எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யு.எஸ்.ஓபன்: சானியா-கோவர்ட்சோவா மோதுகின்றனர்

sania-mirza.jpgவரும் திங்களன்று அமெரிக்காவில் துவங்கும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை ஆல்கா கோவர்ட்சோவாவுடன், சானியா மிர்சா மோதுகிறார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் 2-வது சுற்றுக்கு மேல் முன்னேற கடுமையாக திணறி வரும் சானியா மிர்சா தற்போது 71-வது தர நிலையில் உள்ளார், கோவர்ட்சோவா 64-வது தர நிலையில் உள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து 2 முறை விளையாடியுள்ளனர். இருவரும் ஒரு போட்டியில் ஒருவரையொருவர் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் இந்த முறை முதல் சுற்றே சற்று கடினமாக அமைந்திருக்கும் வேளையில் போராடி சானியா வெற்றி பெற்றாலும் இரண்டாவது சுற்றில் சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகளை வீழ்த்தி விரைவில் நட்சத்திர தகுதியை நோக்கி முன்னேறி கொண்ரிருக்கும் 10-வது தர நிலையில் உள்ள இத்தாலி வீராங்கனை ஃபிளாவியா பன்னெட்டாவை சந்திக்க நேரிடும்.

எனவே இந்த முறையும் இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் சானியாவின் ஆட்டம் பன் மடங்கு உயர்ந்தால் பன்னெட்டாவை அவர் வீழ்த்தலாம்.

‘தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்’ – லியாம் பொக்ஸிடம் கோரிக்கை

liyam_pox-111.jpgஇலங் கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை

santhanam-nuclear_blast.jpgஇந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.

அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.

போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.

ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படியும் இந்தியாவில்..

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் டோனியுடன் ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்காக தனக்கு வருமானம் தந்த ஒரே சி.டி. கடையையும் விற்று போண்டி ஆகி உள்ளார் ஒரு வாலிபர். அவரது பெயர் ரவீந்திரகுமார் சைனி. 23 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் சஹராங்பூரை சேர்ந்தவர்.

இவருக்கு விரைவில் சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இருவரும் டோனியின் தீவிர ரசிகர்கள் என்றாலும் சோனியாவை விட சைனிக்கே டோனி என்றால் கொள்ளைப் பிரியம். ‘டோனியுடன் இணைந்து உங்களால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று சோனியா ஒரு நாள் சவால் விட்டார். சவால் மட்டுமல்ல, தனது ஆசையும் அது தான் என்று சைனியிடம் கூறினார்.

இதையடுத்து வருங்கால மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ. 25 ஆயிரம் முதலீடு போட்டு ஆரம்பித்த கடையை வெறும் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று விட்டு டோனியை பார்க்க ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கிளம்பினார் சைனி. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள டோனியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். டோனியின் சகோதரர் நரேந்திராவை சந்தித்து பேசியும் கூட, டோனியை பார்க்க இயலவில்லை. இப்படி 35 நாட்கள் தவம் கிடந்த அவரது கனவை கடைசியில் சில பத்திரிகையாளர்கள் நிறைவேற்றினர்.

அவர்கள் உதவியுடன் மும்பைக்கு புறப்பட இருந்த டோனியை ராஞ்சி விமான நிலையத்தில் சைனி சந்தித்தார். அப்போது தனது வருங்கால மனைவியின் சவால் மற்றும் ஆசையைபற்றி எடுத்து கூறி அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தனது வருங்கால மனைவிக்காக தான் நடத்திய கடையை விற்று ஒரு மாத காலம் அலைந்து திரிந்து இதை செய்ததில் சைனிக்கு துளி கூட வருத்தம் இல்லையாம். புகைப்படம் எடுத்து கொண்ட தகவல் அறிந்ததும் சோனியா ரொம்ப ஆச்சரியப்பட்டதாக சைனி தெரிவித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை அவருடன் நேரில் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கொண்டு வந்த பணம் எல்லாம் காலியாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ராஞ்சியில் ஜெய்பால்சிங் மைதானம் அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  அது சைனியின் ஊரைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடை. ரயில் டிக்கெட் எடுக்க பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவேன் என்றும் சைனி தெரிவித்தார்.

அங்குலான பிரதேசத்திலிருந்து இரு கிளேமோர்கள் நேற்று பிற்பகல் மீட்பு

clay_new.jpgமொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரண்டு கிளேமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகத்தின் பேரில் கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்தக் கிளேமோர்கள் மீட்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் தற்போது குழந்தைகளுடன் மீட்பு

அமெரிக்காவில் பெண்ணொருவர் சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த இடம் எனத் தெரியும் வீடொன்றை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.

11 வயதிருந்தபோது இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். ஜெய்சி டூகர்ட் என்ற இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவரும் இவ்வளவு காலமும் கட்டடங்கள் மற்றும் கூடாரங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிள்ளைகள், ஜெய்சியைக் கடத்தி அடைத்துவைத்திருந்தவருக்கு பிறந்த குழந்தைகள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜெய்சியின் குழந்தைகளுக்கு தந்தையென குற்றஞ்சாட்டப்படுபவர்
இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ சென்றதில்லை என பொலிசார் கூறுகின்றனர். 1991ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஜெய்சீ காரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

ஜெய்சி,கடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுபவருடன் பிள்ளைகளோடு அவர்கள் தங்கியிருந்த சான்ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் நிலையம் வரும் வரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாதிருந்தது.

ஆசியாவின் நோபல் பரிசு

asian_nobal.pngஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்ற பிலிப்பைன்சில் வழங்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இவ்வருடம் ஆசிய நாடுகளைச் சோந்த ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு யூ ஷியோகாங் (சீனா)  தீப் ஜோஷி (இந்தியா)  கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து),  மா ஜுன் (சீனா),  அன்டானியோ அபோஸா ஜூனியர் (பிலிப்பின்ஸ்),  கா ஹிஸா வா (மியான்மர்). ஆகியோர் தெரிவாகயுள்ளனர்.

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கௌரவித்து இந்த விருது அரசுப்பணி,  சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.

மேல் நீதிமன்ற கட்டடத்தின் பகுதி நேற்று இடிந்து விழுந்துள்ளது.

cort0000000.jpgகொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தின்போது உச்ச நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமையினால் யாரும் காயங்களுக்கு உள்ளாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். கட்டடத்தின் நான்கு தூண்கள் முறிந்து வீழ்ந்தமையினாலேயே கூரையின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இலங்கை 339 ஓட்டங்கள் முன்னிலை

2nd-test.jpgகொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து  ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள்  எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.

மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள்  எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வானம் அழுது……….. : நோர்வே நக்கீரா

idp tamils

வானம் அழுது……..

அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.

அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.

அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.

வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.

கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.

இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.

பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.

வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.

எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.

சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.

ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.

புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.

வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.