செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மெளலவி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை – உலமாக் கட்சி தலைவர்

அரசாங்க ஆசிரியர் சேவையில் மேலும் ஒரு தொகுதியினரை மெளலவி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மத் தம்பி நேற்றுத் தெரிவித்தார். இந்த நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 35 பேர் மெளலவி ஆசிரியர்களாக அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறினர்.

இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 120 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. 202 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 82 பேரை நியமிக்கத் திட்டமிடப்பட்டபோதும் வெட்டுப்புள்ளி அடிப்படையில் 35 பேரே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களித்திருந்த படி இந்த மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகவிருக்கும் இம்மாதத்தில் மெளலவி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சையும் நடைபெறுவதையிட்டு இந்நியமனத்துக்காக அரசியல் ரீதியாக போராடிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமாக் கட்சி மகிழ்வுறுவதோடு ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது என உலமாக் கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் கூறியுள்ளார்.

இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்டம் வவுனியாவிலும் அமைக்கப்படவுள்ளது.

Charles_Mrs_GA_Vavuniyaஇந்திய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத்திட்டம் வவனியாவில் அடுத்த வருடம் மாhச் மாதமளவிலேயே ஆரம்பமாகும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் சேதமுற்ற மற்றும், வீடுகள் இல்லாதவர்களுக்கு என சுமார் ஏழாயிரம் வீடுகள் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கான பயனாளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலும் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் பதிவகள் நிறைவு பெற்றதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்று பகுதிகளில் இன்று மீள்குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, கிழக்கு, விசுவமடு மேற்கு, மாணிக்கபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்று புதன்கிழமை மீள்குடியேற்றபடுகின்றனர். முகாம்களிலிருந்து வெளியேறி நண்பர்கள். உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

விசுவமடு மகாவித்தியாலயத்தில் இயங்கும் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

இதேவேளை, முல்லத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச்செயலர் பிரிவிலுள்ள மற்றுமொரு கிராமமான தேராவிலில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Abondon_Motor_Vehiclesஇறுதிக் கட்டப் போரின் போது வன்னியில் பல பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட 121 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், பொலிஸ் முறைப்பாடு பிரதி, கிராமசேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட இரு அடையாள அட்டைப்பிரதிகள், வரி அறவீட்டுப்படிவத்தின் பிரதி ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட குறித்த வாகனங்களின் பதிவு இலக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட100 குடும்பங்களுக்கு இழப்பீடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு 12மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடுகள் எதிர்வரும் 12ஆம் திகதி குறித்த மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெறும் எனவும், இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் புளியங்குளம், முல்லைத்தீவு, நெடுங்கேணி, அகிய பிரதேசங்களில் உள்ள சேதமுற்ற 250 வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்மராட்சி அல்லாரையில் முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்களினால் வீடொன்றில் கொள்ளை!

தென்மராட்சி அல்லாரைப் பகுதி வீடொன்றில் ஆயுதமனையில் 10 இலட்ச ருபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் சகிதம் முகமூடி அணிந்த எட்டுப்பேர் குறித்த வீட்டிற்குள் புகுந்து அவ்வீட்டிலிருந்த தந்தை, மகன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவ்வீட்டிலிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததோடு, வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அல்லாரையைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 பவுண் தங்கநகை, 25ஆயிரம் ரூபா பணம், கமரா, தொலைபேசி உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் ஒதுக்கீடு.

Jaffna_Developmentயாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதிகள் பலநோக்கு கூட்டுறவுசங்கக் கிளைகள், பொதுக்கட்டடங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள் திருத்துதல் முதலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் மீட்சித்திட்டத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சேமமடுவில் காட்டுயானைகள் அட்டகாசம்.

Elephant_Went_Wild_2007_Galleவவுனியா சேமமடு மக்கள் குடியிருப்புக்களில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருகின்றன. குடியிருப்புக்களில் புகுந்து பயன்தரு மரங்களை அழித்து வருவதோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இக்காட்டு யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இப்பகுதியில் இக்காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவத்தினரும் இணைந்து இந்த யானைகளை நெடுங்கேணியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இந்திய அரசாங்கம் அமைக்கவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Kilinochiஇந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கிளிநொச்சிப் பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீட்டுத்திட்டம் அடுத்துதவருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை யடுத்து இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஐந்து இலட்ச ரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி உட்பட வன்னியில் வீடுகளை இழந்தவர்களுக்கு ‘நேர்ப்’ நிறுவனத்தினுடாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்துப்பட்டு வருகின்றன. 3 இலட்சத்து 25 ஆயிரம் ருபா பெறுமதியான வீடுகளே இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.

பல பொதுமக்களிடம் காணி உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீட்டுத்திட்டங்களுக்கு பதிவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

LandMine_Signவட மாகாணத்தில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இக்கண்ணிவெடியகற்றும் பணியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுடன் 1000 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும் அவற்றை மீட்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள 20 ஆயிரம் முல்லைத்தீவு மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.