செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் 29, 30 இல் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.

எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது.  சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.

தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

54 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

housemaids.jpgசவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வந்த 54 பெண்கள்  நாடு திரும்பியுள்ளனர்.  தாங்கள் பணிபுரிந்த இடங்களில் போதிய சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், கஷ்டமான வேலைகளை தங்களுக்கு வேலைத் தளங்களில் செய்யுமாறு வற்புறுத்தியதுமே நாடு திரும்பியதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஜென்துல்லா அமைப்பின் 13 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர் புடைய 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஷிஆ முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்டதால் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, போதைவஸ்து வியாபாரம் மற்றும் வெளிநாட்டோரைக் கடத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை “ஜென்துல்லா” என்ற அமைப்புக்காகச் செய்து வந்தனர்.

சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழும் ஷியா முஸ்லிம்களுக் கெதிராக சதி வேலைகள் செய்து ஈரானின் அமைதியான ஆட்சிக்குத் களங்கம் ஏற்படுத்தியோர்களாவர். ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் ஷெஹ்டான் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் இவர்களின் உறவினர்களும் இதற்காக அழைக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக மாகாண தலைமை நீதிபதி கூறினார்.

இதில் ஜென்துல்லா அமைப்பின் தலைவர் அப்துல்லா மலிகின் சகோதரரான அப்துல்லா ரஹீமும் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹ்டான் ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஆப் கான், பாகிஸ்தான் எல்லைகளிலுள்ளது. இங்கு தான் ஷெஹ்டான் சிறைச்சாலையுள்ளது.

போதை வஸ்துக் கடத்தல்கள் அதிகம் நடை பெறும் பகுதியான இங்கு ஈரான் அரசுக்கெதிராக ஜென்துல்லாக்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதற்கு ஜென்துல்லாவே உரிமைகோரியது.

ஈரான் விமான விபத்தில் 169 பேர் பலி

iran-plane.jpgஈரானில் 169 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனிய தலைநகர் யெரவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.

தெஹ்ரானுக்கு வட மேற்கே 75 கி.மீ. தொலைவில் கஸ்வின் என்ற நகருக்கு அருகே ஜன்னதாபாத் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது.

விமானம் சிதறிவிட்டதாகவும் அதன் பல பாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் கஸ்வின் அவசரகால உதவி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிலிருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது.காஸ்பியன் ஏர்லைன்ஸ் ஈரான்-ரஷ்யா இணைந்து நடத்தி வரும் கூட்டு நிறுவனமாகும்.

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் கூட்டமைப்பினர் ஆர்வம்

sampanthr.jpgவவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனித்துவமான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார் என தெரியவருகின்றது.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியதும்  பெரும்பாலும் இந்த வார இறுதியில் அவரது பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இக்கடிதம் கிடைத்து, கூட்டமைப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்குவாரானால்  பெரும்பாலும் அடுத்த வாரம் அளவில்  இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது “உதயன்”, “சுடர் ஒளி” நிறுவனத்துக்கு

sudaroli_.gifஇலங் கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கான  அதிஉயர் கௌரவ விருது “உதயன்” “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்ற போது இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடு களுக்கான பத்தாவது விழா நேற்றிரவு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருணா றோய் பங்குபற்றினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான ” சேபால குணசேன”விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது. அச்சுறுத்தல்கள், வன்முறை மிரட்டல்கள், உச்ச நெருக்கடிகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் யாழ்.குடாநாட்டில் இருந்து சளைக்காது போராடி வரும் “உதயன்”நிறுவனத்துக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷத்தின் மத்தியில் “உதயன்”,”சுடர் ஒளி”ஆசிரியர் என். வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
 
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த  விருது வழங்கும் நிகழ்வு ஆரம் பிக்கப்பட்ட போதும்  “துணிச்சலான பத்திரிகைக்கான விருது” உதயன் பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

tsunami111.jpgநியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.

முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆயுதக்குழுக்களால் பாதிப்பில்லை – ஐ.தே.கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

laxman_yapa_abeywardena.jpgஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால் வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு போலியான குற்றச்சாட்டாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் நிலவுவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அங்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருந்தால் பொலிஸாரிடம்; முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக ஐக்கிய தேசியக் கட்சி டொக்டர் ஜயலத் ஜயவர்தனாவை நியமித்துள்ளது. அவரிடம் ஆயுதக்கழுக்களின் இடையூறுகள் பற்றி விசாரித்த போது முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றார். எனவே ஆயுதக்குழுக்களினால் தடை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உன்மையும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தா

வவுனியா நகரில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு; சில இடங்களில் காவலரண்கள் நீக்கம்

வவுனியா நகரில் இதுவரை காலமுமிருந்த பாதுகாப்பு கெடுபிடிகளில் தற்போது சற்றுத் தளர்வேற்பட்டுள்ளது. நகரில் சில இடங்களிலிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டு பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நகரசபைத் தேர்தலை முன்னிட்டு சில பாதுகாப்பு செயல்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து தனிப்பட்ட தேவையின் பொருட்டு கொழும்பிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து மதவாச்சி ஊடான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி பெறலாம். அத்துடன், மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடாக போக்குவரத்திலும் சில தளர்வுகள் அடுத்த சில தினங்களில் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

new_appointment.jpgஇலங்கை இராணுவத்தின் அதிஉயர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாகவும் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின்படி  இராணுவத் தளபதி பதவியிலிருந்து நேற்று பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது புதிய பதவிக்கான கடமைகளை இன்று பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 19ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.