யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் போதைப்பொருள் பாவனை மலிந்து போயுள்ளதை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பா.உ இளங்குமரன் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் யாழ்ப்பாண பொலிஸார் அசமந்தமாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2022ஆம் ஆண்டின் பின்னர் ஊசி போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுடன் சுமார் இருபதுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.