இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் டோனியுடன் ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்காக தனக்கு வருமானம் தந்த ஒரே சி.டி. கடையையும் விற்று போண்டி ஆகி உள்ளார் ஒரு வாலிபர். அவரது பெயர் ரவீந்திரகுமார் சைனி. 23 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் சஹராங்பூரை சேர்ந்தவர்.
இவருக்கு விரைவில் சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இருவரும் டோனியின் தீவிர ரசிகர்கள் என்றாலும் சோனியாவை விட சைனிக்கே டோனி என்றால் கொள்ளைப் பிரியம். ‘டோனியுடன் இணைந்து உங்களால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று சோனியா ஒரு நாள் சவால் விட்டார். சவால் மட்டுமல்ல, தனது ஆசையும் அது தான் என்று சைனியிடம் கூறினார்.
இதையடுத்து வருங்கால மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ. 25 ஆயிரம் முதலீடு போட்டு ஆரம்பித்த கடையை வெறும் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று விட்டு டோனியை பார்க்க ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கிளம்பினார் சைனி. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள டோனியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.
அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். டோனியின் சகோதரர் நரேந்திராவை சந்தித்து பேசியும் கூட, டோனியை பார்க்க இயலவில்லை. இப்படி 35 நாட்கள் தவம் கிடந்த அவரது கனவை கடைசியில் சில பத்திரிகையாளர்கள் நிறைவேற்றினர்.
அவர்கள் உதவியுடன் மும்பைக்கு புறப்பட இருந்த டோனியை ராஞ்சி விமான நிலையத்தில் சைனி சந்தித்தார். அப்போது தனது வருங்கால மனைவியின் சவால் மற்றும் ஆசையைபற்றி எடுத்து கூறி அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தனது வருங்கால மனைவிக்காக தான் நடத்திய கடையை விற்று ஒரு மாத காலம் அலைந்து திரிந்து இதை செய்ததில் சைனிக்கு துளி கூட வருத்தம் இல்லையாம். புகைப்படம் எடுத்து கொண்ட தகவல் அறிந்ததும் சோனியா ரொம்ப ஆச்சரியப்பட்டதாக சைனி தெரிவித்தார்.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அவருடன் நேரில் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கொண்டு வந்த பணம் எல்லாம் காலியாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ராஞ்சியில் ஜெய்பால்சிங் மைதானம் அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அது சைனியின் ஊரைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடை. ரயில் டிக்கெட் எடுக்க பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவேன் என்றும் சைனி தெரிவித்தார்.