வடக்கு மாகாணத்தின் தொழில் துறைகள் ஆக்கிரமிக்கும் வேறு மாகாண பட்டதாரிகள் – ஆளுநர் வேதநாயகன் !
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றது. அதனைச் சரிவர இளைஞர்கள் பயன்படுத்தவேண்டும். அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பட்டதாரிகள் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கோரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஆளுநர் வேதநாயகனின் பல்கலைக்கழக கல்வி தொடர்பான கருத்துக்களை சற்று ஆழமாக வடக்கு மாகாண பட்டதாரிகளும் – மாணவர்களும் சிந்திக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ, கணினி மற்றும் விஞ்ஞான துறைகளை சேர்ந்த மாணவர்கள் இலகுவாக தொழில் வாய்ப்புகளை பெறுகின்ற போதும் கூட கலைப்பாடங்களை தெரிவு செய்த மாணவர்கள் சுமார் 5 தொடங்கி 10 ஆண்டுகள் வரை வேலை ஒன்றுக்காக காத்துக்கொண்டு இருக்கும் சூழலே காணப்படுகின்றது. பல்கலைக்கழக தெரிவின் போது கலைப்பிரிவிலும் சில பாடங்கள் தொழில்சந்தை வாய்ப்பை கொண்டுள்ள போதும் கூட தமிழ் மாணவர்கள் இந்து நாகரிகம், வரலாறு, கிறிஸ்தவ நாகரிகம், புவியியல், நடனம், நாகம் ஆகிய பாடங்களையே தெரிவு செய்கின்ற போக்கு தொடர்கிறது.
மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு தொழிற்சந்தைக்கு ஏற்றது போன்றதான கணினி அறிவு , ஆங்கில அறிவு நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறன்கள் கூட விருத்தி செய்யப்படாமலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளியேறுவதாக கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தேசம் திரை நேர்காணலில் பங்குபற்றிய ஜேர்மன் டெக் அதிபர் தர்மநாதன் பல கோடி ரூபாய்கள் பெறுமதிமிக்க இயங்கும் கிளிநொச்சி ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் நாற்பது வீதம் கூட யாழ்ப்பாண, கிளிநொச்சி மாணவர்கள் கற்க வருவது கிடையாது. வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்தே மாணவர்கள் அதிகமாக வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் தென்னிலங்கை பாடசாலைகளில் இன்னமும் செயற்பாட்டு நிலையில் உள்ள தொழில்துறை பாடங்களை உள்ளடக்கிய பதின்மூன்று வருட உத்தரவாத கல்வி செயற்திட்டம் கூட வடக்கு மாகாண பாடசாலைகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை கல்வியை தொடர முடியாமல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூலிவேலைக்காக செல்லும் அபத்தமான சூழல் வடக்கின் பொறுப்பற்ற – தொழில்துறை பற்றிய அறிவற்ற ஆசிரியர்களாலும் , பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான கடன் ஒப்பந்தத்தில் புதிய அரசாங்க வேலைவாய்ப்பு நியமனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் புதிய பட்டதாரி நியமனங்கள் எதுவுமே தற்போதைக்கு சாத்தியமில்லை என கூறப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையிலேயே தொழில்சந்தை வாய்ப்பில்லாத பாடங்களை தெரிவு செய்ய வேண்டாம் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/share/p/1BaoTiALrb/