தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார்.