தெங்குப் பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் தற்போது 24 பில்லியன் ரூபா வருடாந்த வருமானமாகக் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதனை 75 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறினார்.
தெங்குச் செய்கையாளர்களின் வருடாந்த கூட்டம் நேற்று (25) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது :- நாட்டில் தற்போது அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ளதால் தெங்கு செய்கையாளர்கள் தமது நடவடிக்கைகளை சிரமங்களின்றி மேற்கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் தெங்கு செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நாடு முழுவதும் தெங்கு செய்கையை பிரபல்யப்படுத்த முடிந்தால் தெங்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் வருமானத்தை மும்மடங்காக அதிகரிக்க முடியும் என்று பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.