இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு

lankan-airlines.jpgரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக்
கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது.

ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பாக சனார்கொம்மின் தலைவர் சாத் அல்பத்தா விளக்கமளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பையடுத்தே அவர் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். அல்பியாவுக்கும் சனார்கொம்முக்குமிடையில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையை கௌரவிக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தடையை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைக்கிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரம்,இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் போக்கு மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஆரியவதிக்கு அண்மையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விடயங்களை கவனத்திற்கு எடுத்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறோம் என்று சார்த் அல்பத்தா கூறியுள்ளார்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் சவூதிஅரேபியாவுக்கு எதிராக ஆரியவதி விவகாரம் பாதிப்பான பிரபல்யத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆதாரமற்ற விதத்தில் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் இத்தகைய சர்ச்சைகளின்போது பிரஜைகளின் உரிமைகளும் மதிப்பும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதியாக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளூர் தொழிலாளர் ஒழுங்கு விதிகளை மீறியுள்ள ஆட்திரட்டல் முகவரமைப்புகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை 42,906 வீட்டுப் பணியாளர்களை சவூதிக்கு அனுப்பியிருந்தது. இந்த வருடத்தின் முதல் அரையாண்டுப் பகுதியில் 19 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டிருக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட சுமார் 5 இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் சவூதிஅரேபியாவில் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, சனார்கொம்முக்கும் அல்பியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருகுணுகே கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *