இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்
இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.
பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.