கள். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பலவீனமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவு சர்வதேசத்திற்கு முன்பாக அகௌரவப்பட்டது.

எமது புராதன இடங்கள், தொல்பொருள் பகுதிகள் பகிரங்கமாக அழிக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு நாங்கள் முடிவுறுத்திய ஆயுதப் போராட்டம் மிகவும் பயங்கரமான தோற்றத்தில் மீண்டும் உருவாகியது. தேசிய பாதுகாப்பு குறித்து தற்போதுவரை பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம்.

பொறுப்புடைய பதவிகளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களினால் வீழ்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவின் மனநிலையை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். அன்று பலவீனமடைந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் மறுசீரமைத்துள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மறக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். பாதாள உலகை கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் கடத்தல், பாவனையையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். எமது கலாசாரம் உட்பட அனைத்தையும் அவமானப்படுத்தும் யுகத்தை நிறுத்தினோம்.

அனைவரினதும் அடையாளங்களைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கு இடையூறு அற்ற சமாதானமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

இன்று எமது நாட்டு மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எமது அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறிந்து இலங்கையினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததது.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் சில விம்பங்களை பெரிதுபடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டது , அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனது ஆட்சியில் எந்த அரசியல் நியமனங்களும் மேற்கொள்ளவில்லை.  நீதித்துறையிலும் அதேபோன்ற கொள்கையையே பின்பற்றப்படடுகின்றது.  அரசாங்கம் இன்று பலவீனமடைந்திருப்பதாகவும், தோல்வியடைவதாகவும் விமர்சனம் வெளியிடுபவர்கள், நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அவை இன்று நிறைவேற்றப்படாத காரணத்தினாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினை எதிர்கொள்ளத்தயாராகிறது இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நீக்கும் சவாலை எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராகுகின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலைமை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறித்த வரிச் சலுகை நீக்கப்படும்போது எதிர்கொள்ள நேரிடும் சவால்களையும் விளைவுகளையும் அரசு மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், நாம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றோம்.

அரசும் மத்திய வங்கியும் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்ற உறுதிப்பாட்டை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நாம் வழங்குகின்றோம்” – என்றார்.

திருச்சி முகாமில் 16வது நாளாகவும் தொடரும் இலங்கைத்தமிழர்களின் போராட்டம் – போராட்டக்காரர்களில் ஒருவர் மரணம் – அறிக்கை விட்டதை தவிர வேறு ஒன்றும் செய்திராத தமிழ்தலைமைகள் !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி  தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம்..,

அண்மையில் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தயிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.அடைக்கலநாதன் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேசி விரைவில் தீர்வு பெற்று தருவதாக கூறியிருந்தார். பின்புஇதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  அவசர கடிதம் அனுப்பி வைத்திருந்தார். மக்கள் ஓட்டுக்களில் தெரிவானாலும் அவரும் – கட்சிக்காரர்களும் ரொம்ப பிஸி.  சிறிய பேரணியை நடாத்தி எதிர்ப்பை கூட அவராலோ அல்லது அவருடைய கட்சியினராலோ மேற்கொள்ள முடியவில்லை – மேற்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

 

கூட்டமைப்பினரையோ – ஏனைய தமிழ்தேசிய கட்சிகளையோ  பொருத்தவரை எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் காலங்களில் பிரச்சார பீரங்கி போல முழங்கித்தள்ள ஏதாவது கிடைத்தால் போதுமானது. வேறு ஒருசெயலும் இவர்களிடம் இல்லை. கூட்டாக இணைந்து விடுதலை தொர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாதோர் தான் இவர்கள்.

 

இவர்கள் மக்களிடம் ஒரு விதமான மாய விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்திலுள்ளோர் எல்லோரும் துரோகிகள். தாம் மட்டுமே உத்தமர்கள் என்ற ஒரு மாயத்தோற்றமே அது. தமிழ்தேசியம் பேசுகின்ற எல்லா கட்சிகளும் இதனை தவறாது செய்கின்றன – தொடர்ச்சியாக. இவர்களுடைய கருத்துக்களுக்கு இன்று வரை தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லா தரப்பினருடனும் கட்டித்தழுவி கூடிக்குழாவுவர். இதற்கு ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு 2010 ஜனாதிபதி தேர்தல் . “ பொன்சேகா – மகிந்த கூட்டணி இணைந்தே 2009 போரை முடித்து வைத்தனர். ஆனால் 2010 தேர்தல் களத்தில் மகிந்த மட்டுமே குற்றவாளி. பொன்சேகா உத்தமர் என பிரச்சாரம் செய்து அவரை வட – கிழக்கில் மகிந்த நெருங்க முடியாத வாக்குகளை பெற வைத்தனர். இதே பொன்சேகா தான்  பாராளுமன்ற அமர்வு ஒன்றின் போது புரவி புயல் வடக்குக்கு வீசியிருக்க வேண்டும் என்று கூறிய நல்லுள்ளம் கொண்டவர் .” இவ்வளவு தான் இவர்களுடைய அரசியல். யாரையாவது எதிர்த்து ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் போதுமே தவிர வேறு ஒரு செயலும் இவர்களிடமும் இல்லை.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் கூட இவர்கள் ஒன்றுமே செய்திருக்கவில்லை. பாவம் இவர்களை நம்பி முடியாது போய் ஒரு கட்டத்துடன் மக்களே போராட்டத்தில் இறங்கி தமக்கான தீர்வை தேட ஆரமபித்தனர். வெட்கமேயில்லாது அதிலும்  கலந்து கொண்டு அரசியல் லாபம் ஈட்ட இவர்கள் தயாரே தவிர ஆக்கபூர்வமான ஒரு செயலும் இல்லை. இவர்களிடம் இதில் எதையுமே எதிர்பார்க்கவும் முடியாது.

பாவம் மக்கள் தான் இவர்களுடைய தேர்தல் அரசியலை புரிந்து கொள்ளாது இவர்கள் கூறும் போலி வார்த்தைகளை நம்பி  ஏதோ ராஜபக்ஷக்களும் – வியாழேந்திரர்களும் – டக்ளஸ்களும் தங்களுடைய எதிரிகள் என்ற பிரம்மையிலேயே வாழ்ந்து அவர்களிடம் உதவி எதையும் எதிர்பார்க்காது இறந்தும் விடுகின்றனர். இதற்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு உள்ளது. யாழ்.மாநகர முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வி.மணிவண்ணன் இறுதியாக நடந்த  பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அமைச்சர் டக்ளஸ் கட்சி மீது சேறு பசிக்கொண்டேயிருந்தார். அது போல அவருடைய துரோகிகள் கட்சியுடனும் தொடர்புகளோ – கூட்டோ ஏதுமில்லை எனவும் கூறியிருந்தார்.  அவர் மட்டுமல்ல. அவருடைய கட்சிக்காரரும் தான். வழமையான அதே துரோகி கான்செப்ட் தான்.  ஆனால் அவர் யாழ்.மாநகர முதல்வராவதற்கு வாக்குகளை பெறும் போது மட்டும்  டக்ளஸ் தரப்பினர் நல்லவர்களாகி அவர்கள் ஆதரவுடன் தான் அவர் பதவியேற்றுக்கொண்டார். முன்னைநாள் துரோகிகள் அவருக்கு தேவை என்றவுடன் நல்லவர்களாகி விட்டனர். இது போலத்தான் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.

 

இதே விடயம் தான் திருச்சி முகாமிலும் நடந்துள்ளது. பாவம் தமிழ்தேசிய கட்சிகள் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை மேற்கொண்டனர்.  அடக்கலநாதன் தொடர்பு கொண்ட போது கூட  போராட்டக்காரர்கள் அதை தான் நம்பியிருப்பர். அவர் எழுதிய கடிதத்தை தாண்டி வேறு எந்த நகர்வும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதே சமயத்தில் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்ற போது கூட கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தவில்லை.  தேவையில்லாத பழைய பல்லவிகளை பாடிவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனரே தவிர வழமை போல இந்த சந்திப்பிலும் கடுகளவு கூட பயன்இல்லை. இவர்களுக்கும் ஓட்டு போட்டு தெரிவு செய்த மக்கள் பாவம்.

முடிந்திருக்குமாயின் அமைச்சராக உள்ள டக்ளஸ்தேவானந்தாவிடமோ – இராஜாங்க அமைச்சராகவோ உள்ள வியாழேந்திரனிடமோ அல்லது அங்கஜன் இராமநாதனிடமோ இவர்கள் பேசியிருந்தாலோ அல்லது தொடர்பு கொண்டிருந்தாலோ அரச ம்டத்தில் சரி பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்திருப்பார்கள் போலத்தோன்றுகிறது. சரி அவர்களால் முடியாது இங்கே இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த அடைக்கலநாதனும் அவருடைய கட்சிக்காரரும் கூட மக்களுடைய பிரச்சினையை தீர்க்க மனதுள்ளோராக இருந்திருப்பின் தங்களுடைய கருத்துநிலைகளை கைவிட்டு அரச தரப்பிடம் அவர்கள் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கலாம்.  அப்படி ஒரு முடிவுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தால் கூட  போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச்செய்து அந்த ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம்.  அவையொன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் பூகோள அரசியல்வியாக்கியானங்கள் எல்லாம் மணியாக பேசுவார்கள் . பயனற்ற தலைவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

 

முன்னைய நிலையோடு ஒப்பிடும் போது மக்கள் ஓரளவுக்கு தங்களை சுதாகரித்து போலித்தேசியவாதிகளை தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை அண்மைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன.  தமிழ்தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளில் அரசு சார்பான வேட்பாளர்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ள தன்மையானது மக்கள் ஓரளவு மாயவிம்பத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளதையும் போலி அரசியலில் இருந்து மக்கள் வெளிவர துடிப்பதையும் காட்டுகின்றது.

மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசு சார்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என தமிழ்தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் கொஞ்சமாவது தமிழ்மக்கள் போட்ட ஓட்டுக்களுக்காக அவர்களுக்காக இயங்க ஆரம்பியுங்கள்.  இல்லையேல் இம்முறை தேர்தலில்  மாவை தூக்கியெறியப்பட்டது போல நீங்கள் ஒவ்வொருவராக தூக்கியெறியப்பட்டு நீங்கள் துரோகிகள் எனக்கூறியோர் முழுமையாக உங்கள் வட்டாரங்களை ஆக்கிரமிக்கலாம்.

பழைய கதைகளை பேசிக்கொண்டு  சர்வதேசம் – இந்தியா போன்ற பழைய சரக்குகளை இனியும் விற்க முயற்சிக்காது மக்களை போராட தூண்டாது உங்களுக்கு பின்னால் மக்களை திரட்டுங்கள்.  மக்களுடைய பிரச்சினைகளுக்காக இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வாருங்கள் . மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள் உங்களை..!

 

 

இலங்கை கடற்பரப்பில் மீண்டும் ஒரு கப்பலில் தீ விபத்து – மர்மக்கடலாக மாறுகிறதா..? இலங்கைகடல் என சமூக வலைத்தளங்கில் கேலி !

2020ல் இலங்கையின்  கிழக்குகடற்கரையில் நியூடைமன்ட் கப்பல் எரிந்தது. தொடர்ந்து – இந்த வருடம் அண்மையில் எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இவற்றால் இலங்கையின் கடற்பிராந்தியம் முழுமையாக மாசுபட ஆரம்பித்துள்ளதுடன் இதனுடைய தாக்கம் பல தசாப்தங்கள் நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள அதே நிலையில் இந்த அனர்த்தங்களால் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் இறந்து கரையொதுங்கியுள்ள நிலையில் புதிதாக ஒரு கப்பம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் இந்த விடயத்தினைத் உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனைக்கைதி துமிந்தசில்வா விடுதலை தொடர்பில் ஐ.நா. அதிருப்தி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை 2011ல் கொலை செய்த வழக்கில் துமிந்தா சில்வா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக  2016 செப்டம்பர் 8ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில் விடுவிக்கப்பட வேண்டிய சிறு தவறுகள் செய்த எத்தனையோ பேர் சிறை உள்ளே இருக்க மரணதண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இது தாடர்பில் கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில் ,  துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை தனது டுவிட்டர் பக்கத்தில்,

Capture

சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான ஜனாதிபதி மன்னிப்பு விடுதலையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளது.