கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் ஏ-9 பாதையின் மேற்கில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத 16 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கந்தன்குளம் கிராமத்திலுள்ள தாழ்வான நிலப்பகுதியில் வசதிகளற்ற நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
1983ம் அண்டு தொடக்கம் விநாயகபுரம் கிராமத்தில் மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். வீடுகள் கிணறுகளை அமைத்து. பயன்தரும் மரங்களையும் வளர்த்துள்ளனர்.
இவர்களுக்குச் சொந்தமான 23 ஏக்கரில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளதாக தமக்கு அறிய வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கிளிநொச்சிப் பிதேசச் செயலரினால் தாங்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தாழ்வான நிலப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் வெள்ளம் எற்பட்டு கடும் சிரமங்களைத் தாங்கள் எதிர்கொண்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சிக் கிராமங்களான சாந்தபரம், இந்துபுரம். பொன்னகர் உட்பட பல கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.