விஸ்வா

விஸ்வா

சரத்பொன்கோவுடன் கைதான நால்வர் விடுதலை.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட நால்வர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் ஒரு ஊடகவியலாளர் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இவர்களை விடுதலை செய்தது.

மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க, மேஜர் ஜெனரல் சுனில் சில்வா, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகிய முன்று இராணுவ அதிகாரிகளும். ஊடகவியலாளர் றுவான் வீரக்கோன் ஆகிய முவருமே சரத் பொன்சோகாவுட்ன இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

“புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இரகசியமான முறையில் தடுத்து வைக்கப்படவில்லை” – இராணுவப் பேச்சாளர் உபயமெதவல

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

 எழிலனும் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும்  அவர்களை படையினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரனின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவை படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட குழுவினர் படையினரிடம் சரணடையவில்லை எனவும், படையினர் இரகசிய தடுப்பு முகாம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  வைத்திருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்கள் படையினரால் அச்சுறுத்தல், துன்பறுத்தல்களுக்கு ஆளாவதாகவும்,  நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொதுமக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில், அவசரகாலச்சட்டதை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘நமது ஈழநாடு’ அச்சகம் பொலிஸாரால் சீல் வைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் அச்சகத்திற்கு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது சுரபி அச்சகம் என்ற பெயரில் நடத்தி வந்த 62 வயதான சின்னத்துரை குருதேவ் என்பவரையும் பொலிஸார் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை கொழும்பிலிருந்து யாழப்பாணம் சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இவ்வசகத்திற்கு சீல் வைத்ததோடு அதனை நடத்தி வந்த குருதேவ் என்பவரையும் கைது செய்துள்ளனர். இவ்வச்சகம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸில் சேர்வதற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்!

Police_Logoபொலிஸ் பணியில் இணைந்து கொள்வதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமாக தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு விண்ணபித்தவர்களில் 340 பேர் பொலிஸில் இணைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி நிறைவடைந்ததும் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைக்கமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

‘5000 தமிழ்ர்கள் பொலிஸ் படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்’ என்றும் அதன் முதற்கட்டமாக ஒரு தொகையினருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் லண்டன் வந்திருந்த பா உ ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் (Sep 18 2010) தெரிவித்து இருந்தார்.

பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் வடக்க கிழக்கில் மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர் எனவும், தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

”மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை” கூட்டுறவுச் சங்கம்

Co-operavtive_Shop_Jaffnaமீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உலருணவு நிவரணப்பொருட்கள் தாமதமடைவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை என கூட்டுறவுச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மீள்குடியேற்றப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் நிவாரண உணவுப் பொருட்கள் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச்செயலகத்தின் பணிகள் தாமதம் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களுக்கு பட்டியல் வருவது தாமதமாகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிவு : 22 செப்ரம்பர் 2010

‘வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான உதவிப்பொருட்கள்  எவையும் கிடைப்பதில்லை’ – மக்கள் கவலை

வன்னியில் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் உடனடித் தேவைகளுக்கான கூரைத்தகடுகள், தறப்பாள்விரிப்புகள் எவையும் வழங்கப்படுவதில்லை என மீள்குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மீள்க்குடியமரும் மக்களுக்கான நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதும் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Co-operavtive_Shop_Jaffnaகிளிநொச்சிப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பலருக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நிவாரண அட்டைகள் பதிவு செய்யப்படும் இடங்களிலேயெ வழங்கப்பட்டு வருகின்ற போதும், நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படமலுள்ளதாகவும், கூட்டுறவச்சங்களுக்கு செல்லும் போது அதற்கான பட்டியல் தமக்கு வரவில்லை என நிவாரணப் பொருட்களை வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அமைச்சரை முற்றுகையிட்டதற்காக நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Tissanayakka_S_P கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவை முற்றுகையிட்டு தடுத்துவைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மாணவர்களை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொது. அவரை இம்மாணவர்கள் முற்றுகையிட்டு சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் நேற்று கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது. இவர்களை இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். புகிடிவதைச் சட்டத்தின் கீழ் இம்மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி ஜனவரி மாதம் ஆரம்பமாகும்

இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதமே ஆரம்பமாகும் என யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வதாற்கென நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் குழுவினர் இந்திய அசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

 நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் வருகை தந்த இந்தியக்குழுவினர் நேற்றுக்காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து வீட்டுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்திய அரசாங்கமே இந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டுமா? அல்லது அதற்கான நிதியை மட்டும் வழங்கினால் போதுமா? இது குறித்த மக்களின் கருத்து பற்றி இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரை வினவியதாகவும், யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்தமைக்கு இந்தியக் குழுவினர் இணக்கம் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் மூன்று மாதங்களில் களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி விநாயகபுரத்திலும் மக்கள் மீள்குடியமர அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் ஏ-9 பாதையின் மேற்கில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத 16 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கந்தன்குளம் கிராமத்திலுள்ள தாழ்வான நிலப்பகுதியில் வசதிகளற்ற நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

1983ம் அண்டு தொடக்கம் விநாயகபுரம் கிராமத்தில் மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். வீடுகள் கிணறுகளை அமைத்து.  பயன்தரும் மரங்களையும் வளர்த்துள்ளனர்.

இவர்களுக்குச் சொந்தமான 23 ஏக்கரில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளதாக தமக்கு அறிய வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது கிளிநொச்சிப் பிதேசச் செயலரினால் தாங்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தாழ்வான நிலப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் வெள்ளம் எற்பட்டு கடும் சிரமங்களைத் தாங்கள் எதிர்கொண்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சிக் கிராமங்களான சாந்தபரம், இந்துபுரம். பொன்னகர் உட்பட பல கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜி.ரி.இசட் நிறுவனத்தால் யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Jaffna_Libraryயாழ். பொதுநூலகத்திற்கு ஜி.ரி.இசட் நிறுவனம் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கியுள்ளது. இந்த நூல்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

ஜி;ரி.இசட் நிறுவனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் வோல்ரர் ஹெலர் யாழ். நூலக பிரதம நூலகர் எஸ்.தனபாலசிங்கத்திடம் இந்த நூல்களைக் கையளித்தார். ஆங்கில மொழியாற்றலை விருத்தி செய்யக்கூடியதான நவீன நூல்கள் இவற்றிலடங்குகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தேசம்நெற் ‘புக் அப்றோட்’ நிறுவனத்தின் நூல்களைப் பெற்று யாழ் பொது நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை நூலகவியலாளர் என் செல்வராஜா இணைப்பாளராக இருந்து மேற்கொண்டார். மேலும் யாழ் பொதுநூலகத்திற்கான சர்வதேச நூல் வகைப்படுத்தல் கைநூல்களின் பிரதிகளை கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தினர் தேசம்நெற் ஊடாக அனுப்பி வைத்தனர். இதன் பெறுமதி அப்போது 1000 பவுண்களுக்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேற்றம், அபிவிருத்திப் பணிகளில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Sumanthiran_MP_TNAவடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் மீள்குடியேற்றம் மற்றும். அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ள ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சி.சிறிதரன், பொன். செல்வராசா ஆகியோரே நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

தாம் அனுப்பி வைத்த இவ்வுறுப்பினர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

அதற்கேற்பவே தற்போது இதற்காக எழு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக தனியான  பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.