அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சிறப்புப் பேச்சாளராக தமிழ் நாட்டை சேர்ந்த வாணியம் பாடி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் அப்துல் காதர் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் சாகித்திய விழா என்பது தனியே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்குமான சாகித்திய விழா என மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாத்தளை மாநகரில் ஒக்டோபர் 10ம், 11ம் திகதி நடைபெறவுள்ள தமிழ் சாகித்திய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் பிரத்தியேக செயலாளர் துரை. மதியுகராஜாவும் கலந்துகொண்டார்.
மாத்தளை மாநகரில் 2002ம் ஆண்டிற்குப் பின் நடக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் முதல் நாள் காலை 9 மணிக்கு கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். இவ் ஊர்வலம் பாக்கியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகும். இதல் ஆளுநர் மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.
2ம் நாள் நிகழ்வில் சாகித்திய விருதுகள் வழங்கப்படவுள்ளன. கட்சி சார்பின்றி கல்விமான்களை கொண்ட குழு இவர்களை தெரிவு செய்யும். இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளும், பணமுடிப்புகளும் வழங்கப்படவுள்ளன. என்றார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்த சிறுவர், சிறுமியர் பங்குபற்றும் நிகழ்வொன்று நேற்று வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மேற்படி சரணடைந்தவர்களுள் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர். இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 500 பேருள் 198 சிறுவர், சிறுமியர்கள் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முழுமையான வரவு- செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதில் தவறேதும் கிடையாதென அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கம் அவ்வாறு ஓர் இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தால், அதற்கான சகல சட்ட வழிகளும் உண்டென்று அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார்
2010 ஆம் ஆண்டுக்கான பாட நூல் விநியோகத்திற்கான ஆரம்ப வைபவம் யாழ். வேம்படி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.
பிரதி கல்வி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் இன்று காணப்படுகின்ற அமைதியான சூழல் காரணமாக ஏறக்குறைய 28 ஆண்டுகளின் பின் ஏ-9 ஊடாக மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ‘கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக பாரிய போக்குவரத்து செலவுடன் யாழ்ப்பாணத்துக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன
கடந்த காலங்களில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கமீது குறை கூறி வந்த மங்கள சமரவீர இன்று அவருடனேயே இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்;. அவர் தொடர்ந்து கூறுகையில். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மங்கள சமரவீரவும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அவர்களின் கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை.
இன்று ரணில் விக்கிரமசிங்கவால் எதையும் சாதிக்க முடியாது என்று குறை கூறி வந்த மங்கள சமரவீர இன்று அவருடனேயே இணைந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவர்கள் இருவரிலும் யாருக்கு வெட்கமில்லை என்பது புரியவில்லை.
மகாவலி போன்ற அபிவிருத்தித் திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என ரணில் கூறுகின்றார். அவர் எந்த உலகத்தில் இருந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றார்?மகாவலி அபிவிருத்திக்கு 5000 கோடி ரூபா செலவாகியது. இன்று நாட்டில் அதற்கும் மேலான பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் காணவில்லையா?
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், துறைமுகங்கள், வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என பல தரப்பட்ட பாரிய அபிவித்தித் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபா செலவாகின்றது. இத்தகைய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் மக்களை திசை திருப்புவதற்காக தவறான கருத்தக்களை அவர் தெரிவிக்கின்றார்.
தேசப்பற்று தேசத் துரோகம் போன்ற வார்த்தைப் பிரயோங்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். பயங்கரவாதத் தலைவருடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது ரணிலின் தேசப்பற்றா? பயங்கரவாதிகளுக்கு நவீன தொடர்புசாதன கருவிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து நாட்டின் பேரழிவுக்கு வழிவகுத்தது அவரின் தேசப்பற்றா?
பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்து நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுத்து ஜனநாயத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி தேசத் துரோகியா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அரச பாதுகாப்பை அரசாங்கம் முறையாக செய்து வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடினோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ் தேவி ரயில் சேவையை யாழ்ப் பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன்துறை வரையான 14 ரயில் நிலையங்களை மீளமைக்கும் பொறுப்புகள் அரச மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இதன்படி புளியங்குளம் ரயில் நிலைய பகுதிகளை அமைச்சர் ரி.பி. ஏக்கநாயகவும் மாங்குளம் ரயில் நிலையத்தை முதலமைச்சர் பேர்டி பிரேமலாலும் ஆனையிறவு ரயில் நிலைய பணிகளை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தும் சாவகச்சேரி ரயில் நிலைய பணிகளை அமைச்சர் நிமல் சிரிபாலவும் ஏற்றுள்ளனர்.
தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான 154.87 கிலோ மீட்டர் தூரத்திற்கு 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றை நிர்மாணிக்கும் பணிகளை 27 நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதோடு 14 நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்பந்தக் கடிதங்கள் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலஹப் பெருமவினால் வழங்கப்பட்டது.
இதன்படி வவுனியா ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணியை களனி கேபள் கம்பனி யும் தாண்டிக்குளம் ரயில் நிலைய பணி களை ரயில்வே திணைக்களமும் ஓமந்தை ரயில் நிலைய பணிகளை சமூக சேவைகள் பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிரியும் புளியங்குள ரயில் நிலைய பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி. ஏக்க நாயக்கவும் மாங்குள ரயில் நிலைய பணிகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவும் ஏற்றுள்ளனர்.
ஏனைய ரயில் நிலையங்களை பொறுப் பேற்றுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு முறிகண்டி-இன்டர்நெசனல் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், கிளிநொச்சி-சிலோன் புகையிலை கம்பனி, பரந்தன்-கைத்தொழில் அமைச்சர் குமார் வெல்கம, ஆனையிறவு-கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த், பலாலி-மக்கள் வங்கி, எழுதுமட்டுவால்- திம்பு லாகல பிரதேச செயலகம், மிருசுவில்- இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட் டுத்தாபனம், கொடிகாமம்- வீ ஸ்ரீலங்கா, சாவகச்சேரி- சுகாதார அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் நேற்று (1) அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். இவர்களில் வடமேல் மாகாண முன்னாள் மு. கா. உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மு. கா. அமைப்பாளருமான எஸ். எச்.எம்.நியாஸ், ஆரச்சிக்கட்டு பிரதேச சபை மு. கா. உறுப்பினரும் மு. கா. அரசியல் அதி உயர் பீட உறுப்பினருமான எஸ். எம். எம். நஸார், ஆரச்சிக்கட்டு பிரதேச சபை முன்னாள் ஐ. தே. க. உறுப்பினர் கே. மகாலிங்கம், கீரியங்கல்லி மு. கா. முக்கியஸ்தரும் வர்த்தகருமான எம். மல்ஹா ஆகியோரும் அடங்குவர்.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் முன்னிலையில் நேற்று (1) அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
மாநகர சபைகள் உட்பட உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான 100 ரூபாவுக்குக் குறைந்த மாத வாடகை கொண்ட வீடுகளை அவற்றில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக சொந்தமாக வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சமர்ப்பித்திருந்தார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீடுகளில் பொது மக்கள் நீண்ட காலமாக வாடகைக்கு குடியிருக்கின்றனர். இந்த வீடுகளுக்கு 100 ரூபாவுக்கும் குறைவான தொகையே வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான வீடுகளை குடியிருப்பவர்களுக்கே இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ். குடா நாட்டின் மோட்டர் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி நிர்மாணப் பணிகள் அரச அபிவிருத்திக்கான பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டிட நிர்மானப் பணிகளுக்கு 19 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.