அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆயுதக்குழுக்களால் பாதிப்பில்லை – ஐ.தே.கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

laxman_yapa_abeywardena.jpgஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால் வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு போலியான குற்றச்சாட்டாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் நிலவுவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அங்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருந்தால் பொலிஸாரிடம்; முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக ஐக்கிய தேசியக் கட்சி டொக்டர் ஜயலத் ஜயவர்தனாவை நியமித்துள்ளது. அவரிடம் ஆயுதக்கழுக்களின் இடையூறுகள் பற்றி விசாரித்த போது முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றார். எனவே ஆயுதக்குழுக்களினால் தடை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உன்மையும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தா

வவுனியா நகரில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு; சில இடங்களில் காவலரண்கள் நீக்கம்

வவுனியா நகரில் இதுவரை காலமுமிருந்த பாதுகாப்பு கெடுபிடிகளில் தற்போது சற்றுத் தளர்வேற்பட்டுள்ளது. நகரில் சில இடங்களிலிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டு பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நகரசபைத் தேர்தலை முன்னிட்டு சில பாதுகாப்பு செயல்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து தனிப்பட்ட தேவையின் பொருட்டு கொழும்பிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து மதவாச்சி ஊடான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி பெறலாம். அத்துடன், மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடாக போக்குவரத்திலும் சில தளர்வுகள் அடுத்த சில தினங்களில் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

new_appointment.jpgஇலங்கை இராணுவத்தின் அதிஉயர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாகவும் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின்படி  இராணுவத் தளபதி பதவியிலிருந்து நேற்று பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது புதிய பதவிக்கான கடமைகளை இன்று பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 19ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

கனடாவில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை

கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கண்டிக்க அரசுக்கு எவ்வித நோக்கமும் இல்லை – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஊடகவி யலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித நோக்கமும் இல்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

தகவல்களைத் அறிந்துகொள்வதற்கு மக்களுக்குரிய சுதந்திரமான வழிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயந்த கருணாதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவிததிருந்தார். அவர் தெரிவித்திருந்த கூற்றை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் அவரது கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை.

இது தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்துக்கு உத்தேசம் இல்லை. குறைந்தபட்சமாக இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றையோ அல்லது கலந்துரையாடல் ஒன்றையோ அரசாங்கம் நடத்தவில்லை. நாட்டில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதிக்கும் ஊடகங்களின் தலைமை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் யுத்த செய்திகளை நியாயமான முறைக்கு பிரசுரிக்க வேண்டுமென மட்டும் வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

அதைத்தவிர ஊடகங்களை பாதிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.அத்துடன் ஊடகங்களைப் பாதிக்கும் வகையிலான கட்டளைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் ஒரு போதும் கருதியதில்லை  என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியிலிருந்து பிரியாவிடை

comd_last_.jpgஇலங் கையின் 18ஆவது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார். புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்தே ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகிச் செல்கிறார். இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதனையடுத்து இராணுவத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்புக்களைக் கையளித்ததுடன் உத்தியோகபூர்வ வைபவங்களின்போது தனது ஆடையில் சொருகிக்கொள்ளும் வாளையும் வழங்கினார். பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் அபிவிருத்திக்கும் புனரமைப்புக்கும் படையினரின் பூரண பங்களிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 12ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இப்புதிய நியமனத்தின்படி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்

21deva.jpgகடந்த இருபது வருடகால யுத்தத்தால் இழந்துள்ள அனைத்தையும் மீளப் பெற அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இலக்கை இலகுவாக எட்டிவிட முடியுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குடாநாட்டில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா;

எமது மக்கள் கேட்கும் முன்பதாகவே உதவிகளைச் செய்து வரும் நாம் எமது மக்களை ஒருபோதும் கையேந்தும் நிலைக்குத் தள்ளமாட்டோம் என்றும் எனினும் தவறான தலைமைத்துவங்களினால் எமது மக்கள் அவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது தான் அந்நிலைமையில் இருந்து எமது மக்களை மீட்டெடுத்து வரும் நிலையில் மீண்டும் அம்மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிட சில தீய சக்திகள் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் முன்வர எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பலரும் நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றியுள்ள சேவைகள் தொடர்பில் பாராட்டிப் பேசினர். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூவரை மீனவர்கள் மீட்டனர்.

இலங்கையில் இருந்து தோணியில் புறப்பட்டு, நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழ் எழுத்தாளர் உட்பட மூவரை மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் அருகில் மூன்று பேர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல்படையினர், கப்பல் படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த படையினர் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் ஐந்தாம் தீடை அருகே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேரை மீனவர்கள் காப்பாற்றி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சுகந்தன், வவுனியாவை சேர்ந்த யோகராஜ் என்பது தெரியவந்தது. அவர்களில் திருநாவுக்கரசு, இலங்கையில் பல தமிழ் நூல்களை எழுதிய, எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். குடாவில் சகல பொருட்களையும் கொழும்பு விலையில் விற்பதற்கு ஏற்பாடு

யாழ்.  குடாநாட்டில் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல பொருட்களும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுத் தெரிவித்தார். சமூக சேவைகள், சமூக நலன்புரித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசாங்கம் இதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நல்லூர் பிரதேச செயலாளர் ப. செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்வைபவத்தின் போது நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த வியாபாரிகளை நாளை (இன்று) கொழும்பு க்கு வரவழைத்து முக்கிய கூட்டமொன்றை நடத்தவிருக்கின்றோம். இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டில் சகல பொருட்களையும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கு யாழ். குடா நாட்டில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இப்போது பயங்கரவாதப் பிரச்சினை இல்லை. மக்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், வடபகுதி மக்கள் 24 மணி நேரமும் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை

mahinda_raajapakse11.jpgஅணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.

இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

“அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.