லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !
லைக்காவின் மீடியாக் குழுமத்திற்கு எதிரான வழக்குகள் வழக்குகள் ஆரம்பிக்கப்படதையடுத்து லைக்கா மீடியா குழுமத்தை விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் லைக்காவின் தமிழ் மீடியாக் குழுமமான ஒருவனை வாங்குவதற்குத் தயாரான நிலையில் யாரும் இருக்கவில்லை. அதற்கான நன்மதிப்பையும் லைக்கா உருவாக்கவில்லை. இந்நிலையிலேயே லைக்கா ஊடகக் குழுமம் மூடுவிழாக் காண்கிறது என்ற செய்தியை இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் செய்தி வெயிளியிட்டு இருந்தது. தற்போது லைக்காவின் தமிழ் ஊடகப் பிரிவை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் சடுதியாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் ஒருவன் அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.
லைக்கா நிறுவனம் இயங்கிய நாடுகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. வரி ஏய்ப்பிலும் லைக்காவுக்கு நிகர் லைக்காவே எனும் அளவிற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே நீதி மன்றங்கள் தீர்ப்பளித்து இருந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் லைக்காவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் மொத்தம் 60 மில்லியன் பவுண்கள் வரியைச் செலுத்த வேண்டும் என லைக்கா பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் வரி நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இலங்கையிலும் சட்ட நெருக்கடிகள். அதனால் தற்போது லைக்கா கிரிஸ்நாட்டுக்கு தங்கள் அலுவலகத்தை நகர்த்த உள்ளதாகத் தெரியவருகின்றது.
ஒருவன் மீடியா குழுமத்தில் அவர்களுடைய டிஜிற்றல் பப்ளிகேஷனுக்கு என்ன நடக்கும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை. அது தொடர்ந்தும் இயங்கும் என்றும் அது இன்றோடு நிறுத்தப்படும் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒருவன் பத்திரிகைக்கு ஆரம்பத்தில் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனே நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் நின்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநர் குரபரனூடாக வேட்பாளருக்கு ஒரு கோடி நிதி வழங்கியதும் அந்த வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லி பணிப்புரைகள் வழங்கப்பட்டதால் வித்தியாதரன் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி விட்டார்.
அவரைத் தொடர்ந்து அமிர்தநாயகன் நிகஸ்ஷன் பிரத ஆசிரியராக பொறுப்பேற்றார். டிசம்பர் 3 அன்று நிக்ஸ்ஷன் தனது முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் எதிர்பார்க்கவில்லை என் மீது கொண்ட அன்பும் எனது நிர்வாகத்தின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பும் இன்று வெளிப்பட்டுள்ளதை நான் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.” தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டியே இப்பதிவு வெளியிடப்பட்டது. அது நடந்து சரியாக இரு மாதங்களில் நிக்ஸனின் மீதான நம்பிக்கையால் தங்களுடைய நிரந்தர வேலைகளையும் விட்டுவிட்டு லைக்காவின் கொழுத்த சம்பளத்திற்காக வந்தவர்கள் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி நிர்க்கதியாகி உள்ளனர்.
ஐபிசி பிரித்தானியக் கலையகத்திலும் ஊடகவியலாளர்களுக்கு இதே நிலையேற்பட்டது. கொழுத்த சம்பளத்தோடு பெரும் எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்களை உள்வாங்கி விட்டு சடுதியாக அவர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. ஊடக அனுபவமற்ற வியாபாரிகள் ஊடகங்களைப் பொறுப்பேற்கின்ற போது அவர்கள் தங்களுடைய நாய்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில்லை.
இது தொடர்பில் கருத்து வழங்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர், மற்றவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்கள் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தங்களுக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.