செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டில்.

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகளை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வந்துள்ளது. இவ்வகையில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இராசாயனக் கூட்டுத்தாபனம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை என்பனவற்றை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை புனரமைக்கும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெறும் கைத்தொழில் கண்காட்சியில் யாழ்.பிரதிநிதிகள்:

சீனாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் துறையைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இக் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று புதன்கிழமை பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சீனாவின் ஹட்டன நகரில் எதிர்வரம் 15அம் திகதி தொடக்கம் 21அம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பெறப்படும் அறிவு, அனுபவத்தினூடாக யாழ். மண்ணில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே தமது நோக்கம் என இங்கிருந்து இக்கண்காட்சியில் கலந்து கொள்ள செல்லும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உடையார்கட்டில் புலிகளின் விமானக் குண்டுகள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குளக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நிலத்தடி பதுங்குகுழி ஒன்றிற்குள்ளிருந்து புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. புலிகளின் வான்படைப் பிரிவிற்குச் சொந்தமான 75 கிலோ, 50 கிலோ நிறைகளையுடைய 11 விமானக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு அடி நிளம், இரண்டரை அடி அகலம் கொண்ட நான்கு விமானக் குண்டுகளும், அதே அளவையுடைய 50 கிலோகிராம் எடையுள்ள ஏழு விமானக் குண்டுகளும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் இலகு ரக விமானத்தில் இத்தகைய குண்டுகளையே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடைவ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் பிரஜைகள் குழுத்தலைவர் கதிர் பாரதிதாசன் நல்லிணக்க ஆணைக்கழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்.

விசுவமடுவில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. மேல் விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்குவதாக கூறிய நீதவான் நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கிளிநொச்சி விசுவமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சில நாட்களின் பின்னர் வீட்டில் தனியாகவிருந்த இரு பெண்கள் மீது பாலியல் வல்லறவு புரிந்ததாக நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது சகோதரன், பெண்ணின் பத்து வயது மகன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள் கிழமை மாலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ். செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் டகளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கள் மாவட்டங்களின் பிரச்சினைகளை விளக்கிக் கூறுவதற்கு ஒவ்வொரு அரச அதிபருக்கும் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், நாளை புதன்கிழமை வவுனியாவிற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வரவுள்ளதாகவும், அபிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வந்துள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் தொழில் வாய்ப்பு தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிதை நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் நேற்று திங்கள்கிழமை யாழ். போதனா வைத்திசாலைக்குச் சென்று தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒரு குழுவினர் மல்காந்தி என்பவர் தலைமையில் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி அவர்களைச் சந்தித்து தங்கள் பெயர் விபரங்கள், கல்விச்சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டி தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியினை சுகாதார அமைச்சுத்தான் மேற்கொள்ளும் என வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்ததாகவும் தெரியவருகின்றது.

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு

lankan-airlines.jpgரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக்
கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது.

ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பாக சனார்கொம்மின் தலைவர் சாத் அல்பத்தா விளக்கமளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பையடுத்தே அவர் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். அல்பியாவுக்கும் சனார்கொம்முக்குமிடையில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையை கௌரவிக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தடையை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைக்கிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரம்,இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் போக்கு மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஆரியவதிக்கு அண்மையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விடயங்களை கவனத்திற்கு எடுத்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறோம் என்று சார்த் அல்பத்தா கூறியுள்ளார்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் சவூதிஅரேபியாவுக்கு எதிராக ஆரியவதி விவகாரம் பாதிப்பான பிரபல்யத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆதாரமற்ற விதத்தில் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் இத்தகைய சர்ச்சைகளின்போது பிரஜைகளின் உரிமைகளும் மதிப்பும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதியாக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளூர் தொழிலாளர் ஒழுங்கு விதிகளை மீறியுள்ள ஆட்திரட்டல் முகவரமைப்புகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை 42,906 வீட்டுப் பணியாளர்களை சவூதிக்கு அனுப்பியிருந்தது. இந்த வருடத்தின் முதல் அரையாண்டுப் பகுதியில் 19 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டிருக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட சுமார் 5 இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் சவூதிஅரேபியாவில் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, சனார்கொம்முக்கும் அல்பியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருகுணுகே கூறியுள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றாலும் சிறையில் மடிந்தாலும் விஷமிகளின் முன்னால் ஒருபோதும் மண்டியிடமாட்டேன் – பொன்சேகா

sarath_.jpgஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றாலும் அல்லது சிறையில் இறந்தாலும் கூட தான் ஒருபோதும் விஷமிகளின் முன்னால் மண்டியிடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொன்சேகா இதனைத் தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தலைநகர் கொழும்பின் வீதிகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஊர்வலம் சென்றனர்.அவரின் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பணியாளர்களும் அவரின் மனைவி அனோமா பொன்சேகாவும் வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அவர்கள் கறுத்த ஆடைகளுடன் சென்றனர். “குரூரமான இந்தப் பழிவாங்கல்களுக்கு முடிவு கட்டுங்கள்” என்று வாசகம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் கொண்டு சென்றனர். செப்டெம்பர் 30 இல் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக நேற்றைய நிகழ்வு காணப்பட்டது. எமது யுத்த கதாநாயகனுக்கு தவறாக வழங்கப்பட்ட நீதியை சீர்படுத்துவதற்கான முயற்சி இதுவென ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி. திரான் அலஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு – நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்

முப்பது பேர் அடங்கிய அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (Unitetd State Trade Representative- USTR)  பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.