இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணக் கிளை இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகத்தின் கிளையொன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி கொழம்பில் நடைபெறவுள்ள இலங்கை -இந்திய பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்ளவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்தக் கிளைகளைத் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவர் இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படவிருக்கும் காங்கேசன்துறைக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகளையும், ஓமந்தையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் எனவும், இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.