“நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு
“தையிட்டி விகாரையை நாங்களே போய் இடிப்பம். மக்களைக் கூப்பிட்டு பலி ஆடுகள் ஆக்க வேண்டாம். நான் கடைப்பாறையுடன் ரெடி, நீங்கள் சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சட்டத்தரணி சுகாஸ், செல்வராஜா கஜேந்திரன் அலவாங்கோடு ரெடியா?” என குசும்பு விட்டு, தையிட்டி விகாரைப் பிரச்சினையின் சூட்சுமத்தை உடைத்தார், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா. கட்டி முடிக்கப்பட்ட எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கோவிலையும் இடிப்பது முறையில்லை என்பதைத் தெளிவாக சனிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்து, தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பா உ இராமநாதன் அர்ச்சுனா எச்சரித்திருந்தமை தெரிந்ததே.
யாருக்கும் புரியாத புதிராக தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் 100வது நாள் நெருங்கும் வரையில் தன்னை நோக்கி ஊடகங்களை திசை திருப்பியவாறே அர்ச்சுனா தனது அரசியலை முன்னெடுக்கின்றார். தமிழ் தேசியவாதிகள் பேசுகின்ற அதே மொழியைப் பேசி அவர்களை பந்தாடிவரும் அர்ச்சுனா பா உ சிறிதரன் போன்றவர்களை கத்தரித்தோட்டத்து வெருளிகள் என விமர்சிக்கின்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் இருந்து வந்த முறுகல் நிலை, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அர்ச்சுனா தையிட்டி விகாரை தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொதிப்படைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணி சுகாஸ் வருமாறு எதிர்வினையாற்றியுள்ளார்:
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், முன்னான் பா உ செல்வராஜா கஜேந்திரன், மற்றும் பா உ சட்டத்தணி பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ‘மொக்கு சாம்பிராணிகள்’ என்றும் பா உ அர்ச்சுனா சொல்லம்புகளால் தாக்கியுள்ளார்.
அயோத்தியில் பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும் இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் ராமர் கோயில் கட்டப்பட்டது.
அதேபோல் தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்ட விகாரையை இடித்து இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை தன்பக்கம் ஈர்க்க முடியும் என மனப்பால் குடிக்கின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான். கஜேந்திரகுமார் போன்று இனவாதத்தைத் தூண்டிவிடும் சக்திகள் தெற்கிலும் பரவாலாக உள்ளனர். இங்கு விகாரை உடைத்தால் அங்கு கோயில்கள் உடைக்கப்படும். தெற்கில் மீண்டும் கஜேந்திரகுமார் பரம்பரையின் கூட்டாளிகளான இனவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள். இவர்களுடைய அரசியல் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் என்கிறார் சோலையூரான்.
தனக்கு அருகில் இருந்து கொண்டு அமைச்சர் ஹர்ச நாணயக்கரவிடம் ‘மச்சான்’ உறவு கொண்டாடி தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளும் பொன்னம்பலம் பரம்பரையில் வந்தவர்கள் அன்றும் இன்றும் தங்களுடைய பிரச்சினைகளை ஆளுபவர்களுடன் ‘மச்சான் உறவுகொண்டாடித் தீர்த்துக்கொள்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டுகின்றார் பா உ அர்ச்சுனா. ஆனால் இவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் தையிட்டி விகாரையை உடைப்பம் என்று மக்களைத் தூண்டி விடுகின்றனர்.
இந்தப் பரம்பரைப் புத்தியை இவர்கள் இன்னமும் கைவிடவில்லை. இப்படித்தான் கஜேந்திரகுமாருடைய பாட்டன் ஐக்கியதேசியக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமையைப் பறித்தார். இவர்கள் இப்போது பா உ அர்ச்சுனாவுக்கு துரோகிப் பட்டம் கட்டுகின்றனர்.
இராமநாதன் அர்ச்சுனா தங்களுடைய வாக்கு வங்கியை தட்டிப் பறித்துவிட்டார் என்ற கோபம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது. வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்ச்சுனாவின் அணியும் தேர்தலில் குதிக்கும் மீண்டும் மக்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.