இலங் கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கான அதிஉயர் கௌரவ விருது “உதயன்” “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்ற போது இந்த விருது வழங்கப்பட்டது.
இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடு களுக்கான பத்தாவது விழா நேற்றிரவு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருணா றோய் பங்குபற்றினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான ” சேபால குணசேன”விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது. அச்சுறுத்தல்கள், வன்முறை மிரட்டல்கள், உச்ச நெருக்கடிகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் யாழ்.குடாநாட்டில் இருந்து சளைக்காது போராடி வரும் “உதயன்”நிறுவனத்துக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷத்தின் மத்தியில் “உதயன்”,”சுடர் ஒளி”ஆசிரியர் என். வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு ஆரம் பிக்கப்பட்ட போதும் “துணிச்சலான பத்திரிகைக்கான விருது” உதயன் பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.