மலையகத்தில் அரச நிர்வாக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரை அறிக்கை எதிர்வரும் (28) புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
மலையகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ள இந்த ஆலோசனை அறிக்கை 145 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலையக அரச நிர்வாக எல்லை மீள்நிர்ணய ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 195 கிராம சேவையாளர் பிரிவுகளும், 13 பிரதேச செயலாளர் பிரிவுகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்று முன்மொழியப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏழு பிரிவுகளைப் புதிதாக உருவாக்க வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அது தொடர்பில் இறுதியான விரிவான பரிந்துரைகளைத் தயாரிக்கவென கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தேவராஜ் தெரிவித்தார். மேலும், மலையகப் பெருந்தோட்டங்களை உள்வாங்கும் அரச நிர்வாகக் கட்டமைப்புகளுக்குத் தோட்டத் தமிழ் இளைஞர், யுவதிகளை நியமிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.