எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையை நோக்கி நகர்கிறது ‘ஜல்’ சூறாவளி

jal.jpgதிரு கோணமலையிலிருந்து 750 கிலோ மீட்டருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணி ப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்று தெரிவித்தார். இச்சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.

இச்சூறாவளி குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திருமலையிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த 3ம் திகதி இத்தாழமுக்கம் உருவானது. இது நேற்று முதல் சூறாவளியாக மாறி நகர ஆரம்பித்திருக்கிறது. இச் சூறாவளிக்கு ‘ஜல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இச்சூறாவளி மணித்தியாலத்திற்கு 15 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர்களாக உள்ளது. இச்சூறாவளி இன்று 6ம் திகதி இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதாவது, திருமலையிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்குள் இச் சூறாவளி வந்து சேரும். அச்சமயம் இச்சூறாவளி தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் இன்று ஊடகங்களில் வளிமண்டலத் திணைக்களத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இச் சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்டியபடி கடலில் பயணம் செய்யும் என்பதால் அதன் தாக்கத்தை அப்பகுதி மக்களால் அதிகம் உணரக் கூடியதாக இருக்கும். அப்பிரதேசங்களில் இடி,மின்னலுடன் தொடர் மழை வீழ்ச்சி காணப்படும். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். இச்சூறாவளி காரணமாக அதிகரித்த காற்று, இடி, மின்னல் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இச்சூறாவளி காரணமாகவே கடல் கொந்தளிப்பாக உள்ளது. அதனால் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இச் சூறாவளியின் விளைவாகவே காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அப்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிய காரணத்தினால் அவரது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து அவர் சாட்சியமளித்துள்ளதோடு ஆணைக்குழவின் விசாரணைகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் முல்லத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றபோது, இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தஞ்சமடைந்திருந்ததாகவும் அவர்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19-01-2009 அன்று முல்லை மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கும்படி படையினர் தமக்கு தொலைநகல் முலம் அறிவித்ததாகவும், தான் இதன்படி சகல கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை எனவும் புலிகளுக்குத் தெரியாமலேயே அவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவ்வாறு செல்ல முற்படுகையில் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றப் போரில் பல அப்பாவிப் பொதுமக்கள் இறக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவில் இருந்த மக்கள் புலிகளினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலேயே இருந்தனர். புலிகள் மக்களோடு மக்களாக இருந்து படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதால் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சினாலும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களினாலும் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகள் எற்பட்டன. போர் கடுமையாக இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து வெளியே பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிபரான தான் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டச்செயலக ஊழியர்கள் சிலரும் உயிரிழந்தனர். பொதுமக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 20 வீதமானவற்றை புலிகள் கொண்டு சென்றனர். புலிகளின் தடையையும் மீறி போர் நடைபெற்ற பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளோடு சென்று படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சென்ற மக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. இன்னும் உயிருடனிருக்கும் பலரிடம் இது குறித்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்”

-இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி கலை நிகழ்வு.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தீபாவளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 51வது படைப்பிரிவினால் நடத்த ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்விற்கு யாழ்.மாநகரசபை இறுதி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டதாக படைத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்கு யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபறவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வையொட்டி 10 ஆயிரம் பெரிய மின்குமிழ்கள் மற்றும், 75 ஆயிரம் மின்குமிழ்களைக் கொண்டு யாழ். வேம்படிச் சந்தியிலிருந்து நிகழ்ச்சி இடம்பெறும் பகுதிவரை அலங்கரிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு தமிழரசுக் கட்சியினர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நான்கு தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தமிழசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போது அவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகக்கிளை இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணக் கிளை இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகத்தின் கிளையொன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி கொழம்பில் நடைபெறவுள்ள இலங்கை -இந்திய பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்ளவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்தக் கிளைகளைத் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர் இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படவிருக்கும் காங்கேசன்துறைக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகளையும், ஓமந்தையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் எனவும், இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாம்.

யாழ்.மக்களின் நலன்களுக்காக ஜேர்மன் நாடு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தூதுக்குழுவினருக்கும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாகநரசபை கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் மாநகரசபைக்கான புதிய கட்டடங்களை நிர்மானிப்பதற்கும், யாழ்.நகருக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கும் ஜேர்மன் அரசு உதவி வேண்டும் என மாநகரசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் அரசாங்கம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும், கடந்த 20 வருடங்களில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜேர்மன் நாட்டு நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ஏனஸ்பேகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்று நிறுவப்பட ஜேர்மன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்! – யாழ் முஸ்லீம்களின் 20 வருட அனுபவப் பகிர்வு.

Osmaniya Collegeயாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட  நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும்

இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம்

காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)

பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்

விசேட விருந்தினர்: வணக்கத்திற்குரிய திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்

Agenda:

Parade on the Divested Muslim Area
Theme Presented by Dr H S Hazbullah

Panel Presentation

Brief History of Jaffna Muslims up to 1990 – by Mr M M M Ajmal
Displaced Life of Jaffna Muslims – by Mrs M H Sharmila

The Practical Challenges of the resettlement

பேச்சாளர்கள் :
கலாநிதி எச்.எஸ்.ஹஸ்புல்லா
திரு எம்.எம்.எம். அஜ்மால்
திருமதி எம்.எச்.சர்மிளா
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ்
எஸ்.ஏ.சி.முபீன்
திரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி
திரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்
சேக் அயூப் அஸ்மின் (நலீமி)
ஏ.கே.சுவர்காகான்

Organised by:
Social Educational & Development Organisation (SEDO)
Ulema (Muslim Theologians) Association of Jaffna
Jaffna Muslim Professionals Forum (JMPF)
Jaffna Civil Society for Equality (JCSE)
Jaffna Muslim Development Committee (JMDC)
School Development Society of Osmaniya College (SDS)
Muslim Members of Jaffna Municipal Council (MMCs)
Trustees of Jaffna Mosques and
Research and Action Forum for Social Development (RAAF)

._._._._._.
 தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் : த ஜெயபாலன்

தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகை 2007 மார்ச் 10ல் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது.

இன்று (ஒக்ரோபர் 30 2010) நடைபெறவுள்ள ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு: தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

._._._._._.

தமிழ் – முஸ்லீம் மக்கள் புவியியல் ரீதியாக ஒருவரோடு ஒருவர் உறவாடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதும் புறச்சூழல் அவர்களை பகைமையுடனும் சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் வாழ நிர்ப்பந்தித்து உள்ளது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் சிதைவடைய ஆரம்பித்துவிட்டது. காலத்திற்குக் காலம் முஸ்லீம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் எழுந்தமானமான தனி மனித தாக்குதல்களில் ஆரம்பித்து திட்டமிட்ட இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு என்ற பரிமாணத்தைப் பெற்றது. இன்று தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் அதன் அடி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும் இரு இனங்களினதும் எதிர்காலத்திற்கு இந்நிலை மாற்றி அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த கடினமான பாதையை செப்பனிடுவதில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு மார்ச் 10 2007ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற இந்த சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகளை வலுப்படுத்துவத்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, அதை நோக்கிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இச்சந்திப்போ இந்த சிறப்பு மலரோ உதவுமாக இருந்தால் அது ‘தேசம்’ சஞ்சிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அமையும்.

தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுள் ஓடுக்குமுறையாளர்களாகவும் இரட்டைவேடம் போடுவது தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொச்சைப்படுத்தி உள்ளது. இதன் துரதிஸ்டம் என்னவெனில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் யாரும் உலக வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வில்லை என்பது மட்டுமல்ல தமது சொந்த வரலாற்றில் இருந்தும் அதனைக் கற்றுக்கொள்ளத் தவறி உள்ளனர். வரலாற்று படிப்பினைகளைக் கற்று தம் போக்கை மாற்றியமைக்காத வரை வரலாறு மீளவும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே வரும் என்பது இயங்கியல் விதி. தமிழீழ விடுதலைப் போராட்டமும் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது.

தமிழ் பேசும் மக்கள், தமிழர்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்திற்குள் முஸ்லீம் சமூகத்தை அடக்க, அடைக்க முற்பட்ட தமிழ் தேசியவாதம் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதன் ஆற்றாமை விஸ்வரூபம் எடுத்து தேசியவாதத்தின் உச்ச நிலைக்குச் சென்றது. தேசியவாதம் அதன் உச்ச நிலையில் பாசிச பரிமாணத்தை எடுக்கும் என்பதை தமிழ் தேசியவாதம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லீம் சமூகத்தின் மீதான படுகொலைகளும், அவர்கள் தங்களது தாயகப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டமையும் முஸ்லீம்களது துயரமான வரலாறு மட்மல்ல தமிழின வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள் என்பதையும் தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.

இந்த வரலாற்றுக் கறையை நீக்க மறப்போம் மன்னிப்போம் என்ற சம்பிரதாய வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது. உண்மையான, நேர்மையான, கடினமான உழைப்பின் மூலம் இரு சமூகங்களும் மற்றைய சமூகத்தினரின் இதயங்களை வென்றெடுக்க வேண்டும். முஸ்லீம் சமூகமே ஒடுக்கப்படும் சமூகமாக இருப்பதால் தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்துவதில் தமிழ் சமூகம் முன்னிலைப் பாத்திரம் எடுக்கவேண்டும். முஸ்லீம் மக்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோளோடு தோள் நின்று தமிழ் சமூகம் போராட வேண்டும். இதன் மூலமே வரலாற்றின் தவறுகளை சீர்செய்ய முடியும்.

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளை புனரமைப்பு செய்ய இராணுவம் அனுமதி!

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளைப் புனரமைக்க இரணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த ஆறு வீதிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளவையாகும். இவ்வீதிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘வடக்கின் வந்தம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 40.2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

நாகர்கோவில் பஸ் போக்குவரத்து வீதி, கயட்டை பஸ் போக்குவரத்து வீதி, யவுக்காநகர் வீதி, நாகதம்பிரான் கோவில் வீதி, முருகன் கோவில் வீதி, நாகதம்பிரான் கடற்கரை வீதி, ஆகிய ஆறு வீதிகளுமே புனரமைக்கப்படவுள்ளன. இப்பிரதேசத்தில் அண்மைக் காலத்திலேயே மீள் குடியேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மரக்கன்றுகள் உள்ளிட்ட பொருட்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு வன்னிச் சந்தைகளில் விற்பனை.

வன்னிப் பிரதேசங்களில் அனைத்து பயிர்வகைகளும் அழிவடைந்துள்ளதால் மரக் கன்றுகள் உட்பட பலதும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும், தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக வன்னியில் அதிகளவில் காணப்பட்ட வாழை மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால் வாழைப்பழங்கள் யாவும் யாழ்ப்பாணத்திலிருந்தே வன்னிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. நடுகைக்காக வாழைக் கன்றுகளும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல, மரவள்ளித்தடிகள், தென்னங்கன்றுகள், பல வகையான மரக்கன்றுகள் போன்றவையும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வன்னியில் கோழிகள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், திருகோணமலை கின்னியா பகுதிகளிலிருந்து இவை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பிற்குத் தெரிவான பாடசாலைகளின் விபரப் பட்டியலை மீளாய்வு செய்யுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைத்துத் தருமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இந்திய அரசாங்கம் பாடசாலைகளைப் புனரமைக்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.