வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனித்துவமான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார் என தெரியவருகின்றது.
அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியதும் பெரும்பாலும் இந்த வார இறுதியில் அவரது பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இக்கடிதம் கிடைத்து, கூட்டமைப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்குவாரானால் பெரும்பாலும் அடுத்த வாரம் அளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.