அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு!

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: ஜனாதிபதி-பிரதமர் சந்திப்பு

india.jpgஜனாதிபதி பிரதீபா பட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் இந்தியா மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பற்றியும் அவர்கள் விவாதித்ததாகவும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது இப்படி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இடம்பெயர்ந்தோர் நலன்பேண கொரியா 5 இலட்சம் டொலர் அன்பளிப்பு

vanni-manitharkal.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உதவும்முகமாக கொரிய அரசாங்கம் ஐந்து இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள இந்த நிதி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா,  மன்னார் மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகப்பற்றற்ற முறையில் கூட ஆராயவில்லை தலைவரான ரஷ்ய தூதரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

UN_Logoஐ.நா:  இலங்கை கடற்கரையானது வார இறுதியில் “இரத்தக் களரி’யை எதிர்கொண்டுள்ள போதிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு சபையானது இலங்கை விவகாரத்தில் தன்னை அதிகளவுக்கு தூர விலத்திக் கொண்டுள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பாதுகாப்புச் சபை அமர்வு கூட இலங்கை விடயம் தொடர்பாக இடம்பெறவில்லையென்றும் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபையின் தலைவரான ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவரோ, சீனப் பிரதிநிதியோ பங்குபற்றாமல் சில உறுப்பினர்கள் மட்டும் அறையொன்றில் சந்தித்ததாகவும் ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது. 

வயோதிபர்களின் 61 சடலங்களும் பூந்தோட்டத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 61 சடலங்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூந்தோட்டம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் சவச்சாலையில் சடலங்களை வைத்திருக்க கூடிய இடவசதியின்மையால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

இதனால் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் அனைத்து சடலங்களும் ஒரே குழியில் போடப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. நலன்புரிநிலையங்களில் இயற்கை மரணமடைந்த முதியவர்களின் சடலங்களே இவற்றில் பெரும்பாலானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் : ராதிகா குமாரசுவாமி

radhika-kumaraswamy.jpg
படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக அப்பாவிச் சிறுவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.சிறுவர்களைப் பணயமாக வைக்கவோ அல்லது ஆயுத போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தவோ எவருக்கும் அதிகாரமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ள சிறுவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அரசாங்க அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். சர்வதேச தர நியமங்களுக்கு அமைவான வசதிகள் அகதி முகாம்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

மலேசியாவில் விடுதலையாகியுள்ள ஹிந்த்ராஃப் தலைவர் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

_protestors_ap.jpgமலேசியத் தமிழர்கள் சம உரிமை கோரி போராட்டம் செய்துவருகின்றனர் மலேசியாவில் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட இந்திய சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான போராடும் அமைப்பைச் சேர்ந்த பி.உதயகுமார், சிறுபான்மை மக்களின் உரிமைக்கான தனது போராட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அமெரிக்க செயதி நிறுவனமான அசோசியோடட் பிரஸ்சுக்கு கூறியுள்ளார்.

இந்தப் போராட்டமானது தெருக்களில் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் மத சுதந்திரம், வேலைவாய்பின்மை மற்றும் கல்வி வாய்ப்புக்கள் போன்ற பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க தான் முயலப் போவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட உதயகுமாரும் இந்து உரிமை அமைப்பான ஹிண்டாராப்பின் மற்ற நான்கு உறுப்பினர்களும், இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டடிருந்தனர்.

அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் எவ்வித குறைவுமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஅரசியல் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சிலர் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கின்ற போதிலும் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் எவ்வித குறைவுமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளைக்கொண்டு நிதி நிலைமையை விரிவுபடுத்துவதுடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வழிசெய்ய வேண்டியது அவசியம். இச்சலுகையை சிறு மற்றும் மத்தியதர முதலீட்டாளர்களும் பொதுமக்களும் நேரடியாக அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகிலேயே பலமான தீவிரவாதத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்திற்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தபோதும் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாகப் பேண அரசுக்கு முடிந்துள்ளது. இந்நிலையிலும் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களைப் பொருட்படுத்தாது வங்கியாளர்கள் தமது நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அரசியல் இலாபங்களுக்காக சிலர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டபோதும் அரசாங்கத்துக்குக் கிட்டும் வெளிநாட்டு நிதியுதவிகளில் குறைவில்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி விகிதாசாரத்தை நிலையாகப் பேணுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் விவசாயம் ஏற்றுமதிக் கைத்தொழில் சம்பந்தமான வங்கிக் கடன்களை வழங்குவதில் வங்கிகள் கவனமெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கடன் வழங்குவதில் தாமதமேற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வன்னி நிலைவரம் தொடர்பில் ஐ.நா.வின் தகவல்கள் நிராகரிக்கப்பட்டமை அப்பட்டமான துரோகமாகும் – ஐ.தே.க.

unp.jpgவன்னி நிலைவரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தகவல்களை ஆராய்ந்து பார்க்காது அதனை உடனடியாகவே நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது அரசாங்கத்தின் அப்பட்டமான துரோகத்தனத்தையே வெளிக்காட்டியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை சாடியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு மூலகாரணமான அரசாங்கமே இதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருந்த கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், அவரது கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தது.

இது குறித்து கேட்டபோதே, ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும், எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கே பெருமளவில் மக்கள் இடப்பெயர்வு

swat-pakkis.jpg பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடக்கும் மக்கள் இடப்பெயர்வு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ருவாண்டா நெருக்கடிக்கு பின்னர் மிகப் பெரும் இடப்பெயர்வு என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடைபெறும் சண்டைகளை தொடர்ந்து இதுவரை 3,60,000 பாகிஸ்தானியர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணிகளுக்குக்கான ஒருங்கிணைப்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களை தங்க வைப்பதற்க்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்க மாட்டாது என்றும் அவர் மேலும் கூறினார்.