எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது

britishtroops.jpgஇராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சி மாநாடு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அறிவிப்பு வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரலுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இரு தேர்தல்களும் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்றும் அமைச்சர்கள் அண்மைக்காலமாக சூசகமாகக் கூறிவருகின்றனர். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இரு வருடங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான கருத்துகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் அரசியல் தீர்வால் மட்டுமே மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் – முகர்ஜி

1411prafp.jpgஇலங்கையில் அரசியல் தீர்வு திட்டமொன்று ஏற்படுவதன் மூலம் மட்டுமே இன-மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த லக்ஷ்மண் கதிர்காமரின் நான்காவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றிய போது அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

5வயது குழந்தை கழுத்து நெரித்து கோரக் கொலை வென்னப்புவயில் சம்பவம்

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவமொன்று வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.குழந்தையின் தந்தையுடன் கூலித் தொழிலுக்கு செல்லும் நபரே இந்த படுகொலையை செய்துள்ளார். சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால தெற்கு பகுதியில் வசிக்கும் குழந்தையின் தந்தையும் சந்தேக நபரும் ஆற்றில் மணல் அள்ளும் கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். சம்பவ தினம் மாலை குழந்தையின் தந்தையும், தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரும் வைக்கால இல்லத்துக்கு வந்துள்ளனர். இருவரும் மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தந்தைக்கு தெரியாமல் தங்கொட்டுவ வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன் உடலை ரயில் பாதையருகே வீசியுள்ளார்.

போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : மல்வத்த பீடாதிபதி அறிவுரை

“மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கை விளக்கக் கோவையினை ஐக்கிய தேசிய முன்னணியினர் மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.  நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

புலமைப்பரிசிலில் சித்தியடைந்தவர்களுக்கு விரைவில் பாடசாலை – கல்வி அமைச்சு நடவடிக்கை

261009school_child_dp.jpgஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கிடைத்து மூன்று வார காலத்திற்குள் புதிதாக பாடசாலைகளை கேட்டுள்ளவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது. புதிதாக பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் அதிபர்களிடம் சமர்பிக்கவேண்டிய கால எல்லை கடந்த 12 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளது. அந்த விண்ணப்பங்களை அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு பணித்துள்ளது. திங்கட்கிழமைக்குள் அவற்றை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

‘அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதில்கள் சாதகமாக அமைந்தது’ புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம்

நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.

இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.

இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் – Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று  தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் – மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி – அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.

பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.

இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பொன்சேகாவின் கடிதத்துக்கு பொருத்தமான பதில் அளிக்க ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவு – சீருடையில் எழுதிய கடிதம் வெளியானது நெறிமுறையற்றது; அமைச்சர் சமரசிங்க

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதி கோரியும் தனது இந்த தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கப்படுத்தியும் எழுதிய கடிதத்திற்கு சரியான பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனரல் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு அனுமதி கோரி அதற்கான காரணங்களை 3 பக்கங்களில் விளக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கே உரிய பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் இந்த பதிலை ஜெனரல் பொன்சேகாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் விதம் மனிதாபிமானமற்றதென குறிப்பிட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோதே மஹிந்த சமரசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விபரங்கள் தனக்குத் தெரியாதென உத்தியோகபூர்வமாக மறுத்த அமைச்சர் சமரசிங்க கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற வகையில் ஜெனரல் பொன்சேகா சீருடையுடன் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பிற இடங்களுக்கு வெளியிடப்பட்டிருக்குமானால் அது நீதி நெறிமுறைகளுக்கும் நேர்மைக்கும் முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.  இந்த நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெற உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுமதி வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு நாளை

041109ma.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நாளை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் கெத்தாராம விளையாட்டரங்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான நாட்டில் நடத்தப்படவுள்ள இம்மாநாடு பிரமாண்டமான ஏற்பாட்டுடன் நடைபெறுவதுடன் இம்மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள 35 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய சர்வதேச ரீதியில் இயங்கும் சுதந்திர கட்சி கிளைகளின் அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் ஒரு இலட்சம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வரென மாநாட்டின் சார்பில் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சர்வதேச பிரதிநிதிகள் நேற்று முதலே வருகை தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாளர்கள் உப தலைவர்கள் பேராளர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

மாநாட்டையொட்டிய பிரமாண்டமான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தேசிய சர்வதேச கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு விசேட ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருபவர்களுக்கென விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மாநாடு இடம்பெறும் பகுதியை ஊடறுக்கும் போக்குவரத்துப் பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டையொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்காவது பதவிப் பிரமாண நிறைவும் (19ம் திகதி நிறைவு கூரப்படுவதால் இம்மாநாடு விசேடம் பெறுகிறது.

நாடு தேர்தல்களிரண்டை எதிர்கொள்ளவுள்ள இன்றைய கால கட்டத்தில் இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ள தீர்மானங்கள் சகல தரப்பினரதும் ஆர்வங்களைத் தூண்டியுள்ளன. அத்துடன் அடுத்து வருவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்பதை வெளிப்படுத்துவதாகவும் இம்மாநாடு அமைகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 58 வருட அரசியல் வரலாற்றைக் கொண்டது. நான்கு முக்கிய தலைவர்கள் இதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன் பல்வேறு சவால்கள், தடைகளுக்குள்ளும் முன்னேறும் கட்சியாக அது திகழ்கிறது. குறிப்பாக கடந்த 30 வருட காலமாக நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதிச் சூழல் நிலவும் தருணமொன்றில் அதற்குக் காரணமானவராகத் திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இம்மாநாடு சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.