பாகம் 2:
நேற்றைய போராட்டம்
நாளைய போராட்டம்
“பயன்தரா முயற்சிகள் எனும் புறங்கூறலால் மனத் தடங்கலா? முயற்சியே பயன் என ஏற்றுக்கொள்.
தோல்விகளால் பலமிழந்த தோற்றமா? மாற்றாரால் உன் வெற்றிகள் கிட்டாது என புரிந்துகொள்.
உழைப்பின் பலாபலன் மற்றான் கைப்பொருளா? உழைப்பின் பொருளை மட்டும் உணர்த்திக்கொள்.
பலாபலன்கள் இன்றி வெறும் பயன்படுத்தலால் வருத்தமா? உன்பயனின் அறிவால் உள்ளே உயர்ந்துகொள்.
இருள்சூழ் உலகில் ஏற்றிய ஒளி சிறுதுளி என்ற துன்பமா? உள்ளே உன்னைக் காண அது போதும் எனத் தெரிந்துகொள்.
உள்ளும் புறமும் கண்களென வளர்வே விளக்கமெனக் கொண்டபின், செவ்வனே செய்வன சேவை எனவும் வார்த்தைகள் மௌனம் என்றும் தேர்ந்துகொள்.”
இலங்கைத் தமிழரது அகச்-சூழ்நிலை, புறச்-சூழ்நிலை என்பவை பற்றியும் அவர்களது சமூக- பொருளாதார- அரசியல் வாழ்வுக்கான அன்றாடப் போராட்டத்தின் யதார்த்த-சூழ்நிலை இலட்சியச்-சூழ்நிலை என்பவை பற்றியும் எமது கருத்துக்களை பல தடவைகளில் பலவித கோணங்களில் இருந்து கூறியுள்ளோம், எழுத்து வடிவத்திலும் முன்வைத்து விவாதங்களுக்கும் உட்படுத்தி உள்ளோம்.
இருந்தும் எமது பாகம் 1: வன்னியன் பிரபாகரன் ( இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம் : பாகம் 1) என்ற தலைப்பிலான கட்டுரையைத் தொடர்ந்து சில விமர்சனங்களுள் ஒளிந்த கேள்விகளும் எழும்பி இருந்தன. அவற்றிக்கான பதிலை சிலர் அவசரமாகக் கோருவதால் (demanding) எம்மால் இயன்றவை முதலில்.
கேள்வி: தற்சமயத்தில் மக்களது போராட்டத்தில் ஆயுதப்-போராட்டம் ஒரு அங்கமாக அமைய முடியுமா?
பதில்: இல்லை.
எமது கருத்துக்கு ஒத்துப் போவதே விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் பத்மனாதனது (K.P) வார்த்தைகளும்1.
(குறிப்பு 1: (i) காரணங்கள்:
a. புலிகளின் கைகளில், மக்களின் பாதுகாப்புக்கு ஒவ்வாது என நிரூபிக்கப்பட்ட,
b. மக்களது ஆதரவு அற்று அந்நியப்படும்,
c. சிறீலங்கா தனக்குச் சாதகமாக்கி தமிழர்களை நிர்முலமாக்கிட வரப்பிசாதமாக அமையும்,
d. பிராந்திய ரீதியில், குறிப்பாக இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாத,
e. தற்சமயம் சர்வதேசிய ரீதியில் அதி நெருக்கடிகளுள் தத்தளிக்கும், போராட்ட வழிமுறை அது.
(ii) எம்மைப் பொறுத்தவரை, மக்கள் தமது தற்பாதுகாப்புக்காக ஆயுதம் தரிக்கும் உரிமை உள்ளவர்கள். தற்பாதுகாப்பு என்பது தேசங்களுக்கும் நாடுகளுக்கும் மட்டுமே உள்ள உரித்தல்ல. வெறும் சமூகக் குழுக்களும் அந்த உரிமையை சுயமாகவே கொண்டவை.
(iii) உயிர்கள், சமூகம், மக்கள், என்பவற்றை எவை பூரணமாக வரைவு தருகின்றனவோ அவற்றில் எதனையும் இழந்திடாது காத்திடுவதற்கான முயற்சியே தற்பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.
(iv) தற்பாதுகாப்பு நடவடிக்கை என்பவற்றில் ஆயுதம் தரிப்பது ஒரு வழியேயன்றி, அதுதான் ஒரேஒரு வழி என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது.
(v) தற்பாதுகாப்பு என்பது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை என்பதை, தன்னையோ, தன்னை அண்டிய மக்களையோ, ஏன்? ‘எதிரிகள்’ என கணிக்கப்படுபவர்களையும் அழிக்கவும் உள்ள உரிமை என்று அர்த்தம் கொடுத்திட முடியாது.
அவ்வாறு ஏற்றுக் கொண்டால், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் பாதுகாப்பிற்காக என 2009 இல் மட்டும் 20,000 தமிழர்களை சிறீலங்கா கொன்றொழித்ததும், தமது பாதுகாப்பிற்காக மக்களை அன்று யாழ்பாணத்திலிருந்தும், அண்மையில் யாழ்பாணத்தை நோக்கியும் மக்களை குடிபெயர்த்துச் சென்று ஆயிரக் கணக்கில் நரபலிகொடுத்த புலிகளது நடத்தையும் நியாயப்பட்டுவிடும்.
(vi) அரசியல் அபிலாசைகளை அடைய ஆயுதப்-போராட்டத்தை ‘உரிமை’ அல்லது ‘எமக்கு வலிமை தருவது’ என்ற ரீதியில் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை கேந்திர (strategic) ரீதியில் கணித்து, அதன் வடிவத்தை சமயத்திற்கு ஏற்றவாறு தந்திரோபாயம் (tactics) அமைத்து, அதனால் எதிர்பார்க்கும் விளைவுகள் கிட்டுமா என்ற கேள்வியின் அடிப்படையியேயே முன்னெடுக்க முடியும்.
(viii) இலங்கைத் தமிழரது ஆயுதப்-போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவது பொருத்தமற்ற கணிப்பு என்பதிலும், அது ஒத்தி வைக்கப்பட்ட செயற்பாடாக அமைந்துவிட்டது என்பது சரியானது.
ஆனால், புலிகளது ஆயுதப்-போராட்டம், அவர்களது ஆயுதப் போராட்ட-வடிவம் என்பன தோல்வி கண்டுவிட்டன. புலிகள் ஆயுதப்-போராட்டம் நடத்தினார்கள் என்பதிலும் புலிகள் சிறீலங்காவுடன் போர் புரிந்தார்கள், இறுதியில் நாம் எதிர்பார்த்தது போலவே, அப்போரில் தோல்வி கண்டார்கள் என்பதே பொருத்தமான கணிப்பு.
(ix) தமிழரது தற்பாதுகாப்பிற்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டதாயின், முன்னர் எப்போதிலும் பார்க்க அவர்கள் ஏன் இன்று தோற்கடிக்கப்பட்வர்களாக, சகலதையும் இழந்தவர்களாக, சாதாரண மனித உரிமைகளுக்குக்கூட தலை-நிமிர்ந்து குரல் எழுப்பும் திராணியற்றவர்களாக, தோற்றம் அளிக்கிறார்கள்? தற்பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்திருந்தால் இன்று ஏன் தமது, பிராந்திய, சர்வதேசிய நிலைப்பாடுகளால் வழங்கப்படும் சகல பாதுகாப்புகளையும் இழந்து அநாதரவாக அல்லல் படுகிறார்கள்?
(x) ‘பொல்லுக் கொடுத்து அடிவாங்கிறது’ என்ற உவமையை அறிந்துள்ளோம். தற்பாதுகாப்பு என்ற நோக்கத்தில் கத்திகளைக் காவித்திரிந்து அவற்றாலேயே கொல்லப்படும் அல்லது கொலைகள் செய்யும் இளைஞர்களைப்பற்றி பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களது பாதுகாப்பு அவர்களை மிஞ்சிய விடயம் என்பதையும் நாம் அறிவோம்.)
கேள்வி: அப்படியாயின் ஆயுதப் போராட்டம் என்பதே பிழையான வழியா?
பதில்: இல்லை.
(குறிப்பு 2: (i) ஆயுதப் போராட்டம் என்பது மக்களது தற்பாதுகாப்பு என்பதற்கு அப்பால் ஒரு அரசியல் திட்டத்தின் அங்கமேயன்றி ஒரு வாழ்க்கை முறையல்ல.
(ii) ஆயுதப் போராட்டம் என்றால் அரச தருப்பினருடன் முப்படைப் போரில் ஈடுபடுவது என்பதுமல்ல. ஆயுதப் போராட்டம் என்றதும் ஆயிரக்கணக்கில் ஆட்பலம் சேர்த்து எண்ணுக் கணக்கற்ற படுகொலைகள் செய்திட வேண்டும் என்பதுமல்ல.
(iii) தகுந்த தருணத்தில் அதிஉயர்வான தாக்கத்தை அதிகுறைவான உயிர்ச் செலவுடன், ‘எதிரியும்’ அவர்களது சர்வதேசிய ஆதரவாளர்களும் ‘ஏற்றுக் கொள்ளும் வகையிலும்’ ஆயுதப் போராட்டம் ஒன்றினை நடத்தி இருக்க முடியும், இனிமேலும் யாராவது நடத்திட முடியும்.
(iv) ஆனால், இன்றைய காலத்தில் அக-புற யதார்த்த-இலட்சிய சூழலில், புலிகளது கைகளில் ஆயுதப்-போராட்டம் தொடர்ந்தும் போராகவே இடம்பெறப்போகும் தவறான வழியாகவே அமையும்.)
கேள்வி: போராட்டங்கள் எதற்காக?
பதில்: தமது வாழ்க்கைத் தரத்தை, தமது எதிர்கால சந்ததிகளின் நிலைகொள்ளலை அவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை உயர்த்திடுவதற்காக.
(குறிப்பு 3: (i) இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் பேசும் சமூகங்களும், ஏன் சிங்களம் பேசும் சமூகங்களும்கூட தமது வாழ்க்கைத் தரத்தை உயர்திட முடியாது தமது அன்றாட வாழ்வுக்கு போராட வேண்டி உள்ளார்கள்.
(ii) ஆனால், இவர்களுள் பொதுவாக தமிழ் பேசும் சமூகங்களும், குறிப்பாக வடகிழக்குத் தமிழர்களும், தமிழ் பேசுவோர் என்ற காரணத்தால் மேலதிக அளவில் போராட வேண்டி உள்ளதுடன், தமது சமூகங்களின் நிலை கொள்ளலுக்குக்கூட போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
(iii) தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட மக்கள் சமூகங்களிடையே உள்ள சமுதாயக் குழுக்கள் பல யுக்திகளை கையாள்கின்றன.
a. காலனித்துவத்தின் பின்னணியில் புதிதாக உருவாகிவந்த மத்திய வர்க்கமும் அவற்றைச் சுற்றி வளர்ந்த குட்டி-முதலாளித்துவ வர்க்கமும் ‘தனது நாடு’ என்ற பரப்பளவுக்குள் தனக்கு எதிரான வர்த்தகப் போட்டியைக் குறைத்துக் கொள்ள மொழி-தேசம்-மதம் ஆகிய வேறுபாடுகளை சித்தாந்தங்களாக, வெறியூட்டும் மனோவியல் நம்பிக்கைகளாக முன்வைப்பது சகஜம்.
b. சற்று வளர்ச்சி கண்ட முதலாளித்துவங்கள் பிரதேச-ரீதியில் வர்த்தகம் தேடும்போது சந்தைக்கான போட்டிலும், தனது உள்நாட்டுச் சந்தையை தனக்காக பாதுகாத்துக் கொள்ளவும் ‘நாடுப்பற்று’ என்ற ரீதியிலான சித்தாந்தங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதும் வழக்கம்.
c. முதிர்ச்சி கண்ட முதலாளித்துவங்கள் தமது சர்வதேசியச் சந்தைப் பங்குகளை பாதுகாத்துக் கொள்ளவும், தனது பிராந்தியத்தின் சந்தைகளை தமது கைகளுள் வைத்துக் கொள்ளவும் மற்றைய ‘நாட்டுத் தேசியங்களுடன்’ கூட்டுச் சேர்ந்து பொதுச்-சந்தைகள் என்ற பெயரில் ‘பிராந்திய-தேசிய’ வாதங்களை முன்னெடுப்பது இன்றைய காலத்தில் முக்கியமாக இருக்கிறது.
d. ஆயினும், இப் பிராந்திய-தேசிய வாதங்கள் அடிகொள்வதற்கான காலம் கடந்துவிட்டது போலவே ‘சர்வதேசிய சந்தைப்படுத்தலின்’ புதிய போக்குகள் எமக்கு உணர்த்துகின்றன.
(iv) கடந்த 30 ஆண்டுப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் பேசும் மக்களது, குறிப்பாக வடகிழக்கு மத்திய மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் சமுதாயங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் கீழடைந்துள்ளது. இதனை சமூக-பொருளாதார புள்ளி விபரங்கள் யாவுமே சான்று சொல்லும்.
ஆயினும், போரட்டத்தின் மத்தியில் தமது வாழ்வு, அதன் வெற்றிகள் தோல்விகளில் பெற்ற தனிமனித அல்லது சமூக விழிப்புணர்வு, வெளியேறியவர்கள் வெளி நாடுகளிலும் அவர்களது உதவியுடன் கொழுப்பைச் சுற்றியும் இந்தியாவிலும் வாழும் உறவினர்கள் பெற்றுள்ள பொருளாதார உயர்வினால் கண்டுள்ள வாழ்க்கைத்தரத்தின் நுகர்வு என்பன காரணிகளாக அமைய தாமும் அவ்வளர்ச்சியை பெற்றிய வேண்டும் என்ற உணர்வை பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது முக்கிய விடயம்.
(v) மக்கள் சமூகங்களது பொருளாதார அபிலாசைகளின் வளர்ச்சிக்கு அவர்களது சுற்றாடல் அவசியம் என்ற கூற்றில் பல்-பொருள் அடங்கி உள்ளன.
இங்கிலாந்தில் முதல் வந்தவர்கள் 25 வருடங்களாகப் பெற்ற சமூக-பொருளாதார வளர்ச்சியை 1985 இன் பின் வந்தவர்கள் 15 வருடங்களுள் அடைந்துள்ளனர் என்பது வெறும் சுற்றாடல் என்பதைவிட சுவாத்திய-எதிர்பார்ப்பின்-ஏற்றம் (potential expectation-gratdien) என்பது கூடிய ஊக்கு சக்தியாக அமைகிறது என்பது எமது வாதம்.
அதாவது, மனிதன் தனியவனாகவும், அவசியத்தின் நிமிர்த்தம் சமூகமாகவும், தான் காணவேண்டிய வளர்ச்சியின் ஏற்றம் உயர்வாக இருக்கும்போது, அதனால் பெறக்கூடிய பலாபலனை மற்றவரூடாக நுகர முடியும்போது, அவற்றினை அடையக் கூடிய எதிர்பார்ப்புகளாக உணரும்போது, கூடிய முயற்சியுடன் முன்னேற விளைகிறான் என்பதே பொருள். மனித முன்னேற்றத்தின் போக்குகளை அறிவதற்கான குறிகாட்டிகளில் ஒன்றாக நாம் முன்வைக்கும் இக் கருத்து புதியதாகினும் அவதானிப்புகளுடன் பொருத்தமாகிறது.
இவ்வகையில் வடகிழக்குச் சமுதாயங்களில் பல தொடர்ந்தும் தமது பாரம்பரிய தொழில்களுடாக, தமது பொருளாதார வாழ்க்கையை அமைப்பதற்கு இசைவாக இருக்கப் போவதில்லை என்பதே எமது கணிப்பு.
(vi) முன்னேற்றம் என்பதை எவ்வாறு கணிப்பது என்ற வாதம் மனிதரிடையே எப்போதுமே சர்ச்சையாக, பொருளாதார வளர்வே முன்னேற்றமென மத்திய மேல்மட்ட வர்க்கங்கள் விசை கொடுக்க, எதிர்காலம் என்னவாகும் என பல சமூகங்களில் தமது மொழி, கலாச்சாரம் எனபவை பற்றிய சந்தேகங்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.
புகலிகள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சந்திக்கும் மனச் சங்கடத்தை, சுயவிருப்புடனேயே விலைக்கு வாங்கத் தயாராக உள்ளன ஆசியாவின் பல சமுதாயக் குழுக்கள். இந்தியாவில், குறிப்பாக வளர்ச்சி காணும் தென்இந்திய மாநிலங்களில் சுயபாசைக் கல்வியை நிராகரித்து ஆங்கிலமே முதற்பாசையாக பாடசாலைகளில் ஏற்கப்பட வேண்டும் என்ற வாதம் ஓங்கி வருகிறது. இவ்வாதத்தை கன்னட உயர் நீதிமன்றம் ஆதரித்து தீரப்பு வழங்கியமை மக்கள்-ஜனநாயகத்திற்கு வெற்றியா, அல்லது மக்களது எதிர்கால-பூரண-ஜனநாயகத்திற்கு பலத்த அடியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.)
முன்னோடிகளும் முன்னுக்கு-ஓடுபவர்களும்
இலங்கைத் தமிழர் வாழ்வில் வைகாசி 2009, நவயுகப் பாணியில் கூறினால் 5/18, பாரிய திருப்புமுனை தருவது என்பது சரித்திரவாதிகள் அரசியல் அவதானிகளென இன்னபிற நிபுணர்களதும் கணிப்பு. விடுதலைப் புலிகளின் இறுதி இராணுவத் தோல்வியைத் தளுவிய இந்த முடிவுக்கு மாறுபட்ட முரண்பாடான விளக்கங்கள் உண்டு.
அதேசமயம் முப்பது வருடங்களாக இருந்த யுத்த சூழலும் அதனிடையே உருவாக்கப்பட்ட பயங்கரவாத சுவாத்தியமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற சிறீலங்காவின் அறிவிப்பும், அதுபற்றிய ஐயங்களும், எதிர்பார்ப்புகளும், கனமான வார்த்தைகளையும் விரையமான பேச்சுக்களையும் விளைவிப்பதும் எதிர்பார்க்க வேண்டியதே.
கற்பனையில் தமது மனவிருப்புகளின்படி வளர்த்து வைத்திருந்த எதிர்பார்புகளைத் தாண்டி, சுயசிந்தையுடன் அங்கும் இங்குமாகக் கிடைக்கும் நம்பகமான ஒருசில தகவல்களை மட்டுமே வைத்து கணிப்புகள் கொண்டவன் புலிகளது தோல்வியை ஏற்கனவே எதிர் பார்த்திருப்பான்; ஆயினும் நடந்துவிடக்கூடாது என்ற நப்பாசையையும் சுமந்திருப்பான்.
இவ்வகையில் சிங்கள பெரும் தேசியவாதிகளும் சோனிசவாதிகளும் வளர்த்து வைத்துள்ள சூழலில் புலிகளது தோல்வி எப்படியான நிலைமைகளை உருவாக்கும் என்ற மனப்பயங்களுடன் இருந்தவர்களே எம்மகத்தே பெரும்பான்மையினர். இறுதி வெற்றியில் ஐயங்கள் இருப்பினும் இவர்கள் ஏன் புலிகளுக்கு ஆதரவு தந்தார்கள் என்பதையும் அவர்களது விசுவாசத்தையும்கூட ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
ஆனால், “புலிகளது முடிவை முற்கூட்டியே சொல்லக் கூடிய ஞானிகள் தமிழரிடையே எப்போது இருந்தார்கள் என அதிகார தோரணையுடன் கூறும் குருட்டு புத்தி ஜீவிகளை எவ்வாறு அணுகுவது?”
“எனக்கும் பட்டப்படிப்பு படித்த நண்பர்களுக்கும் தெரியாத விடயங்கள் வேறு எவனுக்கும் எப்படித் தெரிய முடியும்?” என்ற வழக்கில் அமைந்த இந்த வாதத்திற்கு நிச்சயமாக விளக்கம் கூறவோ, வாய்பேசவோ, நியாயங்களை எதிர்பார்க்கவோ முடியாது. விசனம் தோய்ந்த புன்சிரிப்பை பதிலாகத் தந்து விலகிச் செல்வதே உத்தமம், எம்மால் முடிந்த காரியம்.
ஆனால், மாவிலாறு அணைக்கட்டுத் தொடர்பாக எழுந்த போரில் புலிகள் மூதூரை இழந்தபோது, எதிர்காலத்தில்
(1) சிறீலங்கா எப்படி நடந்துகொள்ளப் போகிறது? என்பதிலும் பார்க்க,
(2) இந்தியா தனது பொறுப்புகளை எப்படியான முடிவுகளுடன் நிறைவேற்றப் போகிறது? என்பது முக்கிய வினாவாக அமைய,
(3) புலிகளது போர்திட்டம் எங்கு போய் முடியப் போகிறது? என்று அன்றிருந்தே யாராவது சிந்திக்கத் தொடங்கி இருந்தால்?
சரி, அதுதான் முடியாது போயிருப்பினும்
(1) கிழக்கின் முக்கிய புலிகளே பிரிந்து சிறீலங்கா பக்கம் சார்ந்து புலிகளுக்கு எதிராக போரிட்டு அங்கிருந்து புலிகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து,
(2) கிழக்கில் மாகாணசபை தேர்தல் வைக்கப்பட்டு கிழக்கு-வாதப் புலிகள் பதவி ஏறியபோது,
(3) வடக்கு-கிழக்கு இணைப்பு சிறீ லங்காவின் நீதிமன்றத்தில் துண்டாடப்பட்டது குறித்து அதனை உருவாக்கிய இந்தியா கரிசனமில்லாது இருந்ததை கண்டபோது, சுயசிந்தை இருப்பின் வேறு எந்த முடிவைத்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
ஏன்? இவ்வளவின் பின்னர்கூடத்தான் விழிப்படைய முடியவில்லையா? பறவாயில்லை.
ஆனால், மன்னார்ப் பகுதியில் புலிகளது தடைகளை உடைத்து சிறீலங்கா இராணுவம் முன்னேறி மடுவரை வந்த பின்னாவது கண்கள் திறந்திருக்க வேண்டாமா? அதன் பின்னரும் “கிளிநொச்சி விழுமா பார்ப்போம்” என்ற சவாலுடன் நம்பி இருந்தவர்கள்கூட தமிழர்களது ஞானம்பற்றி வினவும்போது, மற்றவரது அறிவையா அல்லது ‘தான்’ என்ற தமது குருட்டுத் தனத்தின் மமதையில் எழும் மூடமையையா கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்?
இவர்கள் போன்றவரது அவசரக் குடுக்கைத்தனமும் அகங்காரமும் கணக்கில் கொள்ளாது ஒருபுறம் தள்ளி வைக்கப்பட வேண்டியவைதான், ஏன்? இவர்கள் முன்னோடிகளுமல்ல முன்னுக்கு ஓடுபவர்களுமல்ல. இவர்கள் மற்றவர்களால் பயன்படுத்தப்படும் கிலுகிலுப்பைக்காரரே அன்றி இவர்கள் யாருமல்ல.
அப்படியானால் முன்னுக்கு ஓடுபவர்கள் யார்? முன்னோடிகள் யார்?
“மக்களே ஆரம்பமும் முடிவும் என்பதற்கான விஞ்ஞான அறிவுடன், அவ்அறிவுடன் வளர்ந்த இயற்கை தந்த இயல்புகளுடன், சமூக-சிந்தையை என்றும் கைவிடாது, தமது பலவீனங்கள் எவையென உணர்ந்து ஏற்று கருமமாற்றும் அசாத்தியத் தன்மைகளுள்ள சாதாரண மனிதர்களே முன்னோடிகள்.”
ஆதலால் தமது முயற்சிகளை மக்கள் தளத்தில் எடைபோட்ட வண்ணம் இருப்பர், எடைபோடாத கருமங்களில் ஈடுபட மாட்டார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களது ஒவ்வொரு சமூகத் தட்டுகளையும் அங்கெல்லாம் அன்றாட வாழ்க்கையின் அத்தியா அவசியங்களையும் அவற்றின் வாழ்க்கைப் பெறுமதியையும் ஆழப் புரிந்து கொண்டிருப்பர். எனவே தமது ஒவ்வொரு திட்டங்களிலும் அவர்களது அன்றாட வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்ட நீண்டகால வீச்சுள்ள வேலைத் திட்டங்களையும், அவற்றுள் மக்களே முன்னணிப் பொறுப்பை வகிப்பதற்கான வழிகளையும் வகுத்து வைத்திருப்பர். அதுமட்டுமின்றி, காலாகாலத்தில் அவர்களது மதிப்பீடுகளை விமர்சனம் சுய-விமர்சனங்களுடாக அத்திட்டங்களின் அங்கங்களுமாக ஆக்கிக்கொள்வர். முன்னோடிகளது பாங்கில் ‘மக்கள்-மத்தியில்’ எனும்போது மக்களிடையேயான நிலைகொள்ளலில் மட்டுமின்றி மனத்திலும் செயற்பாடுகளிலும் அவர்களே மையமும் எல்லையும் என்ற கருத்தும் உறுதியாக இருக்கும்.
“மக்களின் பலவீனங்களை தமது பலமாக மாற்றி தம்மை முன்நிறுத்திக் கொள்வதால்மட்டுமே மற்றவரது வாழ்க்கையின் ஓட்டங்களை தம்வழிக்கு கொண்டுவர எத்தனிப்பவர்களை முன்னுக்கு-ஓடுபவர்கள் எனச் சித்தரிக்கலாம்.”
சுயஅறிவிலோ சுயஆற்றல்களிலோ இல்லாது, தமது முயற்சிகளுக்கு தம்மைச் சார்ந்தவரது சமூக ஸ்தானத்திலும் அதிகாரத்திலுமேயே தங்கி இருக்கும் இவர்கள் வன்முறையையே மக்களை வழி நடத்தும் கருவியாக வார்த்தையிலும் செயற்பாடுகளிலும் கொண்டிருப்பர்.
ஒரு பார்வையில், இங்கே ஜனநாயகப் போக்குள்ளவர்க்கும் சர்வாதிகாரப் பாங்கில் அமைந்தவர்களுக்குமான குணாம்திசயங்கள் புலப்படுகின்றன. வர்க்கப் பார்வையிலோ, சகல மக்களது பூரணமான வளர்ச்சியை வேண்டி நிற்பவர்க்கும், அதிகாரப் பாரம்பரியத்தில் அமைந்த மேல்மட்ட வர்க்கத்தினரது தொடர்ந்த நிலைகொள்ளலுக்கு முன்நிற்பவர்க்கும் இடையேயானமான வேறுபாடுகளும் தொனிப்பாக அமைவதும் தெளிவாகும்.
கேள்வி: அப்படியானால், ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ சார்பில் குரல் எழுப்புபவர்கள் யாவரும் சுயமாகவே எதுவித தேர்வுகளும் இல்லாமலே முன்னோடிகள் ஆகிவிடுவார்களா?
பதில்: இல்லை.
(குறிப்பு 4: (i) முன்னுக்கு-ஓடுபவர்களும்தான் முன்னோடிகளது வார்த்தைப் பிரயோகங்களை கடன்வாங்கிக் கையாள முயல்வது வழக்கம். முன்னோடிகள் மக்களது பிரதிநிதித்துவம்பற்றிப் பேச தயங்கும்போது, முன்னே-ஓடுபவர்களோ
தம்மை முன்நிறுத்தி தாமே எல்லாம் என மனக் கூச்சம் எதுவுமில்லாமல் பிரகடனமும் செய்வார்கள்.
(ii) மகாபாரதம் பற்றி பலருக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு. சிந்தனையை உணவாகக் கொண்டவர்க்கு அங்கே சகல தீனிவகைகளும் உண்டென்பதே போதும். நாம் “பைபிளை” அல்லது “குர்ரானை” படித்துவிடுவதால் கிறிஸ்தவராக அல்லது இஸ்லாமியராக மாறிட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அதனால் அந்த நூல்கள் கைகளில் கிட்டியதும் கண்களை மூடியபடி விட்டெறிந்திட வேண்டிய தன்நம்பிக்கையற்ற முரட்டுவாதமும் அவசியமில்லை.
“அஞ்ஞாதவாச காலத்தில் தமக்கு புகலிடம் தந்தவர்க்கு கைமாற்றாக, அவர்களது மைந்தனுக்குப் பதிலாக அசுரனது மலை செல்கிறான் வீமன். தனது பிறப்புக் கருமத்தை முடித்துவிட்டு மலை இறங்கிய வீமனை கண்டு அசுரனெனக் கருதி ஊரையேவிட்டு ஓடத் தொடங்கினர் மக்கள். தருமர் தனது குடும்பத்தினரை ஊராருடன் ஓடுமாறு கூறிகிறார். சகாதேவனோ விடயம் தெரிந்த அறிவாளியாகி, “அண்ணா அது வீமனல்லவா? மக்கள் மூடராயின் நாமும்தான் ஏன் சேர்ந்து ஓட வேண்டும்” என்கிறான். விடயங்கள் தெரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் இடையிலான வேறுபாட்டின் உதாரணம் இது.
‘கொலை செய்பவன் எவனும்தான் அசுரன்’ என்பதை நன்கு புரிந்தவர்கள் மக்கள், அவர்கள் மூடர்கள் அல்லர் அநுப-அறிஞர்கள்.
‘விடுதலை செய்து தருகிறோம்’ என்ற கோசத்துடன் சிங்களப் இராணுவத்தினரைக் கொல்வது என்றும், பின்னர் தமிழரிடையே உள்ள எதிரிகளைக் கொன்றும், காலப்போக்கில் தம்மிடையேயும் செய்த கொலைகளைப் கண்டபின் “கொலைகாரன் எப்படியானவன்?” என்ற கேள்விக்கு பதில்கள்தான் எப்படி? கொலைஞனை தோற்றத்தால் அடையாளம் கண்டுவிட முடியுமா? அல்லது அவர்களுக்கு இன மத ரீதிகளில் மச்சங்களும் அடையாளங்களும் உண்டா?
மலை இறங்குபவன் வீமனாகத்தான் இருப்பினும், அதிகொடூரமான அசுரனைக் கொன்றவன் அவன் எப்படியான மனிதனாக இருப்பான்? அவ்வாறு அசுரனைக் கொலை செய்துவிட்டு எப்படியான மனனோவியற் பாங்குடன் திரும்புவான்?
மக்கள் ஊர்விட்டு ஓடுவதைத் தவிர வேறுவழி ஏது?
சரி, மக்கள் மடையர்கள் என்றுதான் கொண்டாலும் அவர்கள் ஓடுகிறார்களே, அவர்களுடன் கூடவே இல்லாவிடில் “வீமன்தான் வருகிறான்” என்ற பேரறிவை எப்படி அவர்களிடம் தெரிவிப்பது? அதனைவிட, “ஏன்தான் ஓடுகிறார்கள் என்பதற்கான காரணங்களை எப்படி அறிவது?”
தருமர் ஒரு முன்னோடி என்பது அவனது சிந்தனை ஓட்டங்களிலிருந்தே புரியும் விடயம்.”)
“முன்னோடிகள் மக்களது அன்றாட வாழ்க்கையின் மத்தியிலேயே தமது சிந்தனைக்கான காரணங்களைப் பெறுகிறார்கள், அவர்களது பாங்கிலிருந்தே இலட்சிய நோக்குகளையும் வரைகிறார்கள். தமக்கும் மக்கள்பற்றிய சிந்தனைக்கும் உள்ள இடைவெளியின் விரிசலே தமது சிந்தனா முடிவுகளின் தேர்ச்சியை மழுங்குபடுத்துவது என்பதை புரிந்தவர்களாக இருப்பார்கள்.
எனவேதான் முன்னோடிகள் மக்கள் செய்யக் கூடியவற்றைச் சொல்வார்கள், மக்களின் சொல்லில் கூடியவற்றை செய்வார்கள்.”
“முன்னுக்கு ஓடுபவர்களோ இலட்சியச் சூழலில் இயலாத காரியங்களை யதார்த்த சூழல்களுள் செய்த முடிவுகளை தமதும் மக்களதும் எதிர்பார்ப்புகளாக முன்கட்டி பொரிமாத்தோண்டிகளாக முடிந்து போவதுடன் மக்களது நிலைமைகளை என்றுமே இல்லாத வகையில் பின்னடைவு செய்திடும் வழிகோலிகளுமாவார்கள்.
குணாதிசயத்தில் அறிவு, கல்வி, இயல்பு, பணம், பலம் என்ற பல காரணிகளை மக்களது நலன் குறித்து தக்க பாவனை செய்யாது, மக்களிலும் பார்க்க தம்மை உயர்வுபடுத்தியே பிரித்துப்பார்க்கும் வகையில் மட்டுமே பாவிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.”
கேள்வி: ஏன் இந்த முன்னோடிகள் முன்னுக்கு ஓடுபவர்கள் பற்றிய அளப்பு?
பதில்: இன்று முன்னுக்கு-ஓடுபவர்கள் நாளைய தலைவர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காக.
(குறிப்பு 5: (i) “புலிகள் ஒழிந்துவிட்டார்கள் இனிமேல் நாம்தான் மன்னர்கள் அல்லது நாமெல்லோரும் மன்னர்கள்” என்றவாறு தன்னிச்சையுடன் செயற்படும் தனிநபர்களும், அமைப்பு வடிவமோ அதற்கென்ற ஒழுங்கோ மாற்றாக தன்ஒழுக்கோ மற்றவர் கருத்துகளை கிரகித்திடும் வழக்கோ இல்லாது சிறு ‘குழுக்களாக’ ஒருவரோடு ஒருவராக இழுபடும் தனிநபர் கூட்டங்கள் ஒரு புறத்திலும்,
(ii) “போராட்டத்தை இன்றும் முன்னெடுத்துச் செல்பவர்கள் நாம்” அல்லது “மக்களது இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுபவர்கள் நாம்” என்றவாறு, இரு துருவ அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் போதிலும் நடைமுறையில் அந்த ஒரேஒரு வழியைக் கடைப்பிடிப்பவர்கள் மறுபுறமாகவும் இருந்து எமது மக்களது வாழ்க்கை முறைகளின் வகைகளை, அபிலாசைகளின் வீச்சினை, அதன் உயிர் உந்தலை, தம்மையும் அறியாது மட்டுப்படுத்திவிடக் கூடும் என்ற எமது கணிப்புகளாலான ஏக்கமே மேற்படி அமைந்த ஒருதலைப்பட்ட எழுத்தோட்டத்திற்கான (monologue) இரு காரணங்கள்.
(iii) “முன்னோடிகளும் முன்னுக்கு ஓடுபவர்களும்” என்ற சொற்தொடரை முன்மொழிந்தவர் தோழர் இரத்தினா.
ஈரோஸ் அமைப்பினை கனெஸ் சங்கர் என்ற இரண்டே இரண்டு தோழர்களுடன் தொடக்கி வைத்தவர், அதனது ஆரம்பகாலச் சித்தாந்திற்கு முற்றிலும் முழுவதிலும் அதிபதி, தனிநபராக ஆரம்பகால வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும் முற்றிலும் உருவாக்கியவர், என்ற சாதனைகளிலும் பார்க்க அவரது கூர்மையான மொழிப் பிரயோகம் மேலானது. அதற்கு சான்று பகர்வன இவைபோன்ற கூற்றுகள்.
ஆனால் அவரது சொற்தொடருக்கு, மேற்படி தரப்பட்டுள்ள விளக்கமோ முற்றிலும் எமது. அதனைக் கூறுவதற்கான ஒரேஒரு காரணம், நாமும் எம்மிடையே உள்ள பல ஒட்டுண்ணிகள் போல அவரது சாதனைகளின் பெருமைகளில் சுரண்டி வாழக்கூடாது என்பதுதான்.
(iv) ஈரோஸினது ஆரம்பகாலக் கூட்டமொன்றில் அதனது போராட்ட வழிமுறைகள் பற்றிய விளக்கத்தை மிகவும் கடமைப் பொறுப்புடன் கூறியவண்ணமிருந்த தோழரைப் பார்த்து “உதெல்லாம் சரி எங்களுக்கு எப்ப துவக்குகள்?” என அங்கலாய்த்தான் அன்றைய இளைஞன் ஒருவன். “துவக்கா தம்பி? துவக்கு!” என தோழர் இரத்தினா சொன்ன பதில் அவரது சொல்வன்மைக்கு இன்னுமொரு அத்தாட்சி என்பதுடன் அதனது பொழிப்பின் விளைவை இன்று நாம் அனுபவிக்கின்றோம் என்றால் மிகையாகாது. “துவக்கே பொருள் என்றும், துவக்காலேயே எல்லாம்” என நம்பி, மாவோ சொன்ன எதையோ குதர்க்கமாக்கி அப்பிசகிலேயே பலியானவர்களையும் அப்பிசகினுள்ளேயே பலியாகிவிட்ட எமது போராட்டத்தையும் பார்க்கும்போது தோழரது சொல் வன்மையை என்னவென்பது? ஆனால், முன் கூறியிருந்தும் பலனற்றுப்போன அவற்றினை எவ்வாறு எடைபோடுவது?
(v) இவற்றினை நாம் மீள் நோக்குவது அன்றைய தொடரை இன்று எடைபோடுவதற்கல்ல. இனிமேலும் அவ்வாறான நிலமைகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதற்காக.)
இன்று ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னர் எமது கட்டுரையின் ஒரு பாகத்தை ஓரமாக வாசித்துவிட்டு “ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவா இல்லையா?” என யாரவது வினவும்போது யாரை நாம் நொந்து கொள்வது? எமது இனத்தையே வைதுகொண்டு புறம்காட்டிடுவது ஒரு வழி, காலத்தை நொந்து கொண்டு வாழாதிருப்பது இன்னுமொரு வழி, இரண்டுமே எமக்கு உகந்தவை அல்ல.
கேள்வி: முன்னுக்கு-ஓடுபவர்கள் முன்னோடிகளாக மாறிட முடியுமா?
பதில்: நாய் வாலை நேராக்க முடியாது, புலிகளது வரிகளை புள்ளிகளாக்கிட முடியாது என்பவை உவமைகள். ஆகவே, தனிப்பட்ட ரீதியில் இது அசாத்தியமான விடயம். ஆனால், கூட்டு முயற்சியில் சில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் ஒருவேளை கூட்டாக நடக்கக் கூடிய விந்தை.
(குறிப்பு 6: (i) பிரபாகரன் இறந்துவிட்டார், பல பிழைகளை புலிகள் செய்துள்ளார்கள், என்றெல்லாம் பல விடயங்களை ஒத்துக் கொள்ளும் புலிகளது புதிய தலைமைப் பீடம்,
a. அவற்றிக்கான காரணிகள், விளக்கங்கள், காரணங்கள், என்ன என்பதை பொதுப்பட்ட விவாதங்கள் விமர்சனம் சுய-விமர்சனங்களுடாக மக்களது அடித்தளத்திலிருந்து அறிந்து கொள்ள முன்வரவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படியாக வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்கவுமில்லை.
b. மாறாக, முன்னர் போலவே சில தனிப்பட்டவர்கள் தம்பாட்டிலேயே அடுத்த நடவடிக்கைகள் பற்றிய முடிவுகளை எடுத்தபின் அவற்றினை ஆலோசனைக்கு விட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
c. தற்போது தம்மிடம் 1500 போராளிகள் இருப்பதாகவும் சிறீலங்கா பேச மறுப்பதால் போரிடவேண்டி நேரிடும் என்கிறார்களே, தமது கடந்த ஆயுதப் போராட்டத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் காப்பற்ற முடியாது போயிற்றே, தம்மை நம்பி வந்த மக்கள் நிர்க்கதியானார்களே, அவர்களது மனநிலை ஆற்றல் சக்தி என்பவைபற்றி சற்றாவது அவர்களுடன் ஆலோசனை செய்திட வேண்டாமா?
(ii) புலிகள் ஒழிந்தால் ஜனநாயகம் பிறக்கும், எமக்குத் தடையாக இருப்பது புலிகள்மட்டும்தான் என்று அடம்பிடித்து சிறீலங்கா-பிரச்சாரத்துடன் ஒத்தாசையானவர்கள்,
c. இன்று “புலிகள் இங்கு இல்லை” என்று சிறீலங்கா சொல்லும் போதிலும் தாம் செயற்பட முடியாதுள்ளமைக்கு சிறீலங்கா சார்பிலேயே காரணங்களும் சொல்லி,
d. “இன்று இவற்றைச் செய்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை” என்றும்,
e. சிறீலங்காவின் முட்கம்பிகளை பொன்-கூடுகளாக்குவதற்கு,
f. முள்வேலிகளுடாக பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழருக்கு தீனி போடுவதற்கு, அங்கும் இங்குமாக அலைகிறார்களே சிலர்.
இவர்கள் தமது கருமங்கள்பற்றி தம்மை மக்களிடம் விமர்சனங்களுக்கு உள்ளாக்கினார்களா? ஆலோசனை கேட்டார்களா?
(iii) புலிகள் சரி, புலிகளுக்கு எதிரானவர்கள் சரி, தமது நடத்தைகளில் ஒரேமாதிரி ஆனவர்கள். மக்களது பலவீனங்களை தமக்குச் சாதகமாக்கும் சித்தாந்தங்களையும் நியதிகளையும் சொல்லி உணர்ச்சிவசமாகி “நல்லது செய்கிறோம்” என்றவாறு மக்களை பாதாளத்துள்ளும் தள்ளிவிடக் கூடியவர்கள். “நரகத்தைப் சென்றடையும் வழியில் ஆயிரம் நல்லெண்ணங்கள் உண்டு” என லெனின் சொல்லி வைத்ததின் விளக்கம் இவர் மத்தியில் நிரூபணமாகும். இவர்கள் சொல்லும் ஜனநாயகமோ இவர்களே நடைமுறையில் கொள்ளாத, அவர்களது பழக்க வழக்கத்தில் என்றுமே இல்லாத, தன்னைப் போன்றவனுக்கு எதிராக பாவிக்கும் ‘பொல்லே’ அன்றி மக்களை மதிக்கும் வழிமுறை அல்ல. இவர்களது வார்த்தைகளில் கூட வன்முறையே செழிக்கும்.)
இன்றைய போராட்டம்
இலங்கைத் தீவில் இன்று எப்படியான நிலமை உள்ளது? எதிரி- தேசியவாதம்- வன்முறை- போர் என்பவற்றை முதன்மைப் படுத்தியதால் எமது மக்களிடையே புலிகள் முன்னணிக்கு வந்து முற்றான அதிகாரமும் செலுத்தினார்கள். புலிகளது தோற்றத்திற்கு சிங்களச் சோவனிசமும் சிங்களப் பெரும் தேசியவாதிகளும் அரசியல் அடிகோலிகளாயின், புலிகளது இராணுவ வெற்றிகளால் அதனது அரசியற் தலைமையை நிச்சயம் செய்தது இந்தியாவாகும். இக்கருத்தை நாம் எண்ணற்ற தறுவாய்களில் கூறியுள்ளோம். இவற்றினால் 30 வருடங்கள் புலிகளது கட்டுப்பாட்டுள் தமிழர்கள் சீவனம் செய்ய, மற்றைய தமிழ் பேசும் சமூகங்கள் தம்மைத் தாமே கவனிக்க வேண்டியவர்களும் ஆனார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழர்களுள் பல சமூகங்கள், குறிப்பாக கிழக்கிலும் குடாநாட்டிலும் வாழ்பவர்கள் அதே முடிவுக்குத் தள்ளப்பட்டார்கள்.
‘எதிரி- தேசியவாதம்- வன்முறை- போர்’ எனபவற்றை முதன்மைப் படுத்தியதால் மகிந்தா தலைமையிலான அரசியல் கூட்டணி சிங்கள மக்களிடையே முன்னணிக்கு வந்துள்ளது. மகிந்தாவின் இராணுவ வெற்றிகளால் அவரது குடும்பத்தினரது அரசியற் தலைமையை நிச்சயம் செய்ததும் இந்தியா ஆகும். உட்கொலைகள் வன்முறை போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள மகிந்தாவே ஏகபோகச் சிங்களத் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிகூடத் தயாராக இருந்தமை, சிங்களவருக்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் தமிழர்கள் ஏற்கனவே படித்த பாடம்.
புலிகளது தலைவர் பிரபாகரனை உலகத் தமிழரது தலைவர் எனவும் சூரியத்தேவன் என்றும் பெருமைப்படுத்தியது போலவே இன்று புலிகளைத் தோற்கடித்த மகிந்தாவுக்கு ‘பௌத்த-மதப்படி’ ஓமமும் வளர்த்து தங்க-வாள் கையளித்து ‘புதிய துட்டகமுனுவாக’ மகுடம் சூடிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
அங்கே தமிழ் பேசும் மக்கள் அல்லது தமிழர்கள், இஸ்லாமியர்களது பிரதிநிதிகள் நாமேதான் என்ற மிக்க பெருமையுடன் பலர் உலகெங்கிலுமிருந்து சிறீலங்கா சென்று பங்குபற்றி விழாவைச் சிறப்படைய வைப்பார்கள் என்பதில் ஐயமுமில்லை.
ஆனால் சிந்திப்பவர்களாக, சற்றே சுயமரியாதை கொண்டவர்களாக, மக்களது பலமுக- வளர்ச்சியில் கரிசனம் கொண்டவர்களாக, ஜனநாயகம் எனும்போது தம்மைப்பற்றி மட்டுமே பேசாதவர்களாக இருப்பவர்கள் இவ்விரண்டு சமூகங்களிடையே ஒன்றைத்- தொட்டு- மற்றதாக இடம்பெறும் சமூக-அரசியல் நிலைப்பாடுகளை, அவற்றின் ஒற்றுமைகளை, சகல கோணங்களிலிருந்தும் அவதானித்திருப்பார்கள்.
இந்தப் போக்கிற்கு சரித்திர, பொருளாதார ரீதிகளில் காரணிகளாக மட்டுமின்றி, உந்து சக்தியாகவும் இருப்பது வல்லரசாகிக் கொண்டுள்ள பிராந்தியப் பலவான் இந்தியாவே என்பதில் அவர்கள் ஆச்சரியமும் கொள்ள மாட்டார்கள்.
சமூகத்தின் மத்திய தட்டுகளில் இருந்து, பராம்பரிய அல்லது எதிர்-நிலைகொள்ளக் கூடிய சித்தாந்தங்களை அப்புறப் படுத்துவதற்கு அதன் சித்தாந்தத்தை உச்சநிலைக்குக் (extreme) கொண்டு சென்று, அவ் உச்சத்தில் தலைமையை கொய்துவிடுவது மிகவும் தேர்ச்சி பெற்ற கேந்திர யுக்தி (extremise to destabilise) என்பதை நாம் தெரிவித்துள்ளோம்.
சீக்கியரது களகிஸ்தான் தேசியவாதத்தை முறியடிக்க, அதனை அக்காலி டால் போன்ற மிதவாத அரசியல் கட்சிகளிடமிருந்து அகற்றிட எவ்வாறு பிந்திரன்வாலே என்ற மதகுரு முன்கொணரப்பட்டு ஒழிக்கப்பட்டார் என்பதை இத்திட்டதிற்கு சான்றாக சில அவதானிகள் அன்று குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, அவ்வாறு ஒரு திட்டம் தமிழ் தேசியவாதம் குறித்தும் இடம்பெற்றதாயின் அது சிங்களப் பெரும்-தேசியவாதத்தையும் கவனத்தில் உள்ளடக்கியே இருந்திருக்கும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக அங்கேயும் பிந்திரன்வாலே, பிரபாகரன் போன்ற உயிர் இழப்புகளுடனேதான் முடிவு அமைய வேண்டும் என்பதல்ல.
கேள்வி: வடகிழக்கு தமிழ் பேசும் சமூகங்களது போராட்டம் எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்: அவர்களது சமூக-பொருளாதார வளர்ச்சி குறித்து நிற்க வேண்டும். முக்கியமாக, அவற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிரானதாகவும் அமைய வேண்டும்.
(குறிப்பு 7: இன்று தமிழர்கள்
(i) காலத்தாலும் பிறத்தியாராலும் நிர்ணயம் செய்யப்பட்ட தலைமையை இழந்து, எத்தலைமையும் இல்லாது தத்தளிக்கிறார்கள்.
(ii) அத்தலைமை செய்த முடிவுகளை யாரும் ரத்து செய்ய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுவிட்டதால் புதிய தலைமைபற்றி சிந்திப்பதற்கே இயலாதுள்ளனர்.
(iii) அவர்களது சமூக-பொருளாதார நிலைமையோ அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சிக்கு ஒத்தாசையாகவே அமைகிறது.
(iv) குறிப்பாக புலிகளாலும், மற்றைய ஒருசில அமைப்புகளாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழர்களை அவர்களது தமிழ்பேசும் சகோதர சமூகங்களிடமிருந்து பிரித்து வைக்க உதவியதுடன், அவை சிறீலங்காவுடன் உள்ள தமது முரண்பாடுகளை தாமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வளர்த்துள்ளது.
(v) புலிகளது இராணுவத் தோல்வி சிங்கள சோவனிச, பெரும்-தேரிய வாதிகளை மேலும் ஊக்குவித்துள்ளது.
(vi) பெரும்பான்மையான சிங்கள மக்களது சமூக-பொருளாதார விருட்சி, குறைந்தபட்சம் மட்டுப்பட்டதாக இருப்பதனால் உழைக்கும் சமுதாயங்களிடையே உதிரி-தொழிலாளப் புரட்சிவாதம்2 (lumpenproletariatinism) வலதுசாரிப்- புரட்சிவாதம் போன்றவை மேலோங்கும் சூழலைத் தருகின்றன.
(vii) ‘பாதுகாப்புத்-துறை’ 3 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் வேலைவாய்ப்பைத் தருவதால் சமூக-அரசியல் நிலைப்பாடுகளை நிர்ணயம் செய்யும் அணியாக உருவாகும் நிலைமை உள்ளது. இவ்வழியில் சில காலத்தில் சிறீலங்காவின் ‘பாக்கிஸ்தான்’ மயப்படுத்தலுக்கான சாத்தியகூறுகளும் உள்ளன.)
கேள்வி: நாம் கூறும் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவையாக அமைய வேண்டும்?
பதில்: ஒன்றிணைப்பு-மனிதாபிமானம்-அதிகாரமயமாக்கல்-மக்கள்போராட்டம் என்பவற்றை உள்ளடக்கிய நம்பிக்கைகளில் எழும் செயற்பாடுகளை கொண்டதாக வேண்டும்.
(குறிப்பு 8: (i) ஒன்றிணைப்பு எனும்போது தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் அதேதருணம் தமது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தடங்கல்களை எதிர் நோக்கும் சிங்கள சமூகங்களுடனும் அடிப்படைச் செயற் திட்டங்களுடான நீண்டகால உறவுகளின் வளர்ப்பையே இங்கு குறிப்பிடுகின்றோம்.
(ii) மனிதாபிமானம் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, ஆனால் அது வெறும் தனிமனித உரிமைகள் பற்றியதல்ல என்று மட்டும் கூறவேண்டி உள்ளோம்.
(iii) அதிகாரமயமாக்கல்2 (empowerment) எனும்போது தனிமனிதனது, சமுதாயங்களது, சமூகங்களது, சமூக-பொருளாதார உடமைகள், அவற்றை நுகர்வதற்கான உரிமைகள் பற்றியே பேசுகிறோம்.
(iv) மக்கள்-போராட்டம் என்பது மக்களது அன்றாட தேவைகளைக் கொண்டு அவர்களது எதிர்கால அபிலாசைகளுக்கான அரசியற் போராட்டம் என்றும், அதற்கான வழிமுறைகள் காலத்துக்கு ஏற்றவையாக, மக்களது சக்திக்கும் செயற்பாடுகளுக்கும் உட்பட்ட, அவர்களது பூரண பங்குடன் இடம்பெறும் வாழ்க்கைப் போராட்டம் எனக் கொள்கிறோம்.)
நேர்மையான கேள்விகள்?
நேரடியான பதில்கள்
“ஈரோஸ் அமைப்பினர் நேரடியாகப் பதில் சொல்வதில்லை” எனும் போலிக் குற்றச்சாட்டு.
அமைப்புகள் ஸ்தாபனங்களுடன் இணைத்து தனிமனிதருக்கு இழிவு தேடுவதும் தனிமனிதர் மேல் பழிகூறி அமைப்புகள் ஸ்தாபனங்களை கழிவாக்க முயல்வதும் பின்தங்கிய சமுதாயங்களில் சர்வசாதாரண விடயம். தன்னிச்சையான, தம்மையும் அறியாத் தூண்டுதல்களால், சில வேளைகளில் திட்டமிட்ட முயற்சிகளால், எழும் உண்மைகளுக்கு பிறம்பான சேறு பூசும் முயற்சிகளுக்கு பதில் கூறுவது கடினமான விடயம் என்பதிலும் பார்க்க அது அவசியமற்ற காரியம் என்பது பொருத்தமான முடிவாகும்.
ஆயினும், கேள்விகளுக்கு பதில்கள்தான் அவசியமானதென்றால் அவற்றைச் சூழ்ந்த விமர்சனங்கள் எதற்கு? ஏன் இந்த அவசரக் குடுக்கைத்தனம்? என்று நாம் வினவுவதில் தவறில்லை.
(குறிப்பு 9: (i) கட்டுரையை முற்றாக வாசித்தவர்கள் நாம் நேரடியான பதில்களைத் தரவில்லை என்ற கருத்தை நிச்சயமாகக் கூறமுடியாது.
(ii) பலவீனமான காலத்தில் மட்டுமின்றி, மிகவும் அதிகாரபலம் கொண்டிருந்த காலத்திலும்தான் புலிகளிடம் சரி, மற்றைய அமைப்புகளிடம் சரி நேரடியான கேள்விகளையும், தனிமனிதர்-மீதில்லா விமர்சனங்களையும் முன்வைப்பதுடன் நிறுத்திவிடாது, ஆக்கபூர்வமான பதில்களையும் ஆலோசனைகளையும்தான் முன்வைத்துள்ளோம்.
(iii) தனிமனிதர்களது, மனிதக் கூட்டங்களது வாழ்வுகள், அவர்களது நடத்தைகள் என்பவற்றினை ஆளும் விதிகள் யாவுமே மிகவும் சிக்கலான, கடினமான (complex) விடயங்கள். அவற்றிக்கு சுலபமான பதில்கள் உண்டு என்று சொல்வதே மடமை, அம் மடைமையின் விரிவாக்கமே இன்று எமது மக்களது அழிவான நிலைமைக்கு காரணம் என்பது யாருக்கும் விளங்கும்.
(iv) விஞ்ஞான வழிகளில் பூரண நம்பிக்கை கொண்டவன் தனது கருத்துகள், திட்டங்கள் யாவுமே மக்களாலும் காலத்தாலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவன என்பதை அடியொட்ட ஏற்றிருப்பான். ஆதலால், அவை பிழையாக இருக்கக்கூடும் என்ற கருத்தையும் சித்தம்-பூராக ஏற்றிருப்பான்.
எனவே, எப்போதும் தான் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்ற வாதத்தில் வன்முறையுடன் ஈடுபடமாட்டான்.
(v) மனிதன் தான் hydrocarbon 2 என்ற இரசாயனக்கூட்டின் பின்னலின் பரிணாம வளர்ச்சி என்று கூறும் போது தனது மூளையும் அதுபோலவே என அவன் உணர்ந்து கொள்பவன்.
எனவே, அறிவு என்பது மனிதரது பொது ஊற்றிலிருந்து பெற்றுக் கொள்ளும் இயல்பு என்றும், அதன் முன்னேற்றம் என்பது அவ்வியல்புகளின் குறுக்கு-மறுக்கான தொடர்புகளால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி எனவும் அவன் உணர்ந்து கொண்டிருப்பான்.
(vi) ஆனால், யாராவது நேரடியான பதில்களை கோரும்போது, மூளைகளுக்கு சுலபமான பதில்களைத் தேடுகிறார்கள் என்ற அச்சமே மேலோங்குகின்றது.
வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கும், ‘மக்டொனாலில்’ வாங்கி விழுங்கும் திடீர் உணவுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்கள் தொகை வெள்ளையர் சமூகங்களில் பெருகிக்கொண்டுள்ள காலத்தில், எம்மிடையே ‘மக்டொனாலின்’ புண்ணாக்ககுத் தீனி பிரபல்யமாகி வருவருவதைக் கண்டு ஆச்சரியப்படக் கூடாது என்பதையே சில விமர்சனங்கள் எமக்கு உணர்த்துகின்றன.)
நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary (ASATiC)
தொடர்புகளுக்கு: academic.secretary@gmail.com
சிறு குறிப்புகள்:
1. C4 News, London, UK, 22.07.09.
2. எமது தமிழ் பதங்கள் “ஆங்கிலத்திலிருந்து நேரடியான மொழிபெயர்ப்பா?” என்ற வாசகரது ஐயத்தில் பிழையே இல்லை.