“தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தற்போது ஒன்பது கட்சிகள் இணைந்துள்ளன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணத்துக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடும்போதே இதனைத் தெரிவித்தார்.
“தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டதன் நோக்கம் தேர்தல்களில் போட்டியிடுவதற்கல்ல. அரசுடன் இணந்திருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து தேர்தலில் நாம் போட்டியிட முடியாது. அமைக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் கே.பி என்ற குமரன் பத்மநாதன், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரையும் இணைப்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். இதற்கு ஏனைய கட்சிகள் இடமளிக்கவில்லை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைய வேண்டும் அப்போது தான் அது சாத்தியமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு ஆரம்பத்தில் தானும், புளொட் சித்தார்த்தனும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் கடந்த 24ஆம் திகதி சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தற்போது தமிழ்கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்றைய (June 6 2010) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றி அப்பிரதேச மக்களை மீள் குடியேற்றம் செய்யவேண்டும் எனக் கோரியும், காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவுடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.