கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்திருந்தாலும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் வழமைக்கு மாறாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் 77வது சுதந்திர தினத்தின விழா சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் உள்ளீர்க்கப்பட்டு எளிமையாகவும் – கடந்த கால செலவுகள் முழுமையாக குறைக்கப்பட்டும் குறித்த விழா முன்னெடுக்கப்பட்டது.
மிக நீண்டகாலமாக தென்னிலங்கை மக்களை மட்டுமே மையப்படுத்திய வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகள் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளின் ஆரம்பத்திலேயே தமிழில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்ந்திருந்தது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவலின்படி, இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான செலவுகள் 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகியிருந்தது என மதிப்பிடப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை தேசம் நெட் ஊடகக் குழும இயக்குநர் தேசம் ஜெயபாலன் தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில், இனவாதம் மதவாதம் அற்ற ஆரோக்கியமான இலங்கை ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த கால சுயநல அரசியல் என்ற மாய வலையில் இருந்து விடுபட்டு இலங்கை வாழ் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆக்கபூர்வமான வகையில், அரசின் பிரதிநிதிகளுடன் பேசி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இனவாத கருத்துக்களை விதைக்காது அபிவிருத்தி சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் ஆளுமையான சுயநலமற்ற தலைவர்களை ஜனநாயக தேர்தல்களில் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் தேசிய பொருளாதாரத்தில் தமிழர்கள் தங்களை இணைத்து அபிவிருத்தி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இலங்கையர்களாக இணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.