நியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.
முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.