அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் உழுது பண்படுத்தலுக்குத் தயாராக விருந்த பல நெல் வயல்கள் பலத்த சேதத்திற்குள்ளாகி இருப்பதுடன் வரம்புகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன.கடந்த வாரம் அம்பாறைக்கு மேற்புறமாகப் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் குறுக்கால் வயலுக்கு நீர் வழங்குவதற்கு போடப்பட்டிருந்த பலகைத் தடை காரணமாக ஆற்றில் செல்ல முடியாமல் மேலெழுந்து வயல் நிலங்களுக்குள் பிரவேசித்ததனாலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்மாந்துறை விவசாய பிரிவைச் சேர்ந்த தொய்யன் வட்டை, வீரக்காடு போன்ற கண்டங்களிலுள்ள பெரும்பாலான வயல்களிலுள்ள மண் இந்த வெள்ளித்தினால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பல அடி ஆழமான குழிகளும் நெல் வயல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வேளையில் அணைக்கட்டின் தடைப் பலகையைக் கழற்றி இருந்தால் இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.