உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் போதைப்பொருள் பாவனை மலிந்து போயுள்ளதை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பா.உ இளங்குமரன் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் யாழ்ப்பாண பொலிஸார் அசமந்தமாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2022ஆம் ஆண்டின் பின்னர் ஊசி போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுடன் சுமார் இருபதுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்திருந்தாலும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் வழமைக்கு மாறாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் 77வது சுதந்திர தினத்தின விழா சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் உள்ளீர்க்கப்பட்டு எளிமையாகவும் – கடந்த கால செலவுகள் முழுமையாக குறைக்கப்பட்டும் குறித்த விழா முன்னெடுக்கப்பட்டது.

மிக நீண்டகாலமாக தென்னிலங்கை மக்களை மட்டுமே மையப்படுத்திய வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகள் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளின் ஆரம்பத்திலேயே தமிழில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்ந்திருந்தது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவலின்படி, இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான செலவுகள் 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகியிருந்தது என மதிப்பிடப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை தேசம் நெட் ஊடகக் குழும இயக்குநர் தேசம் ஜெயபாலன் தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில், இனவாதம் மதவாதம் அற்ற ஆரோக்கியமான இலங்கை ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த கால சுயநல அரசியல் என்ற மாய வலையில் இருந்து விடுபட்டு இலங்கை வாழ் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆக்கபூர்வமான வகையில், அரசின் பிரதிநிதிகளுடன் பேசி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இனவாத கருத்துக்களை விதைக்காது அபிவிருத்தி சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் ஆளுமையான சுயநலமற்ற தலைவர்களை ஜனநாயக தேர்தல்களில் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் தேசிய பொருளாதாரத்தில் தமிழர்கள் தங்களை இணைத்து அபிவிருத்தி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இலங்கையர்களாக இணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 “நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

“நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

 

“தையிட்டி விகாரையை நாங்களே போய் இடிப்பம். மக்களைக் கூப்பிட்டு பலி ஆடுகள் ஆக்க வேண்டாம். நான் கடைப்பாறையுடன் ரெடி, நீங்கள் சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சட்டத்தரணி சுகாஸ், செல்வராஜா கஜேந்திரன் அலவாங்கோடு ரெடியா?” என குசும்பு விட்டு, தையிட்டி விகாரைப் பிரச்சினையின் சூட்சுமத்தை உடைத்தார், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா. கட்டி முடிக்கப்பட்ட எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கோவிலையும் இடிப்பது முறையில்லை என்பதைத் தெளிவாக சனிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்து, தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பா உ இராமநாதன் அர்ச்சுனா எச்சரித்திருந்தமை தெரிந்ததே.

யாருக்கும் புரியாத புதிராக தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் 100வது நாள் நெருங்கும் வரையில் தன்னை நோக்கி ஊடகங்களை திசை திருப்பியவாறே அர்ச்சுனா தனது அரசியலை முன்னெடுக்கின்றார். தமிழ் தேசியவாதிகள் பேசுகின்ற அதே மொழியைப் பேசி அவர்களை பந்தாடிவரும் அர்ச்சுனா பா உ சிறிதரன் போன்றவர்களை கத்தரித்தோட்டத்து வெருளிகள் என விமர்சிக்கின்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் இருந்து வந்த முறுகல் நிலை, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அர்ச்சுனா தையிட்டி விகாரை தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொதிப்படைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணி சுகாஸ் வருமாறு எதிர்வினையாற்றியுள்ளார்:

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், முன்னான் பா உ செல்வராஜா கஜேந்திரன், மற்றும் பா உ சட்டத்தணி பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ‘மொக்கு சாம்பிராணிகள்’ என்றும் பா உ அர்ச்சுனா சொல்லம்புகளால் தாக்கியுள்ளார்.

அயோத்தியில் பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும் இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

அதேபோல் தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்ட விகாரையை இடித்து இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை தன்பக்கம் ஈர்க்க முடியும் என மனப்பால் குடிக்கின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான். கஜேந்திரகுமார் போன்று இனவாதத்தைத் தூண்டிவிடும் சக்திகள் தெற்கிலும் பரவாலாக உள்ளனர். இங்கு விகாரை உடைத்தால் அங்கு கோயில்கள் உடைக்கப்படும். தெற்கில் மீண்டும் கஜேந்திரகுமார் பரம்பரையின் கூட்டாளிகளான இனவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள். இவர்களுடைய அரசியல் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் என்கிறார் சோலையூரான்.

தனக்கு அருகில் இருந்து கொண்டு அமைச்சர் ஹர்ச நாணயக்கரவிடம் ‘மச்சான்’ உறவு கொண்டாடி தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளும் பொன்னம்பலம் பரம்பரையில் வந்தவர்கள் அன்றும் இன்றும் தங்களுடைய பிரச்சினைகளை ஆளுபவர்களுடன் ‘மச்சான் உறவுகொண்டாடித் தீர்த்துக்கொள்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டுகின்றார் பா உ அர்ச்சுனா. ஆனால் இவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் தையிட்டி விகாரையை உடைப்பம் என்று மக்களைத் தூண்டி விடுகின்றனர்.

இந்தப் பரம்பரைப் புத்தியை இவர்கள் இன்னமும் கைவிடவில்லை. இப்படித்தான் கஜேந்திரகுமாருடைய பாட்டன் ஐக்கியதேசியக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமையைப் பறித்தார். இவர்கள் இப்போது பா உ அர்ச்சுனாவுக்கு துரோகிப் பட்டம் கட்டுகின்றனர்.

இராமநாதன் அர்ச்சுனா தங்களுடைய வாக்கு வங்கியை தட்டிப் பறித்துவிட்டார் என்ற கோபம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது. வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்ச்சுனாவின் அணியும் தேர்தலில் குதிக்கும் மீண்டும் மக்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமூகவலைத்தள பாவனையால் பாலியல் நோய்கள் !

சமூகவலைத்தள பாவனையால் பாலியல் நோய்கள் !

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் இந்நிலைக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடும் ஒரு காரணம் எனத் தெரிவித்த அவர் தற்போது இளைஞர்கள் மத்தியில் டேட்டிங் பயன்பாடுகள் பரவலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர்.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர் என்றும், இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன’ எனவும் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

 

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதற்குரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்ததுடன் விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் தெரியப்படுத்தினர்.

விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறித்த கூட்டத்தில், முழுமைப்படுத்தப்பட்ட விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது எனவும் தையிட்டி விகாரை விவகாரம் சைக்கிள் கட்சியினரின் அரசியலுக்காக பயன்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதி அனுரவும் யாழில், மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களுக்கானது, வட மாகாணத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், காணிகளை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம், தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை . உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை , ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர் . இதற்கு பதிலளித்த அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று, அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என்றார்.

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் ! 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் !

 

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் தச்சங்காடு மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் இரா சம்பந்தனின் மரணமும், அதன் தலைவர் மாசையின் மரணமும் வடக்கு கிழக்கு மக்களால் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும் அதனை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலுக்கு குறைவிருக்கவில்லை.

 

இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவரும் போது, தச்சங்காடு மயானத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது பிரிவினரை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. சுமந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 18 நபர்களின் படங்கள் பெயர்களுடன் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அந்தப் பதாகை சமூக வலைத்தளங்களில் உலாவந்திருந்தது.

தமிழரசுக்கட்சிக்குள் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்தே சுமந்திரன் ஆதரவு அணி – சிறிதரன் ஆதரவு அணி என்று இருகூராக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் மாவை சேனாதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே தரித்து நின்ற பா.உ சிறிதரன் மீது ஊடகங்களின் பார்வை குவிந்திருந்ததுடன் – வழமை போல் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை துரோகிகள் பட்டியலில் சேர்த்து மரணச்சடங்கிலும் தமிழ்தேசியம் என்ற பெயரில் மிகப்பெரிய ஓர் அரசியல் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என தமிழர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் – குப்பையில் கொட்டப்படும் 15 லட்சம் கிலோ இலவச உணவுப் பொருட்கள் ! 

அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் – குப்பையில் கொட்டப்படும் 15 லட்சம் கிலோ இலவச உணவுப் பொருட்கள் !

 

2023இல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் காலாவதியாகிய நிலையில் குப்பையில் கொட்டப்படவுள்ளன.

வறிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களே இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர், பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு இவற்றைக் கண்டறிந்துள்ளது.

மூன்று களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தவறான முகாமைத்துவத்தால் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாமல் வீணாக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமை இலங்கையின் அனைத்து அரசாங்க நிறுவனங்களில் நிகழ்வதுடன் அரச நிறுவனங்கள் ஊழல் மற்றும் பக்கச்சார்பு போன்றவற்றால் நிரம்பி வழிகின்றது. யாழில் ஜனாதிபதி அனுர குமார, வடக்கு மாகாண அரசாங்க திணைக்களங்கள் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் நிதியை மீண்டும் அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் கிட்டத்தட்ட 15 லட்சம் அரச அதிகாரிகள் காணப்படுவதுடன் 16 நபருக்கு ஓர் அரச அதிகாரி என்ற அடிப்படையில் இந்த தொகை அமைகிறது. இது மிக அதிகமான ஊழியர்கள் தொகை என அண்மையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்ததுடன் புதிய நியமனங்களை கட்டுப்படுத்துமாறும் அறிவுரை வழங்கியிருந்தது.

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

 

லைக்காவின் மீடியாக் குழுமத்திற்கு எதிரான வழக்குகள் வழக்குகள் ஆரம்பிக்கப்படதையடுத்து லைக்கா மீடியா குழுமத்தை விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் லைக்காவின் தமிழ் மீடியாக் குழுமமான ஒருவனை வாங்குவதற்குத் தயாரான நிலையில் யாரும் இருக்கவில்லை. அதற்கான நன்மதிப்பையும் லைக்கா உருவாக்கவில்லை. இந்நிலையிலேயே லைக்கா ஊடகக் குழுமம் மூடுவிழாக் காண்கிறது என்ற செய்தியை இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் செய்தி வெயிளியிட்டு இருந்தது. தற்போது லைக்காவின் தமிழ் ஊடகப் பிரிவை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் சடுதியாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் ஒருவன் அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

லைக்கா நிறுவனம் இயங்கிய நாடுகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. வரி ஏய்ப்பிலும் லைக்காவுக்கு நிகர் லைக்காவே எனும் அளவிற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே நீதி மன்றங்கள் தீர்ப்பளித்து இருந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் லைக்காவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் மொத்தம் 60 மில்லியன் பவுண்கள் வரியைச் செலுத்த வேண்டும் என லைக்கா பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் வரி நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இலங்கையிலும் சட்ட நெருக்கடிகள். அதனால் தற்போது லைக்கா கிரிஸ்நாட்டுக்கு தங்கள் அலுவலகத்தை நகர்த்த உள்ளதாகத் தெரியவருகின்றது.

ஒருவன் மீடியா குழுமத்தில் அவர்களுடைய டிஜிற்றல் பப்ளிகேஷனுக்கு என்ன நடக்கும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை. அது தொடர்ந்தும் இயங்கும் என்றும் அது இன்றோடு நிறுத்தப்படும் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒருவன் பத்திரிகைக்கு ஆரம்பத்தில் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனே நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் நின்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநர் குரபரனூடாக வேட்பாளருக்கு ஒரு கோடி நிதி வழங்கியதும் அந்த வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லி பணிப்புரைகள் வழங்கப்பட்டதால் வித்தியாதரன் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி விட்டார்.

அவரைத் தொடர்ந்து அமிர்தநாயகன் நிகஸ்ஷன் பிரத ஆசிரியராக பொறுப்பேற்றார். டிசம்பர் 3 அன்று நிக்ஸ்ஷன் தனது முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் எதிர்பார்க்கவில்லை என் மீது கொண்ட அன்பும் எனது நிர்வாகத்தின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பும் இன்று வெளிப்பட்டுள்ளதை நான் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.” தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டியே இப்பதிவு வெளியிடப்பட்டது. அது நடந்து சரியாக இரு மாதங்களில் நிக்ஸனின் மீதான நம்பிக்கையால் தங்களுடைய நிரந்தர வேலைகளையும் விட்டுவிட்டு லைக்காவின் கொழுத்த சம்பளத்திற்காக வந்தவர்கள் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி நிர்க்கதியாகி உள்ளனர்.

ஐபிசி பிரித்தானியக் கலையகத்திலும் ஊடகவியலாளர்களுக்கு இதே நிலையேற்பட்டது. கொழுத்த சம்பளத்தோடு பெரும் எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்களை உள்வாங்கி விட்டு சடுதியாக அவர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. ஊடக அனுபவமற்ற வியாபாரிகள் ஊடகங்களைப் பொறுப்பேற்கின்ற போது அவர்கள் தங்களுடைய நாய்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில்லை.

இது தொடர்பில் கருத்து வழங்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர், மற்றவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்கள் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தங்களுக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.