எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆயூர்வேத சிகிச்சை முறையை பிரபல்யப்படுத்த இலங்கைக்கு வெளிநாடுகள் அழைப்பு!

tissa_karaliyaddda.jpgஇலங்கையின் ஆயுர்வேத வைத்திய முறையை  அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கியுபா போன்ற நாடுகளில் பிரபல்யப்படுத்த அந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார். இந்த அழைப்புக்கள் தோடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் நான்கு இடங்களில் ஆயர்வேத சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூன்றின் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் என அமைச்சின் ஆலோசகர் ஜயசிறி மெண்டிஸ் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான மூலிகைகள் மற்றும் உபகரணங்கள் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை அபுதாபி நகரிலும் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவும் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை  திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை!

வடக்கி லிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை இம்மாத இறுதியில் அல்லது மே மாத முதற்பகுதியில் மன்னாரில் ஆரம்மபிக்கப்படும் என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை கண்டறியவும் அவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படு;திக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் நலன்புரி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வட பகுதியிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இவர்களுள் உள்ள வறிய மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இடைத்தங்க்ல் முகாம்களில் செல்லொனாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்

1 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

sri-lanka-students-01.jpgநாட்டின் சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை யுடன் நிறைவடைய உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படவுள்ளன. இரண்டாம் தவணைக் கல்வி
நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் இம் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளன.

தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.  இந்த வருடத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

மங்களவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளு மன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஆதரவு வழங்கவும் முன்வந்துள்ளனர். இவர்களுள் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களும் அடங்குவர். இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது.

மங்கள சமரவீர எம். பி. யின் ஒரேயொரு இணைப்புச் செயலாளரைத் தவிர அவரது பிரத்தியேக நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதுவரை தாம் தனித்து விடப்பட்ட உணர்வைக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் உண்மை நிலையை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக இணைந்து உழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா திடீர் பாக்தாத் விஜயம்

obama_ap.jpg

முன்னறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதிபர் ஒபாமா பாக்தாதுக்கு சென்றுள்ளார். துருக்கிக்கான நீண்ட விஜயத்தின் முடிவில், சிறிது நேரத்துக்கு முன்னர் இராக்கிய தலைநகருக்கு அவர் சென்று இறங்கியுள்ளார்.

அவர் அமெரிக்க படையினரையும், இராணுவ தளபதிகளையும் சந்திப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இராக்கிய அதிபர் ஜலால் தலபானியையும், பிரதமர் நூரி அல்மலிக்கியையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஹெலிக்கொப்டரில் செல்வதற்கு மோசமான கால நிலை இடம் கொடுக்காத காரணத்தினால், அநேகமாக அவர்களுடன் அவர் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோள் சொல்ல நாணய நிதியத்திடம் நேரம் ஒதுக்கிக் கேட்கிறது ஐ.தே.க

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப் புவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போது அதனை தடுக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் ஐ.தே.க செயற்படுகிறது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இல்லாத தையும், பொல்லாததையும் கூறுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரம் ஒதுக்கித் தருமாறு ஐ.தே.க கேட்டுள்ளது. அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதனால் நியூயோர்க்கில் தொடர்புகொண்டு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளார்கள்.

எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் ஐ.தே.க செயற்படுகிறது. ஐ.தே.க கட்சியின் ஆட்சிக் காலத்தில் இருந்த சர்வதேச நாணய நிதியமல்ல இப்போது இருப்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சேவையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன் என்றும் கூறினார். ஐ.தே.க எம்.பி ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இ.போ.ச. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் -அமைச்சர் டளஸ்

dalas_alahapperuma.jpgஇலங்கை போக்குவரத்து சபை மீது பிரயாணிகள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனைக் காப்பாற்றுவோம் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பலங்கொட பஸ் டிப்போவை 37ஆவது மாதிரி டிப்போவாகத் தரமுயர்த்தும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் நடைபெற்ற இவ்வைபத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையை சரியான பாதையில் கொண்டு செல்கிறது. போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக அதன் பஸ்களின் எண்ணிக்கை 5200 ஆக அதிகரித்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். 

திருமலை கடலில் துருக்கி இரசாயன கப்பல்: சல்பூரிக் அமில கசிவு; கடல்நீர் பாதிப்பு

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக திருகோணமலை நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி நாட்டுக் கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காப்பாற்றும் அவசர பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.ரி. கிரேன்ட்பா’என்ற கப்பலே திருமலை துறைமுகத்திற்கு அப்பாலுள்ள நடுக்கடலில் வைத்து கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தினால் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் அந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கடற்படையினர் அவசரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், சல்பூரிக் அமிலம் இரசாயனத்தை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மற்றுமொரு துறைமுகமான காக்கிநாடா நோக்கி கடந்த 2ம் திகதி இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளது.

அந்தக் கப்பலில் சரக்குகளை ஏற்றக்கூடிய அளவைவிட மேலதிகமாகவும் சரக்குகள் இருந்துள்ளன. இந்தக் கப்பலில் சல்பூரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்த தாங்கிகளில் கசிவு ஏற்பட்டு அது கப்பலின் ஸ்திர சமநிலை பேணுவதற்காக வைக்கப்பட் டுள்ள தாங்கிப் பிரதேசத்திற்குள் படிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்தக் கப்பலிலிருந்து உதவிக்காக இலங்கை கடற்படைக்கு அவசரத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள மீட்பு ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையிர் இந்தக் கப்பல் சட்டபூர்வமான ஒரு சரக்குக் கப்பல் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சல்பூரிக் அமில கசிவினால் இந்தக் கப்பல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்கள் உடனடியாக அதிலிருந்து கடற்படையினரால் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர். கப்பலுக்குள் பிரவேசித்த இலங்கை கடற்படையினர் அதன் தாங்கிகளை பரிசோதித்தபோது அதில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர். இந்தக் கப்பலிலுள்ள சல்பூரிக் அமிலம் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தக் கப்பலை தற்பொழுது மேலும் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்வதற்கான அவசர நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கான வசதிகளை வழங்குவதில் கப்பலின் முகவர்களும் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஊடாக துருக்கிக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் வெள்ளத்தினால் நெல் வயல்கள் முற்றாக சேதம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் உழுது பண்படுத்தலுக்குத் தயாராக விருந்த பல நெல் வயல்கள் பலத்த சேதத்திற்குள்ளாகி இருப்பதுடன் வரம்புகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன.கடந்த வாரம் அம்பாறைக்கு மேற்புறமாகப் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் குறுக்கால் வயலுக்கு நீர் வழங்குவதற்கு போடப்பட்டிருந்த பலகைத் தடை காரணமாக ஆற்றில் செல்ல முடியாமல் மேலெழுந்து வயல் நிலங்களுக்குள் பிரவேசித்ததனாலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை விவசாய பிரிவைச் சேர்ந்த தொய்யன் வட்டை, வீரக்காடு போன்ற கண்டங்களிலுள்ள பெரும்பாலான வயல்களிலுள்ள மண் இந்த வெள்ளித்தினால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பல அடி ஆழமான குழிகளும் நெல் வயல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வேளையில் அணைக்கட்டின் தடைப் பலகையைக் கழற்றி இருந்தால் இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்