அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் – குப்பையில் கொட்டப்படும் 15 லட்சம் கிலோ இலவச உணவுப் பொருட்கள் !
2023இல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் காலாவதியாகிய நிலையில் குப்பையில் கொட்டப்படவுள்ளன.
வறிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களே இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர், பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு இவற்றைக் கண்டறிந்துள்ளது.
மூன்று களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தவறான முகாமைத்துவத்தால் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாமல் வீணாக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமை இலங்கையின் அனைத்து அரசாங்க நிறுவனங்களில் நிகழ்வதுடன் அரச நிறுவனங்கள் ஊழல் மற்றும் பக்கச்சார்பு போன்றவற்றால் நிரம்பி வழிகின்றது. யாழில் ஜனாதிபதி அனுர குமார, வடக்கு மாகாண அரசாங்க திணைக்களங்கள் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் நிதியை மீண்டும் அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் கிட்டத்தட்ட 15 லட்சம் அரச அதிகாரிகள் காணப்படுவதுடன் 16 நபருக்கு ஓர் அரச அதிகாரி என்ற அடிப்படையில் இந்த தொகை அமைகிறது. இது மிக அதிகமான ஊழியர்கள் தொகை என அண்மையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்ததுடன் புதிய நியமனங்களை கட்டுப்படுத்துமாறும் அறிவுரை வழங்கியிருந்தது.