கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இறக்குமதி செய்யப்பட்ட அதிக போஷாக்குடைய உணவுப் பொருட்களை மீளப் பெற யுனிசெஃப் முடிவு

அனுமதியின்றி அதிக போஷாக்குடைய உணவு வகைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ததாக இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, ஐ. நா. மன்றத்தின் குழந்தைகள் மேம்பாட்டு நிதியமான யுனிசெஃப் அமைப்பு, அந்தப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அதிகபோஷாக்குடைய சத்துணவுப் பொருட்கள், உலகம் முழுவதும் உள்ள சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு யுனிசெஃப் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அந்தப் பொருட்கள், அப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளின் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.

போஷாக்கு குறைவாக உள்ள பலவீனமான குழந்தைகள், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். அவர்களில் 50 சதத்துக்கும் மேற்பட்டோர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் உள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட போஷாக்குடைய குறிப்பிட்ட சத்துணவுப் பொருள் மிகவும் அதிக விலை உடையது என்று கூறும் இந்திய அதிகாரிகள், அதன் வீரியத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாறாக, உள்ளூரிலேயே கிடைக்கும் போஷாக்குடைய சத்துமிக்க பால் வகைகளைப் பயன்படுத்துமாறு யுனிசெஃப் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால், அந்த இரு பொருட்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

மோசடி இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும் – மீள்தேர்தலின் பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும்

election000.jpgஏதாவ தொரு வாக்குச் சாவடியில் மோசடிகள், குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இய க்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.

அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசார பணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன. திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகரசபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவடிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவடிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச்சாவடியும் என்றபடி விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தினமும் 30 கொலை அச்சுறுத்தல்கள்

000-obama.jpgபராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.

அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.  ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுடன் பிரசாரப் பணிகள் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை யாழ். மாநகரசபை,  மற்றும்  வவுனியா நகரசபை, ஆகியவற்றுக்கான இந்தத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றன.

நள்ளிரவுக்குப் பின்னர் கட்சிகளோ,  சுயேச்சைக் குழுக்களோ பிரசாரங்களில் ஈடுபடக்கூடாதென்றும், இதனை மீறிச்செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ஊவாவில் ஊவா மாகாண சபைக்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 21 உறுப்பினர்களையும் அதேபோல் மொனராகலையில் இருந்து 11 உறுப்பினர்களும் என மொத்தமாக 32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென 23 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 600 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களில் இருந்து 32 பேரை தெரிவுசெய்வதற்கு 8 இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் 814 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ன.

யாழ். மாநகரசபை

இங்கு போட்டியிடுகின்ற 4 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக் களில் 23 பேரை தெரிவு செய்வதற்கென 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரு இலட்சத்து 417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக 67 வாக்களிப்பு நிலையங்களும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையைப் பொறுத்தட்டில் இங்கு 11 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 135 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை,  இங்கு 24 ஆயிரத்து 626 பேர் வாக்களிப்பதற்காகத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 18 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

அமெரிக்கர்கள் மூவரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- ஈரான்

iran_composite.jpgஈராக் கிலிருந்து தமது நாட்டின் நிலப்பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று அமெரிக்கர்களை தடுத்து வைத்துள்ளதை இரான் உறுதி செய்துள்ளது.

தமது அண்டை நாடான இராக்கிலிருந்து இரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வடக்கு எல்லை நகரமான மரிவானுக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளா என்பது அறியப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராக்கின் குர்டிஸ்டான் பகுதியில் மலையேறிக்கொண்டிருந்த போது தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைப்பகுதியில் இவர்கள் மூவரும் தற்செயலாக வழிதவறிச் சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களை கூடிய விரைவில் திருப்பியனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலரி கிளிண்டன் இரானைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியாக நிஜாத் இன்று பதியேற்பு – இரண்டு வாரத்தில் புதிய அமைச்சரவை

ஈரான் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமது நிஜாத்,  இன்று தமது பதவியைப் பொறுப்பேற்கின்றார்.

ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதித்  தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அகமதி நிஜாத் அமோக வெற்றி பெற்றார். மிதவாத தலைவரான மிர் ஹசைன் மவுசாவி தோல்வியடைந்தார்.

அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து அகமதி நிஜாத் வெற்றி பெற்றதாக கூறி,  எதிர்க்கட்சித் தலைவர் மிர் ஹசைன் மவுசாவியின் ஆதரவாளர்கள் ஈரானில்,  போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் வன்முறையாக மாறியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மவுசாவி,  முன்னாள் அதிபர் முகமது கடாமி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்நிலையில்,  அகமது நிஜாத்தை ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி,  அதிபராக அங்கீகரித்துள்ளார். பாராளுமன்றத்தில்  இன்று அதிபராக நிஜாத் பதவி ஏற்கிறார். இதை தொடர்ந்து இரண்டு வாரத்தில் அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

‘வாடா’ விதிமுறைகள் – ஏற்குமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு சானியா கோரிக்கை

sania-mirza.jpgஉலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் (வாடா) புதிய விதிமுறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்வர வேண்டும் என டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸாவும், மகேஷ் பூபதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடா அமைப்பின் புதிய விதிமுறைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியமும், வீர்ரகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐசிசிக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சானியாவும், மகேஷ் பூபதியும், இந்திய வீரர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், வாடா அமைப்பின் நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலிருந்து ஊக்க மருந்து பிரச்சினை அறவே ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.

ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் கடமையாகும்.

இந்த ஆண்டு முழுவதும் நான் (பூபதி) எங்கே இருக்கிறேன் என்பதை தொடர்ந்து வாடா அமைப்புக்கு தெரிவித்தவண்ணம் உள்ளேன். இந்த முறையால், தவறுகள் செய்வோரின் எண்ணிக்கை அறவே குறையும்.

பல டென்னிஸ் பிரபலங்களுக்கு இந்த வாடா விதிமுறை அவுசகரியமாக இருந்தாலும் கூட விளையாட்டு உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுள்ளனர்.

அதேபோல நமது கிரிக்கெட் வீரர்களும் இந்த விதிமுறைக்குப் பயப்படாமல், தயங்காமல் அதை ஏற்றுக் கையெழுத்திட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரதான கட்சிகளும் இத் தேர்தலுக்கான தத்தமது இறுதி பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஊவா மாகாண சபைத் தேர்தலும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. இதற்கான பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதாகத் தேர்தல்கள் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கமையவே அனைத்துக் கட்சிகளும் தத்தமது இறுதி பிரதான பிரசார கூட்டங்களை இன்று நடத்தத் தீர்மானித்துள்ளன.

இதன் பிரகாரம் ஊவா மாகாண சபைக்கான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பதுளையில் நடைபெறவுள்ளது.  இதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரதான பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பசறையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஜே.வி.பி.யின் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம்  வெளிமடவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான இறுதி பிரசாரக் கூட்டங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாசையூரிலும் சுண்டுக்குளியிலும் நடத்தவுள்ளது. அத்துடன், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று கற்குளியில் நடைபெறவுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐ.தே.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவுள்ளன.

இதேநேரம், இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைச் செய்யும் வகையிலான ஊடகங்களுடனான விவாதங்களைக் கூட அரசியல் கட்சிகள் நடத்துவதில்லையென்ற இணக்கப்பாடு இம்முறை எட்டப்பட்டிருப்பதாக மேலதிகத் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமனசிறி தெரிவித்தார்.

21 ஆவது தேசிய விளையாட்டு விழா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரு தங்கப்பதக்கம்

basketball.jpg21 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சுவட்டு மைதான நிகழ்ச்சியில் இரண்டு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், குழுப் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது.  இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 21 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று நிறைவு பெற்றது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை வின்சன் டைஸ் விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனரங்க குணரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் 21 கிலோமீற்றர் மற்றும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் போன்றவற்றில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த அ.யசோதா முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.

20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச.ஜனகீரன் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பரிதி வீசுதல் போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆ.கோகுலதாஸ் மூன்றாம் இடத்தினைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட ஆர்.எஸ்.எம்.கிர்ஷான் மூன்றாம் இடம்பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஆண்களுக்கான கபடி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து கலந்துகொண்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.