செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!

பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு கட்டணங்களை அறவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

bus.jpgயுத்தம் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதும் கொழும்பு – யாழப்பாண தனியார் போக்குவரத்து பஸ்களின் தொகை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போக்குவரத்து பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு விதமான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன. சொகுசு பஸ்கள். அரை சொகுசு பஸ்கள் என போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பிற்கு 600ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கட்டணமாக அறவிடுகின்றன.  இது தொடர்பாக தற்போது பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jaffna_to_Colombo_Bus_Servicesஇது பற்றி பஸ் உரிமையாளாகள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்  பயணச்சீட்டை விநியோகம் செய்யும் முகவர்களே இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுவதாக கூறுகின்றனர். இதே வேளை, பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை செய்துள்ளது.

நாகர்கோவில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி நீதிமன்றில் ஒப்படைப்பு.

வடமராட்சிக் கிழக்கிலுள்ள விநாயகர் ஆலயத்தின் பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் சில பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட விநாயகர் ஆலயம் ஒன்றிலிருந்தே பழமை வாய்ந்ததும். பெறுமதி வாய்ந்ததுமான இரு விநாயகர் விக்கிரகங்கள் மற்றும், வேல் போன்றவை அவற்றின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வடமராட்சி கிழக்குப் பகுதிகள்  யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வன்னியிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். வன்னியில் இடம்பெயர்ந்திருந்தவர்கள் தற்போது வவுனியா முகாம்களிலும் வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மீள்குடியேற்றம் இன்னமும் நடைபெறவில்லை. எனவே, குறிப்பிட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் குறித்த ஆலயத்திடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

”நடிகர்கள் இலங்கைக்கு பயணிக்க முடியும்.” – தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

Sarathkumar_Actorஇந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (இது பற்றி வெளியான செய்தியும் விவாதமும் : அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம் )

இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று சென்னையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதில் நடிகர், நடிகையர் இலங்கைக்கு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டம் கூடியது.

இந்த வருடத்துக்கான பொதுக்குழு கூட்டம், சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் நேற்று காலை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

றுகுணு மாணவன் மரணம் தொடர்பான பொலிஸாரின் கருத்தை ஜே.வி.பி. நிராகரிப்பு

றுகுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த கருத்தை ஜே.வி.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் மாணவரமைப்பின் உறுப்பினரொருவரால் தலையில் தாக்கப்பட்டு கடுமையான காயங்களின் விளைவாக வியாழன் இரவு றுகுணுப் பல்கலைக்கழக மாணவன் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஜே.வி.பி. உறுப்பினரும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.யுமான அநுர குமாரதிஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது றுகுணு பல்கலைக்கழக மாணவன் ஜே.வி.பி. மாணவர் அமைப்பின் உறுப்பினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அநுரகுமார நிராகரித்துள்ளார்.

சுசந்த அருண பண்டார என்ற 25 வயது மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸாரின் அறிக்கைகள் இதுவரை முரண்பட்டவையாகக் காணப்பட்டதாக அநுரகுமார கூறியுள்ளார். அருண பண்டார இயற்கையாக மரணமெய்தியதாக முதலில் பொலிஸார் கூறியதாகவும் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் அநுரகுமார தெரிவித்திருக்கிறார். தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன் பின்னர் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரே தாக்கியதாக ஜே.வி.பி.யிடம் தொடர்புபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், மற்றொரு மாணவனே தனது மகனைத் தாக்கியதாக அந்த இறந்த மாணவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். அந்த மாணவனை அடையாளங்கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் ஜே.வி.பி. பணியாளர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஊவா பரணகமவைச் சேர்ந்த பஸநாயக்க என்பவரே அந்த மாணவரென அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சனிக்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.

மலையகத்தில் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் பரிந்துரை

மலையகத்தில் அரச நிர்வாக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரை அறிக்கை எதிர்வரும் (28) புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ள இந்த ஆலோசனை அறிக்கை 145 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலையக அரச நிர்வாக எல்லை மீள்நிர்ணய ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 195 கிராம சேவையாளர் பிரிவுகளும், 13 பிரதேச செயலாளர் பிரிவுகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்று முன்மொழியப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏழு பிரிவுகளைப் புதிதாக உருவாக்க வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அது தொடர்பில் இறுதியான விரிவான பரிந்துரைகளைத் தயாரிக்கவென கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தேவராஜ் தெரிவித்தார். மேலும், மலையகப் பெருந்தோட்டங்களை உள்வாங்கும் அரச நிர்வாகக் கட்டமைப்புகளுக்குத் தோட்டத் தமிழ் இளைஞர், யுவதிகளை நியமிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தெங்குப் பொருள் ஏற்றுமதி மூலம் ரூ. 24 பில். வருவாய் – பிரதமர்

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் தற்போது 24 பில்லியன் ரூபா வருடாந்த வருமானமாகக் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதனை 75 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறினார்.

தெங்குச் செய்கையாளர்களின் வருடாந்த கூட்டம் நேற்று (25) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது :- நாட்டில் தற்போது அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ளதால் தெங்கு செய்கையாளர்கள் தமது நடவடிக்கைகளை சிரமங்களின்றி மேற்கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் தெங்கு செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாடு முழுவதும் தெங்கு செய்கையை பிரபல்யப்படுத்த முடிந்தால் தெங்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் வருமானத்தை மும்மடங்காக அதிகரிக்க முடியும் என்று பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் எச்சரிக்கை

புகலிடம் வழங்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துன்புறுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்ற அடிப்படையில் புகலிடம் அளிப்பதோ அல்லது அகதி அந்தஸ்து வழங்குவதோ சட்டவிரோத மற்றும் முறையற்ற புலம்பெயர்வை மறைமுகமாக ஊக்குவிக்கும் நடவடிக்கை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சட்டவிரோதமான முறையில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை விரிவுபடுத்தியிருப்பதாகவும் குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்கள் பொருட்களைக் கடத்திச் செல்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கூறியுள்ளார்.

வியட்நாமின் கனோயில் இடம்பெற்ற 17 ஆவது ஆசியான்மாநாட்டின் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத முறையற்ற புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிப்படைத்தன்மை வாய்ந்த கொள்கைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் இடமாற்றுத் தரிப்பிடமாக மற்றும் புலம்பெயர்வுகளை உள்ளீர்க்கும் நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் மக்கள் முறையற்ற நகர்வுகள் என்பவற்றுக்கு ஊக்குவிப்பு அளிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ருஹுணு பல்கலை மாணவன் மரணம் தொடர்பில் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார்

மரணமான ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அருணபண்டாரவை தாக்கியதாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பண்டார தனது தாயிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ருஹ¥ணு பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்கும் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்க என்ற சந்தேக நபர் தீவிர ஜே. வி. பி. ஆதரவாளர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மாணவரின் மரணம் குறித்து நேற்று பொலிஸ் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை பொலிஸ் மாஅதிபர் நடத்தினர். இச்சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான மேற்படி மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென இரண்டு சி. ஐ. டி. பொலிஸ் குழுக்களும் இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

மரணமான பண்டாரவின் தாயார், சீ. ஐ. டி. பொலிஸாருக்கு நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு பதுளை ஆஸ்பத்திரியில் 32வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது மகனை பகல் உணவுடன் பார்க்கச் சென்றேன். ‘என்னடா மகனே… பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி பொலிஸார் அடிக்கும் வரை என்னடா செய்து கொண்டிருந்தாய்…? என்று கேட்டேன்.

என்னை பொலிஸார் அடிக்கவில்லை அம்மா… என் அறைக்குள் வந்து ‘பஸ்ஸா’ தான் என் தலையில் பொல்லால் அடித்தான். என் முதுகிலும் அடிபட்டது என மகன் கூறினான். யாராடா அந்த ‘பஸ்ஸா’ எனக் கேட்டேன். எனக்கு கீழ் மட்டத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தான் எனக் கூறினான்’ என பண்டாரவின் தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். பண்டார தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் அவரது மரணவாக்கு முலமாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது என்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

சீ.ஐ.டி. பொலிஸாருக்கு தான் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்கவைக் கைது செய்ய விசேட பொலிஸ் தனிப்படைகள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. ஊவா பரணகமவி லுள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது அவர் அங்கு இருக்கவில்லை. சந்தேக நபரான பஸ்நாயக்கா எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார். பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு ள்ளனர். சந்தேக நபரான பஸ்நாயக்கவின் பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை செய்த போது இவர் தீவிர ஜே.வி.பி. ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

மரணமான மாணவன் தொடர்பாக பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட அனை த்து சாட்சியங்களும் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மரணம் தொடர்பான இறுதி தீர்ப்பு நீதிமன்றமே வழங்கும். அந்த மாணவரை பொலிஸார் தாக்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றார்களே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, இரண்டு சீ.ஐ.டி. குழுக்களும், இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சாட்சி யங்களை அவர்களிடையே ஒப்படைக்கலாம். ஆனால், அவை பொய் சாட்சியங்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ருஹுணு பல்கலை: முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மேற்படி மாணவனின் மரணம், பல்கலைக்கழகத்தின் பதற்றநிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதேவேளை இம்மரணம் தொடர்பாக இதுவரை கிடைக்கப் பெற்ற அறிக்கைகள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸ் திணைக்களம் நடத்தும் இவ்வாறான விசாரணைகளின் விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றார்.