விஸ்வா

விஸ்வா

பயங்கரவாதத்தை தடுக்க சிவில் பாதுகாப்புக் குழுக்கள் – மட்டு பொலிஸ் அத்தியேட்சகர்

சிவில் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதைத் தடுக்க தடுக்க முடியும் என மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதையும், மீண்டுமொரு யுத்தம் எற்படுவதையும் தடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கரணாரட்ண தெரிவித்துள்ளார். 

கடந்த புதன் கிழமை மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உயர்மட்ட மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிராமங்களில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் இந்த சிவில் பாதுகாப்பு குழுக்களுடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரம்!

dengue22222.jpgஇலங்கை யில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் 11 பேர் டெங்கு நோயினால் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதத்தில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3,222 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளிகளின் தொகை 19,117 இற்கு மேல் எனவும், டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் மீண்டும் பரவி வருவதாகவும், சில வைத்தியசாலைகளில் டெங்கு நொயாளிகளின் தொகை அதிகரித்துள்ள தாகவும் சுகாதார பிரிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் மோசமாக அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாடுளிலிருந்து இலங்கை வருபவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்!

Police_Checkவெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிராசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு இலங்கைக்கு வருபவர்களின் விபரங்களை, தகவல்களை சேகரிக்க வேண்டிய தேவை பொலிஸாருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு வரும் தமிழ் மக்களை பொலிஸில் பதிவு செய்யுமாறு நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் பத்திரிகையொன்று பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு வந்து விடுதிகள், உறவினர் விடுகளில் தங்கியிருக்கும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்நடமுறை நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழர்களை மீண்டும் பொலிஸ் பதிவுகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தின் 23ஆம் பிரிவின் அடிப்படையில் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் நா.குமரகுரபரன் தெரிவித்துள்ளார்.

கொழம்பிற்குச் செல்லும் தமிழ் மக்கள் விடுதிகளிலோ, உறவினர் வீடுகளிலோ தங்கியிருக்கும் போது அப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் நடைமுறையில் இருந்தது. எனினும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் அப்பதிவு முறை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இது நடைமுறைக்கு வந்து விடுமோ என்கிற அச்சமும, கவலையும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இந்திய அமைச்சர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினர்.

Selvam Adaikalanathan TNA_TELOஇந்தியா விஜயம் செய்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் நேற்று (July 7 2010)  இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தினர். இதன்போது, தமிழ்மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய தீர்வினைப் பெற இந்தியா உதவ வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது படைக்கட்டுமானங்களுக்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதைத் தடுக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. வடபகுதியில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களை வடபகுதியில் குடியேற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என கூட்டமைப்பு இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிப்பற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது, தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வது என்கிற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும்  தாம் கவனத்தில் எடுப்பதாக கூட்டமைப்பிடம் இந்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந்துள்ளதாகவம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம், ஊடான கடல்வழிப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கான  புகையிரதப் பாதை,  காங்கேசன்துறை அபிவிருத்தி முதலான இந்தியாவின் கரிசனைகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒத்துழைக்கும் எனவும் கூட்டமைப்பு இந்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டமைப்பின் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கூட்டமைப்பின் குழுவினர் கடந்த ஞாயிறு (july 04 2010) இந்தியா புறப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

யாழ். உயர்பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

High-Security-Zoneயாழ். குடா நாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ள சில பகுதிகளில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தெல்லிப்பழை, கோப்பாய், மற்றும் யாழ்.உயர் பாதுகாப்புவலயத்தின் மேற்குப் பகுதிகளில் மக்களை மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

High-Security-Zoneஉயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்து பாதகாப்புப் படைஅதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துமாறும், அதன் ஆரம்ப வேலைகளை கவனிக்குமாறும் யாழ். அரசாங்க அதிபருக்கு மீள்குடியேற்ற அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அனுமதியைப் பெற யாழ். அரச அதிபருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related News:

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தாராகுளம் மக்களுக்கு 18 வருடங்களின் பின் குடியமர அனுமதி!

இறுதிக்கட்டப் போரின் போது, பெண்ணின் முள்ளந்தண்டுள் புகுந்த துப்பாக்கிச் சன்னம் ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பெண்ணொருவரின் முள்ளந்தண்டில் ஊடுருவிய துப்பாக்கிச் சன்னம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற போரில் ஒரு துப்பாக்கிச் சன்னம் பெண்ணொருவரின் இடுப்பு முள்ளந்தண்டில் புகுந்து மிகுந்த வேதனையை எற்படுத்தி வந்தது.

கடந்த சனிக்கிழமை (July 03 2010) சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலம் இத்துப்பாக்கிச் சன்னம் அகற்றப்பட்டுள்ளது. நாவற்குழி மறவன்புலவு என்ற இடத்தைச்சேர்ந்த எஸ்.கமலேஸ்வரி (வயத 26) என்ற பெண்ணின் உடலில் இருந்தே இத்துப்பாக்கிச் சன்னம் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது காயப்பட்டு உனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்கள், எறிகணைகளில் துண்டங்கள் என்பன இன்னமும் அகற்றப்படாமலுள்ளமை குறிப்பித்தக்கது.

அச்சுவேலிப் பகுதியில் 25 ஏக்கரில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் முகமாக அச்சுவேலிப் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஐந்து ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை முதலீட்டுச் சபையின் வடபிராந்திய அலுவலகம் மெற்கொண்டுள்ளது. கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் அனுமதியுடன் அச்சவேலியில் 25 எக்கரில் இம்முதலீட்டு ஊக்கவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

திருகோணமலை மொறவேவ பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம்  எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியான இச்சிறுமி சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

அச்சந்தேக நபர் தடுப்பிலிருந்து தப்பிச்சென்று விட்டார் இந்நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றமைக்கு பொலிஸ் அதிகாரிகள் யாருடையதும் உடந்தை இருந்ததா என்பது குறித்து விசேட பொலிஸ் அணி ஒன்று விசாரணை நடத்தி வருகின்றது.

”தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைய வேண்டும்.” எம்.கே.சிவாஜிலிங்கம்

Sivajilingam M K Presidential Candidate“தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தற்போது ஒன்பது கட்சிகள் இணைந்துள்ளன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணத்துக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடும்போதே இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டதன் நோக்கம் தேர்தல்களில் போட்டியிடுவதற்கல்ல. அரசுடன் இணந்திருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து தேர்தலில் நாம் போட்டியிட முடியாது. அமைக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் கே.பி என்ற குமரன் பத்மநாதன், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரையும் இணைப்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். இதற்கு ஏனைய கட்சிகள் இடமளிக்கவில்லை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைய வேண்டும் அப்போது தான் அது சாத்தியமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு ஆரம்பத்தில் தானும், புளொட் சித்தார்த்தனும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால், அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவின் அழைப்பின் பேரில் கடந்த 24ஆம் திகதி சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தற்போது தமிழ்கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்றைய (June 6 2010) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றி அப்பிரதேச மக்களை மீள் குடியேற்றம் செய்யவேண்டும் எனக் கோரியும், காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சனைகளை அறிய தெல்லிப்பழையில் நடமாடும் சேவை.

Gunasegara D E W_Ministerவவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய நடமாடும் சேவை ஒன்று யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் இச்சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர, பிரதி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் இச்சேவையில் கலந்து கொள்ளவுள்ளனர். புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர். உறவினர்கள் தங்கள் பிரச்சினைகளை இதன் பொது முன்வைத்து, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.அரசஅதிபர் கே.கணேஸ் அறிவித்துள்ளார்.